Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, May 18, 2009

அத்வானி தற்கொலை?


மக்கள் மன்றத்தில் வேட்பாளராக இல்லாமல், கொல்லைப்புறமாக வந்தவர் என்றும், இந்தியாவின் மிகப் பலவீனமான பிரதமர் என்றும் விமர்சிக்கப்பட்ட டாக்டர் மன்மோகன்சிங்கை, அவர் மீதான இப்படிப்பட்ட விமர்சனங்களையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மீண்டும் அரியணையில் அமர்த்தியிருக்கிறார்கள் இந்திய மக்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து பல கட்சிகள் பிரிந்து வந்து மூன்றாவது அணி, நான்காவது அணி என்று பல அணிகளாய் 15வது மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டபோது, தொங்கு பாராளுமன்றம்தான் அமையப்போகிறது என்றும், மூன்றாவது அணியோ, நான்காவது அணியோ ஆதரவளிக்காமல் யாரும் ஆட்சியைக் கைப்பற்றமுடியாது என்றும், ஒருவேளை மூன்றாவது அணியே ஆட்சியமைக்கக்கூடிய நிலைமையும் வந்துவிடலாம் என்றும், இப்படி பலவாறு பலராலும் யூகிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஏறக்குறைய தனிப்பெரும்பான்மையாகவே காங்கிரஸ் கூட்டணியானது ஆட்சியமைக்கப் போகிறது. இப்படிப்பட்ட மிகப்பெரிய வெற்றியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தேடித்தந்த பெருமை பெரும்பாலும் மூன்றாவது மற்றும் நான்காவது அணிக்கே சேரும்.

மேலும் படிக்க

உழவன்

Tuesday, May 12, 2009

Good touch Bad touch

கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டைமாடி ஞாயிற்றுக் கிழமையின் (மே 10' 2009) ஞாயிறு மறையும் வேளையில் பதிவர்களால் நிறைந்திருந்தது. மாலை 4 மணியிலிருந்தே ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க, டாக்டர் ருத்ரன் அவர்களும், டாக்டர் ஷாலினி அவர்களும் வந்த உடன் கலந்துரையாடல் துவங்கும்போது மணி ஐந்தைத் தாண்டியிருந்தது.

ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள Public parts மற்றும் Private parts பற்றிய விபரங்களோடு தன் உரையாடலைத் துவங்கினார் டாக்டர் ஷாலினி. இவரது நீண்ட தெளிவான உரையாடலுக்குப் பின்னர் டாக்டர் ருத்ரன் அவர்களும் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தினார். கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நடைபெற்ற கலந்துரையாடலை டோண்டு ராகவன் சார் அவர்கள் மிக விரிவாகப் பதிவிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாது இன்னும் பல விஷயங்களையும் பெற்றோர்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது என் எண்ணம். முதலில் உங்கள் பிள்ளைகளை "பழம்" மாதிரி வளரவிடாதீர்கள். எம்புள்ள ரொம்ப சமத்து; வீடு விட்டா பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் விட்டா வீடு. எந்த பசங்களோடும் சேரமாட்டான். அவன் பாட்டுக்கு சிவனேனு அவன் வேலையை மட்டும் பார்ப்பான். இப்படி உங்கள் குழந்தைகள் இருக்க ஆரம்பித்துவிட்டால், அவர்களுக்கு மற்ற நண்பர்களிடமிருந்தும், சமூகத்திடமிருந்தும் எதையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். பெற்றோர்களால் சில பாலியல் சம்பந்தமான விஷயங்களைச் சொல்லித்தருவதற்கு சற்று சங்கோஜமாக இருப்பதனால், பலவற்றை நாம் சொல்லித்தருவதில்லை. இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்குச் சொல்லித்தருபவைகள் இந்த சமூகம்தான். அதற்காக கெட்ட நண்பர்களின் சேர்க்கையினால் கெட்டுப்போகச் சொல்லவில்லை. நாங்களெல்லாம் மேல்நிலைக் கல்வி பயின்ற காலத்தில், இந்த வயதில் பாலியல் சம்பந்தமாக எவைகளெல்லாம் தெரிந்திருக்கவேண்டுமோ, அவைகளையெல்லாம் எங்களது நண்பர்களின் அண்ணன்மார்கள் அதாவது சீனியர்கள் விளையாட்டுப்போக்கில் எங்களுக்குச் சொல்லுவார்கள். ஏய் தம்பி / ஏய் மாப்ள.. இதெல்லாம் தெரிஞ்சிக்கிடனும்டா.. இதெல்லாம் அடிப்படை விஷயங்கள்.. இப்படி பல விஷயங்களைச் சொல்லித்தந்ததுண்டு.

