Showing posts with label தமிழின் பெருமைகள். Show all posts
Showing posts with label தமிழின் பெருமைகள். Show all posts

Wednesday, March 18, 2009

வான்மீகியின் இயற்பெயர் தெரியுமா உங்களுக்கு?

இந்தியாவில் முதலில் தோன்றிய காப்பியம் "இராமாயணம்". இந்த இராமாயணத்தை வடமொழியில் இயற்றியவர்தான் வான்மீகி என்பது யாவரும் அறிந்ததே.
 
கல்வி, இறைவழிபாடு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய வான்மீகி தவவாழ்க்கை மேற்கொண்டார். தவவாழ்க்கை மேற்கொண்ட வான்மீகி, இருந்த இடம் விட்டு நீங்காமல் நெடுங்காலம் தவம் புரிந்தார். அவ்வாறு தவம் புரிந்ததால், அவர் இருந்த இடத்தில் அவரைச் சுற்றிக் கரையான் புற்று தோன்றி வளர்ந்தது. வளர்ந்து அவரது உடலையே மறைத்துவிட்டதாம்.
 
அவ்வாறு தவம் புரிந்த வான்மீகி, தம் தவத்தை முடித்துக் கொண்டு அக்கரையான் புற்றிலிருந்து வெளியே வந்தார். வடமொழியில் வான்மீகம் என்பது கரையான் புற்றைக் குறிக்குமாம்.
 
கரையான் புற்றிலிருந்து வெளியே வந்த காரணத்தால் அவருக்கு வான்மீகி என்று பெயர் உண்டாயிற்று.
 
இக்காரணப் பெயர் தோன்றி வழங்கி வரவே, அவருடைய இயற்பெயர் அறிய முடியாத அளவிற்கு மறைந்து விட்டது.
 
இயற்பெயர் என்னவென்றே தெரியாமல்போய், காரணப் பெயரே ஒருவருக்கு இயற்பெயரானதை எண்ணி இன்றும் உலகம் வியக்கிறது.
 
 
-செந்துறை முத்துவின் 'காப்பியம் பிறந்த கதை' நூலிலிருந்து.

Monday, March 2, 2009

'ஏ', 'ஓ' 'கே' 'கோ' இந்த எழுத்துக்கள் தமிழுக்கு வந்த கதை

தமிழில் புதுமைக் கலைத்துறையைத் தோற்றுவித்த வீரமாமுனிவர், திருக்காவலூரில் வேதியர்களுக்காக ஒரு கல்லூரி அமைத்தார். அக்கல்லூரியில் தாமே ஆசிரியராக அமர்ந்து இலக்கணம் கற்பித்தார்.
 
வீரமாமுனிவர் திருக்காவலூர்க் கல்லூரியில் இலக்கண ஆசிரியராக இருந்தபோது, தமிழ் இலக்கண நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்தார். தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை உள்ள எல்லா இலக்கண நூல்களையும் நன்கு ஆராய்ந்தார். அதன் விளைவாக "தொன்னூல் விளக்கம்" எனும் அரிய இலக்கண நூல் இயற்றினார்.
 
தொல்காப்பியர் காலத்தில் 'எ'கர, 'ஒ'கர எழுத்துகட்கு மேலே புள்ளி வைத்து எழுதப்பட்டன. அவ்வாறு புள்ளி பெறுவன மெய்யெழுத்துக்களாகும். புள்ளி பெறாமல் அமையும் 'எ'கர 'ஒ'கரங்கள் நெட்டெழுத்துகளாகக் கருதப்பட்டன. இதனால் வேறுபாடு தெரியாது மக்கள் இடருற்றனர். இந்த மருட்சியைப் போக்க, வீரமாமுனிவர் 'எ'கர 'ஒ'கரங்களுக்கு நீண்ட புள்ளியையும், மெய்யெழுத்துகட்குச் சுழித்த புள்ளிகளையும் அமைத்து வேறுபடுத்திக் காட்டினார். இதனால் 'ஏ', 'ஓ' வடிவங்கள் உண்டாயின.
 
அவ்வாறே குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரே மாதிரியாக "கெ' 'கொ' என்று அமைந்த இடத்தையொட்டி குறிலா, நெடிலா என்று அறியமுடியாதவாறு இருந்த இன்னலைப் போக்கி குற்றெழுத்துக் கொம்புகளை மேலே சுழித்து 'கே' 'கோ' எனத் திருத்தியமைத்தவரும் இவரே.
 
'நீட்டல் சுழித்தல் குறில் மெய்க்கிடுபுள்ளி' எனத் தம்முடைய தொன்னூல் விளக்கத்தில் விதியும் வகுத்தார். நிறுத்தப்புள்ளி, முற்றுப்புள்ளி போன்ற குறியீடுகளை உண்டாக்கியவரும் இவரே.
 
தொன்னூல் விளக்கம் என்னும் இவரது இலக்கணநூல், நன்னூலை ஒத்து விளங்குவது. ஆனால், நன்னூல் எழுத்திற்கும், சொல்லிற்கும் மட்டுமே இலக்கணம் கூறுவது. வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும் கூறுவதாகும்.
 
-செந்துறை முத்துவின் 'காப்பியம் பிறந்த கதை' நூலிலிருந்து.

Tuesday, February 24, 2009

அரிசி aRice- ஒரு வேடிக்கையான சொல்லாராய்ச்சி

ஆங்கிலேயன் நம்மையாண்ட காலம்:
(வெள்ளைக்காரன் பேசுகிற எல்லா டயலாக்கையும் அவன் ஸ்டைல்ல படிக்கவும்.)
ஏய்.. குப்சாமி, எல்லா பிரெட் ரோஸ்ட் பண்ணி எடுத்திட்டு வா..
சரிங்க துரை. இதோ பைவ் மினிட்ஸ்ல வந்திடுறேன். ("இந்த காஞ்சிபோன ரொட்டியை எப்படித்தான் மூணுவேளையும் தின்பாங்களோ. இத திங்க கையில கத்தி வேற" இப்படி குப்புசாமி மனசுக்குள்ள நினைச்சுக்கிடுறார்)
குப்சாமி.. உங்க வீட்ல என்ன ஃபூட்?
சோறு துரை.. அரிசிச் சோறு
அர்ஸ் சோர்?? கொஞ்சம் என்க்கும் வேணும். நா சாப்டு பாக்குது. சாப்பிட்டு பார்க்கிறார் வெள்ளைக்கர துரை.
வாவ்.. சூப்பர் குப்சாமி. எப்டி பண்ணுவீங்க?
அரிசிய வேகவைக்கனும் துரை.
வேகவைக்கனும் னா?
ம்..ம்.. பாயில்.. பாயில் பண்ணனும்.
ஒகே.. டெய்லி குப்சாமி என்கு அர்ஸ் கொண்டு வருது. ஒகே?
இப்படியாக, வெள்ளைக்காரன் உச்சரித்த "அரிசி" என்ற வார்த்தை, காலப்போக்கில் மாற்றமடைந்து இன்று "ரைஸ்" என்று வந்துள்ளது. அரிசி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் அப்படியே aRICE என்று எழுதியபின், எப்பொழுது முதல் எழுத்து "a" மறைந்ததோ தெரியவில்லை.
தகவல்: பள்ளியில் தமிழாசிரியர் சொல்லக் கேட்டது.

Sunday, February 15, 2009

பத்துக்கு ஒரு சுழியம். மகாயுகத்திற்கு எத்தனை சுழியம்?