இன்றைய சூழலில் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களே பெரும்பாலான, நாம் வெளிப்படையாக யாரிடமும் கேட்டுத்தெரிந்துகொள்ளத் தயங்குகிற பல அந்தரங்க விஷயங்களைத் தெளிவாக, அதற்கான நிபுணர்களைக் கொண்டே நமக்குத் தெளிவுபடுத்துகிறது. ஆனால் சரியான ஊடகத்தைத் தேர்ந்தெடுப்பது நம் கடமை. அதைவிட்டுவிட்டு டாக்டர் ஷாலினி சொன்னதுபோல, திருச்சி, சேலம், திண்டுக்கல் என ஊர் ஊராகச் சென்று லேகியம் வாங்க அலைந்துவிடக்கூடாது. நம் பிள்ளைகள் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான பருவத்தில்தான் இருக்கிறார்கள் எனில், அவர்களுக்கு இந்நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். அதற்கான சூழலை நாம் வீட்டில் ஏற்படுத்தித் தரவேண்டும். அப்போதுதான் நாம் சொல்லத் தயங்குகிற பல விஷயங்களை அவர்களால் தெரிந்துகொள்ளமுடியும்.

சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒரு டாக்டர், இன்றைய இளைஞர்கள், இளைஞிகளில் பெரும்பான்மையோருக்கு, தங்களின் அந்தரங்க உறுப்பை தினமும் குளிக்கும்போது, சோப்பினால் சுத்தப்படுத்தவேண்டும் என்பது கூடத் தெரியவில்லை. இதுபோன்ற அறிவுரைகளைக் கூறும்போதுகூட, அவர்கள் ஒருவித சங்கோஜத்துடன் தான் கேட்கிறார்கள். ஆண்கள் சரியாக அப்பகுதியைச் சுத்தப்படுத்தவில்லையெனில், அழுக்கு சேர்ந்து, நாளடைவில் கேன்சர் கூட வர வாய்ப்பிருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் இதுபோன்ற தகவல்களை நண்பர்களோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள் எனவும் கூறினார். இதிலிருந்தே நாம் எவ்வாறு குழந்தைகளை வளர்த்து வந்திருக்கிறோம் என்பது புரிந்திவிடும். அந்தப் பகுதிகளைத் தொடுவதுகூட பாவம் என்ற எண்ணத்தோடு வளர்ந்துவிட்டவர்களுக்கு யார் சொல்லிக்கொடுப்பது? புத்தகங்களும், மீடியாக்களும், நண்பர்களும் தான். ஒரு பெண் எவ்வாறு கருத்தரிக்கிறாள் என்பது கூடத் தெரியாமல்தான், இன்றும் பல பெண்கள் கருத்தரித்து குழந்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பாலியல் உறவை குழந்தை பார்க்கநேர்ந்தால், அதை ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணுகிற கண்ணோட்டத்தில்தான் குழந்தைகளை வளர்க்கவேண்டும். சாலைகளில் எல்லோரும் பார்க்கும் வண்ணம் நாய்கள் கூடதான் உறவு வைத்துக்கொள்ளுகின்றன. இவைகளையும்தான் குழந்தைகள் பார்க்க நேரிடுகிறது. இப்படிப்பட்ட மனநிலையில் அவர்கள் இருந்தால்தான் எந்த வித எல்லை மீறலுக்கும் ஆட்படாமல் அவர்கள் இருப்பார்கள் எனவும் ஷாலினி அவர்கள் கூறினார். இருந்த போதும், பக்கத்து வீட்டுக்காரன் முன்னால் நாம் எதையெதையெல்லாம் செய்யமாட்டோமோ, அதையெல்லாம் குழந்தையின் முன்னும் செய்யக் கூடாது என டாக்டர் ருத்ரன் அவர்கள் கூறினார்.