1 = ஒன்று ONDRU - one
10 = பத்து PATTU - ten
100 = நூறு NOORU - hundred
1000 = ஆயிரம் AAYIRAM - thousand
10000 = பத்தாயிரம் PATTAYIRAM - ten thousand
100000 = நூறாயிரம் NOORAYIRAM - hundred thousand
1000000 = பத்து நூறாயிரம் PATTU NOORAYIRAM - one million
10000000 = கோடி KODI - ten million
100000000 = அற்புதம் ARPUTHAM - hundred million
1000000000 = நிகற்புதம் NIGARPUTAM - one billion
10000000000 = கும்பம் KUMBAM - ten billion
100000000000 = கணம் KANAM - hundred billion
1000000000000 = கற்பம் KARPAM -one trillion
10000000000000 = நிகற்பம் NIKARPAM - ten trillion
100000000000000 = பதுமம் PATHUMAM - hundred trillion
1000000000000000 = சங்கம் SANGGAM - one zillion
10000000000000000 = வெள்ளம் VELLAM - ten zillion
100000000000000000 = அந்நியம் ANNIYAM - hundred zillion
100000000000000000000 = ARTTAM - வேறு மொழியில்?
1000000000000000000000 = PARARTTAM - வேறு மொழியில்?10000000000000000000000 = பூரியம் POORIYAM - வேறு மொழியில்?100000000000000000000000 = முக்கோடி MUKKODI - வேறு மொழியில்?
1000000000000000000000000 = மகாயுகம் MAHAYUGAM - வேறு மொழியில்?

தகவல்: மின்னஞ்சலில் வந்தவை

Friday, February 13, 2009

தமிழரின் விருந்தோம்பல் - அன்றும், இன்றும்

தமிழர்களின் பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்று. விருந்து என்றால் புதுமை, புதியவர் என்று பொருள். விருந்தே புதுமை என்பார் தொல்காப்பியர். வீட்டிற்கு வரும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் விருந்தினர் என்கிறோம். ஆனால் பண்டைக்காலத்தில் வீடு தேடி வரும், முன் அறியாதவர்களையே விருந்தினர் என்றனர்.
 
போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில், கால்நடையாகத்தான் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. அப்படிச் செல்லும்போது உணவிற்கும், தங்குவதற்கும் செல்லும் வழியில் இருக்கும் ஊர்களையே நம்பவேண்டியிருந்தது. ஆகவே புதிதாக வருவோர்க்கு பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழக இல்லங்களில் உருவாயிற்று. இப்படி வருவோர்கள் இளைப்பாறுவதற்கும், இரவு நேரங்களில் தங்குவதற்கும்தான் வீடுகளில் திண்னை வைத்துக் கட்டினார்கள்.
 
இன்றும் கிராமங்களில் செளமிட்டாய், ஐஸ், கொய்யாபழம், வளையல், உப்பு போன்றவைகளை விற்கும் வியாபாரிகள் வருவார்கள். அவர்கள் இளைப்பார திண்ணையில் இடமளிப்பதோடு, தண்ணீரும் தந்து உபசரிப்பார்கள். ஆனால் நகரங்களில் வீடு கட்டும்போது, தன்னுடைய இடத்தையும் தாண்டி, பக்கத்தில் ஒரு அடி, இரண்டு அடி என்று தள்ளி சுவர் எழுப்பும் நிலையில் இருக்கும்போது, திண்ணைக்கு எங்கே போவது.
 
விருந்தோம்பல் பண்பினை கம்பர், இராமனைப் பிரிந்து அசோகவனத்தில் இருக்கும் சீதையின் வாயிலாகக் கூறுவார்.
 
"அருந்து மெல்லடகு ஆரிட அருந்து மென்று அழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்
மருந்தும் உண்டு கொல் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும்
இருந்த மாநிலம் செல்லரித்திடவு மாண்டெழாதாள்"   (கம்பராமாயனம்.காட்சிப்படலம்: 15)
 
என்ற பாடல் விருந்தினர்வரின் தானில்லாது இராமன் என்ன செய்வானோ என்று எண்ணிச் சீதை வருந்திய நிலையைப் புலப்படுத்துகிறது.
 
எங்கள் வீட்டில் எப்போதும் சமைக்கும்போது, எல்லோருக்கும் போக, அதிகமாக ஒரு நபர் சாப்பிடும் அளவிற்கு சமைப்பார்கள். பாட்டியிடம் ஏன் என்று கேட்டபோதுதான், திடீரென வீட்டிற்கு ஏதேனும் விருந்தினர் வந்துவிட்டால் அவர்களுக்கு உணவளிக்கவே இந்த உணவு என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் இன்று நாங்கள் இந்த நேரத்திற்கு உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்று முன்கூட்டியே தகவல் சொல்லாமல் சென்றாலோ, இல்லை வீட்டுப் பெண்கள் தொலைக்காட்சியில் சீரியல்கள் பார்க்கும் நேரத்தில் சென்றாலோ, சென்றவர் பாடு திண்டாட்டம்தான்.
 
நமது முன்னோர்கள் காலத்தில் கணவன் மனைவியிடையே எழும் ஊடலைத் தீர்க்கும் மருந்தாகவே விருந்தினர் அமைவர் என்று சொல்லப்பட்டுள்ளது. விருந்தினர் வந்தால், இருவரும் ஊடலை மறந்து கவனிப்பராம். ஆதலால் தன் மனைவியின் ஊடலைத் தீர்க்க யாரேனும் விருந்தினர் வரமாட்டார்களா என்று கணவன் ஏங்குவதாக நற்றினை கூறுகிறது.
 
விருந்தோம்பலுக்குத் தனி அதிகாரமே தந்த வள்ளுவர், முகர்ந்து பார்த்தாலே வாடிவிடக் கூடிய தன்மை படைத்தவர் விருந்தினர் என்றும், அவர் முகம் வாடாமல் விருந்தோம்பல் செய்யவேண்டும் என்பதை,
 
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து"
 
என்பார்.
 
தொன்றுதொட்டு விளங்கும் விருந்தோம்பலை நாம் வளர்ப்போம்! நமது குழந்தைகளுக்கும் கற்றுத் தருவோமாக!

Thursday, February 12, 2009

பதினாறு பேறுகள் எவையெவை?

"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என் வாழ்த்துவது நம் மரபு. இதற்கு பதினாறு மக்கட் செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ்க என பொருள் கொள்வோரும் உண்டு. பதினாறு பிள்ளைகளைப் பெற்ற பின்பு எப்படி பெருவாழ்வு வாழ்வது. அரசன் கூட ஆண்டி ஆகிவிடுவான்.
 
ஒருவன் வாழ்வில் பெறவேண்டிய பதினாறு செல்வங்கள் எவையென்பதை,
 
"துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே"
 
என்ற காளமேகப்புலவரின் பாடல் நமக்குப் புலப்படுத்துகிறது.
 
புகழ், கல்வி, வெற்றி, மக்கட்பேறு, துணிவு, செல்வம், மிகுந்த தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய சிறப்புக்கள், அறவுணர்வுடைய குடிப்பிறப்பு, நோயற்ற வாழ்வு, நீண்ட வயது ஆகியவைகளே பதினாறு பேறுகள் ஆகும். இருந்தாலும் இவற்றினுள் சிறந்த பேறாகக் கருதப்படுவது மக்கட்பேறாகும்.
எனவேதான் வள்ளுவரும்,
 
"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற"
 
என்பார்.

Wednesday, February 11, 2009

கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் உயிர் எழுத்துக்கள் எப்படி இருந்தன என்று பார்ப்போமா?



நன்றி: திருமலை நாயக்கர் மகாலில் உள்ள இந்த அரிய படத்தை மின்னஞ்சலில் அனுப்பியவருக்கு

Monday, February 9, 2009

தமிழின் சிறப்பு - பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem)


இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே. - போதையனார்

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.

- தமிழ்மண வாசகர்களுக்காக இது மறுபதிப்பு செய்யப்படுகிறது.

Wednesday, June 18, 2008

பூம்புகாரில் வரலாற்றுப் புதையல்

பூமிக்குள் புதையல் கிடைக்கலாம். ஆனால் ஒரு மாநகரமே வரலாற்றுப் புதையலாய் கடலோரத்தில் புதைந்து கிடக்கிறது.
 
பாடிய பட்டினப்பாலை இருக்கிறது. பாடப்பட்ட பட்டினம் கடலுக்குள் பாலையாய்க் கிடக்கிறது.
 
புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும்கூட.