எனவே, குழந்தைகளை நல்ல நண்பர்களோடும் சமூகத்தோடும் பழகவிடுவோம்; பாலியல் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கும் அனுமதியளிப்போம். குழந்தையின் வயதிற்கேற்றவாறு பெற்றோர்கள் மட்டுமல்லாது அண்ணன், மாமன், நண்பன் இப்படி யாராக இருந்தாலும், பாலியல் சம்பந்தமான ஒரு தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்த முயன்றால், பாலியல் சம்பந்தமான குற்றங்கள் பெரும்பாலும் குறையவே வாய்ப்புள்ளது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும், டாக்டர் ஷாலினி அவர்களுக்கும், என்னை இன்முகத்தோடு வரவேற்று, அவர்களாகவே அறிமுகம் செய்து நன்கு பேசிய கார்க்கி, நர்சிம், அதிஷா, லக்கிலுக், முரளிகண்ணன், பத்ரி, டோண்டு ராகவன் சார் அனைவருக்கும் மிக்க நன்றி! அதுமட்டுமல்லாது தான் எழுதிய சில புத்தகங்களை பலருக்கும் கொடுத்துதவிய பத்ரி அவர்களுக்கு கூடுதல் நன்றி!

அன்புடன்
உழவன்
என் உழவனின் உளறல்கள் வலைப்பதிவுக்கும் வருகை தந்தால் மகிழ்வேன்.

Tuesday, April 28, 2009

நேகா பாசினின் நிர்வாணப் படம்

ஆடையில்லாமல் ஆபாசமாய்க் காட்சியளிக்கும் ஆண்/பெண் படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் பத்திரிக்கைகளின் பக்கங்களில், கருப்பு வண்ணம் பூசி ஆபாசப் பகுதிகளை மறைத்திருப்பார்கள். இது பொது நலன் கருதியா, இல்லை இப்படித்தான் இருக்கவேண்டுமென சட்டமே இருக்கிறதா என தெரியவில்லை.

ஆடையணிவதில் யாருக்கும் சட்டப்படி எந்த வரைமுறையும் கிடையாது. முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், நடிகை ஸ்ரேயா முகம் சுழிக்கக் கூடிய வகையில் ஆடையணிந்து வந்ததால், அவரை மற்றவர்கள் கண்டிக்கும் நிலை உருவாகி, பின்னர் கடிதம் மூலம் முதலமைச்சரிடம் மன்னிப்பும் கேட்டார் என்ற செய்தியையும் நாம் அறிந்துள்ளோம்.

ஆடையின் வடிவமைப்புகள் தனிப்பட்ட மனிதனின் உரிமை என்கிற காரணத்தினால், பெரும் நகரங்களில் வசிக்கும் சில மேனாமினிக்கி குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் படு கவர்ச்சியாக ஆடையணிவதைப் பார்க்க முடிகிறது. இது சரியா தவறா என்று சொல்வது இப்பதிவின் நோக்கமல்ல. அது அவரவர் விருப்பம். ஆனால் உடம்பின் சில பாகங்களில், ஆபாசமாக நீங்கள் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்கள், இயல்பாகச் செல்வோரின் கண்களில்கூட படுமளவிற்கு உங்களின் ஆடையமைப்பு இருப்பின், அதைக் கண்டிக்கும் பொறுப்பு எல்லோருக்குமே உண்டு எனலாம்.



சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய விழாவில் கலந்து கொண்ட பாடகி நேகா பாசின், தன்னுடைய கையிலும், காலிலும் வரைந்திருந்த கவர்ச்சிகரமான பெண்ணின் ஓவியங்கள் எல்லோர் கண்களிலும் படும்படியாக ஆடையணிந்திருக்கிறார். உடம்பிலுள்ள ஆபாச ஓவியங்கள் தெரியுமளவிற்கு வீட்டினுள் ஆடையணிந்து கொள்ளலாம். வீட்டைவிட்டு வெளியே வந்தால், இப்படிப்பட்ட ஆபாச ஓவியங்கள் வெளியே தெரியாத அளவிற்கு ஆடையணிந்துதான் வரவேண்டும். இல்லையேல் அப்படிப்பட்ட ஓவியங்களை அழித்துவிட்டு வாருங்கள்.