தமிழ் வளர்ச்சித் துறை சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள ஊர்களைப் பட்டியலிட்டு, அவை தற்போது எந்தெந்த மாவட்டங்களில் எப்படி இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்த "ஊரும் சீரும்" எனும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

 
ஊரும் சீரும் திட்டத்தில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது பூம்புகார். பூம்புகாரை ஆவணப்படமாக்கும் திட்டச் செயற்பாட்டின் போதுதான் (இப்பணியில் சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர் திரு.சந்துரு, இயக்குநர் திரு.சீனிவாசன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்) பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழி கிடைத்தது.
 
பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி:
 
முதுமக்கள் தாழி - இறந்தவர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் வைத்து பூமிக்குள் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய சால் ஆகும். புறநானூறு "கலம் செய்கோவே" என்று முதுமக்கள் தாழி பற்றிய குறிப்பைத் தருகிறது.
 
தமிழ் இலக்கியங்களில் மட்டுமன்றி, பிராகிருத மொழியில் உள்ள புத்த ஜாதகக் கதைகளும் புத்தவம்சகதாவும், தாலமியின் பூகோளநூல் போன்ற வெளிநாட்டார் நூல்களும் பூம்புகாரைக் குறிப்பிடுகின்றன.
  • செம்பியன்,
  • மனுநீதி சோழன்,
  • கரிகாலன்,
  • கிள்ளிவளவன்
காலங்களில் பூம்புகார் துறைமுகத் தலைநகராக இருந்திருக்கிறது. பத்துப்பாட்டில் ஒன்றாகிய பட்டினப்பாலை இவ்வூரைப்பற்றி பாடுகிறது.
  • மகதம்,
  • அவந்தி,
  • மராட்டா நாட்டுக்

கைவினைக் கலைஞர்களின் தொழிற்கூடமாகவும் பூம்புகார் இருந்திருக்கிறது.

இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் பூம்புகாரில் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஆகியவை ஆய்வு மேற்கொண்டு சங்ககாலப்
  • படகுத்துறை,
  • புத்தர்விகாரை,
  • உறைகிணறுகள்,
  • அரிய மணிகள்,
  • கட்டடங்கள்,
  • காசுகள்

ஆகியவற்றைக் கண்டுபிடித்துத் தந்துள்ளன.

தமிழக முதல்வர் வழங்கிய ஆதரவைக்கொண்டு ஏற்கெனவே கோவா ஆழ்கடல் அகழாய்வு மையம் பூம்புகாரில் நடத்திய ஆய்வில் கடலுக்குள்ளிருக்கும் கறுப்பு,சிவப்புப் பானை ஓடுகள் கட்டடப் பகுதிகள், நகர்ப் பகுதிகளைக் கண்டறிந்துள்ளது. ஆனால் தற்போது கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, தனிச் சிறப்பிற்கு உரியதாகும்.

பெரிய தாழியில் பத்துக்கும் மேற்ப்பட்ட சிறுசிறு கலயங்கள் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்த முதுமக்கள் தாழிகளைவிடப் பெரிய அளவிலும் உடையாத கலயங்களும் தற்போது கிடைத்துள்ளன.

கறுப்பு சிவப்பு கலயத்தில் எழுத்துப் பொறிப்புடன் கிடைத்துள்ள முதல் கலயம் இதுதான். குறியீடுகளோடு பூம்புகாரில் இதுவரை கறுப்பு சிவப்புக் கலயம் ஏதும் கிடைக்கவில்லை. இதில் கழுத்துப் பகுதியில் கோட்டிற்குமேலே பாய்மரப் படகும் மீனும் பொறிப்புகளாக உள்ளன. இது 21 செ.மீ உயரமும் 10 செ.மீ. வாய்ப்பகுதி அகலமும் கொண்டுள்ளது.

பூம்புகாருக்கு அருகில் வானகிரி கோசக்குளத்தில்,1997-98-ல் எழுத்து பொறிக்கப்பட்டிருந்த பானை ஓடு கிடைத்துள்ளது. ஆனால் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை இன்றுவரை ஆய்வாளர்கள் ஏற்கும் வகையில் உறுதிப்படுத்த முடியவில்லை. செம்பியன் கண்டியூர் அய்யனார் கோயிலில் கிடைத்துள்ள கறுப்புநிற பானையின் கழுத்துப் பகுதியில் இரண்டு அம்புக்குறியீடுகள் மட்டும் உள்ளன. இதே ஊரில் கிடைத்த கல்கத்தி அல்லது கல்கோடாரியில் சிந்துவெளிக் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கல்கத்தியின் காலம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது என்று தொல்லியல் அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.

 
தற்போது கிடைத்துள்ள ஆதாரம் பலவகைகளில் குறிப்பிடத்தக்கது. கறுப்பு சிவப்பு நிறம் என்பது கி.மு.5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைக் காட்டுகிறது. கறுப்பு சிவப்பு நிறப்பானை சமதரையில் கிடைக்காமல் முதுமக்கள் தாழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழியின் காலம் பெருங்கற்காலம். பெருங்கற்காலம் கி.மு.1000-லிருந்து கி.மு.3000 வரையிலான காலத்தைச் சேர்ந்தது. மேலும் உறை கிணறு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாலை, "உறைகிணற்றுப் புறசேரி" (வரி 27)யைப் பற்றி குறிப்பிடுகிறது.
 
கிணறுகள் பலவகை.
  • கடலுக்கு அருகில் அமைக்கப்பட்ட கிணறு ஆழிக்கிணறு;
  • ஒழுங்கமைவு இல்லாத கிணறு கூவம்;
  • ஆற்றுமணலில் தோண்டுவது தொடுகிணறு;
  • ஏரியின் நடுவில் உள்ள கிணறு பிள்ளைக் கிணறு;
  • பூட்டை உருளை கொண்டு கமலை நீர் பாய்ச்சத் தோண்டிய கிணறு பூட்டைக் கிணறு.

இவ்வரிசையில் மேலும் ஒரு கிணறு உறை கிணறு.

பூம்புகாரில் கடலோரத்தில் வானகிரியில் உறைகிணறு ஒன்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கடற்கரை மணலில் குடிநீருக்காக தோண்டப்படுகின்ற கிணறுகள் மண் சரிந்து தூர்ந்து போகாமல் இருக்க கட்ட மண் வளையங்கள் கொண்டு உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொற்கை, நந்தன் மேடு, அரிக்க மேடு ஆகிய பகுதிகளில் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூம்புகாரின் கடற்கரையில் விழா நடைபெற்றபோது மக்கள் கூடியிருந்த செய்தியை உறைகிணறு உறுதிப்படுத்துகிறது.

 
குறியீடுகளோடு கறுப்பு சிவப்பு நிறக் கலயம் முதுமக்கள் தாழியிலிருந்து கிடைத்திருப்பதும் கடற்கரையில் விழாக் காலங்களில் மக்களின் தாகத்தைத் தீர்த்த உறைகிணறு வெளிப்பட்டிருப்பதும் வரலாற்றாய்விற்கும் தமிழியல் ஆய்விற்கும் புதிய வெளிச்சத்தைத் தரக்கூடும்.
 
நன்றி: தினமணி

Wednesday, April 23, 2008

ஒருத்தரைப் புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா? ஔவையார் பாடல் விளக்கம் தருகிறது.

ஒருத்தரைப் புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா என்ன? கட்டாயம் இருக்கிறது என்கிறார் ஔவையார்.

நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும்
அப்படியே வாச மனையாளைப் பஞ்சனையில்
மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்! - ஔவையார்

விளக்கம் :

நண்பனைப் புகழ வேண்டுமானால் அவனைக் காணாதபோது மனமாரப் புகழ வேண்டுமாம்;
ஆசிரியர் என்றால் அவரை நேரிலும், மறைவிலும் எப்போதும் துதிக்கலாம்;
மனைவியைப் பஞ்சனையில் புகழ வேண்டுமாம்;
பெற்ற பிள்ளைகளைப் புகழ்வது மனதுக்குள் தானாம்;
வேலைக்காரர்களை, அவர்களது வேலைகளை முடித்த பிறகுதான் புகழவேண்டுமாம்.

Wednesday, March 19, 2008

பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem)

இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.
- போதையனார்
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.