எல்லோரும் பார்க்கும் படியாக நிர்வாணப் படங்களை கையிலே தாங்கியவாறு பொது இடங்களில் நிற்பது சரியான செயலா? காவல்துறை நடவடிக்கை எடுக்குமல்லவா! அதுபோல்தானே இதுவும். சம்பந்தப்பட்ட விழாக் குழுவினர் பாடகி நேகா பாசினைக் கண்டித்தார்களா இல்லையா எனத் தெரியவில்லை.

சமூகப் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். அதிலும் பிரபலங்களுக்கு இன்னும் கூடுதலாகவே இருக்க வேண்டும். சராசரி பொதுமக்களும் எப்போது கேள்வி கேட்கிறோமோ அப்போதுதான், தனக்கே இது தவறு என்று தெரியாமல் இருப்பவர்களுக்குகூட தெரியவரும். நேகா பாசின் இதைச் தெரிந்து செய்தாரோ? இல்லை தெரியாமல் செய்தாரோ? சம்பந்தப்பட்டவர்கள் அவருக்கு எடுத்துரைப்பீராக!

நன்றி: தினத்தந்தி

உழவன்

Wednesday, March 25, 2009

இப்படியும் ஒரு ஆட்டோவா?

மும்பை பந்ராவில் உள்ள ஒரு ஆட்டோவின் போட்டோவானது மின்னஞ்சலில் வந்தது. அதனைப் பார்த்தபோது ஆச்சரியமாகவும் இருந்தது. அதேசமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பயணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம்; அதற்கான கூலியைப் பெறுகிறோம் என்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளைக் கவருவதற்காக தன் ஆட்டோவில் எப்படியெல்லாம் வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

படம் 1
"ஊனமுற்றோருக்கு 25% தள்ளுபடி" ஆஹா.. என்ன ஒரு பொது நலம். இன்னமும் நாட்டில் நல்லோர்கள் உள்ளார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்.


படம் 2

தொலைக்காட்சிப் பெட்டி, அதற்குக் கீழே கை/முகம் துடைக்கும் தாள்கள், இடது பக்கம் நாட்காட்டி, பேனா மற்றும் பயணியின் இருக்கையை நோக்கி ஒரு மின் விசிறி


படம் 3
இடது பக்கம் முதலுதவிப் பெட்டியும், வலது பக்கம் செய்தித் தாள்கள் வைக்க ஒரு பெட்டியும் உள்ளது. இதில் ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி மொழி செய்தித் தாள்கள் உள்ளனவாம்.

சென்னை ஆட்டோக்காரர்களுக்கு இந்த செய்தியை நாம் எப்படி கொண்டுபோய் சேர்க்கப்போகிறோமோ?

Tuesday, March 24, 2009

இது விளம்பரமல்ல!

தொலைக்காட்சியில் நாம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகள் எத்தனையோ இருப்பதுபோல், பல விளம்பரங்களும் நம்மைக் கவரத் தவறுவதில்லை.
 
ஒரு ரூபாயில் தயாரிக்கப்படும் குளிர்பானத்தை பத்து ரூபாய்க்கு மக்களை வாங்க வைப்பதும் இந்த விளம்பரங்கள்தான். பத்து ரூபாய் க்ரீமை வாங்கி ஒரு வாரம் பூசினாலே, உங்கள் சருமம் கலராகிவிடும் அது எருமை மாடாக இருந்தாலும் சரி என்கிற அளவிற்கு மக்களுக்கு நம்பகத்தன்மையை வரவழைக்கும் மந்திரமும் இந்த விளம்பரங்களில் உள்ளது.
 
எதோ ஒரு பானத்தை குழந்தை குடித்தால், அவன் அப்துல்கலாம் ஆகிவிடுவானாம். அட ஆண்டவா !
 
முன்னனி நடிகர் நடிகையர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பல கோடிகளைக் கொடுத்து விளம்பரங்கள் எடுக்கவே எல்லா நிறுவனங்களும் முன் வருகின்றன. அவர்களுக்குக் கொடுக்கப்படும் கோடிகளும், உற்பத்திப் பொருளின் விலையில் சேருவதால், பொருளின் விலை பன்மடங்கு உயர்ந்தும் விடுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் விளம்பரங்கள் இல்லாத பொருள்களை வாங்க நாம் முன்வருவதில்லை. இப்படி வியாபார நோக்கத்திற்காகத் தயாரிக்கப்படும் விளம்பரங்களுக்கு நடுவே, சமீபத்தில் ஒளிபரப்பாகும் சில விளம்பரங்கள் சமூகத்தின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கக் கூடியவைகளாக உள்ளன.
 
எதிர்காலத்தில் எரிபொருளின் தேவையை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று எண்ணும் வேளையில், சிக்னல்களில் வாகனங்களை சுவிட்ச் ஆஃப் செய்வதாலும், அதிவேகமாகச் செல்லாமல் மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்குவதாலும் 20% எரிபொருளைச் சேமிக்கலாம் என்ற விளம்பரம் எல்லோரையும் சற்று சிந்திக்கவைத்துள்ளது. இதே கருத்தை வலியுறுத்தும் மற்றொரு விளம்பரம், எதிர்காலத்தில் நான் சைக்கிள் கடை வைக்கப்போகிறேன் என்று ஒரு குழந்தை தன் தந்தையிடம் சொல்லும் விளம்பரமும் அட்டகாசம்.
 
இதுபோன்றே சமையல் எரிவாயுவின் சேமிப்பை வலியுறுத்தும் மற்றொரு விளம்பரமும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரஷர் குக்கர் பயன்படுத்துவதாலும், பாத்திரங்களை மூடிவைத்து சமைப்பதாலும் எரிவாயு சிக்கனமாகிறது என்பதை இந்த விளம்பரங்கள் சொல்லும்போது, எல்லோருக்கும் அவ்வாறே சமைக்கவேண்டும் என்கிற எண்ணம் தானாகவே வரவாய்ப்புள்ளது.
 
எப்போதுமே கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் திருநங்கைகளையும் இந்த சமூகம் அங்கீகரிக்கவேண்டும். அவர்களையும் சகமனிதர்களாகப் பாவித்து அவர்களின் திறமைகளுக்கேற்ப வேலைவாய்ப்பும் அளிக்கப்படவேண்டும்; அவர்களுக்கும் வீடு வாடகைக்கு கொடுக்கப்படவேண்டும் என்பதைக்கூறும் விளம்பரமும் சமூகத்திற்காக எடுக்கப்பட்டதேயாகும்.
 
ஐம்பது கோடி, நூறு கோடி என்று பெரும்பொருள் செலவில் படமெடுத்தாலும், அதில் வெறும் ஒரு முழத்துணியை மட்டுமே கொடுத்து, சதை நாயகிகளை சாரி.. கதை நாயகிகளை ஆடவைக்கும் படம், தமிழில் பெயர் இருந்தால் அதற்கு வரிவிலக்கு அளிக்கும் அரசாங்கம், இதுபோன்ற பொதுநல விளம்பரங்களுக்கும் பல உதவிகளைச் செய்து ஊக்கப்படுத்தவேண்டும்.
 
இப்படி பொதுநல நோக்கிற்காக வெளியிடப்படுபவைகள் விளம்பரங்கள் அல்ல; அவைகள் பாடங்களே! இவைகள் அதிக அளவில் வரவேண்டும். அத்தனையும், அதற்கான நோக்கத்தில் வெற்றி பெறவேண்டும். அதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்போமாக!
 
 
உழவன்
 

Tuesday, March 3, 2009

பாராளுமன்ற தேர்தல்: ஆன்லைனில் வாக்கு?

ஒவ்வொரு வாக்காளரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனும், அரசில் தலைவர்களும் சொல்வது வழக்கம். தொடர்ந்து வாக்களிக்காமல் இருப்பவர்களின் ரேஷன் கார்டு பறிக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல உரிமைகளைப் பறிக்கவேண்டும் எனவும் பலர் சொல்வதுண்டு.



ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்கை தவறாமல் அளிக்கவேண்டும்; இல்லையெனில் உங்கள் வாக்கை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த நேரிடும் என சொல்வது சரியான கருத்துதான். ஆனால் இந்திய அரசு அவ்வாறு தவறாமல் வாக்களிப்பதற்கு என்னென்ன வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்று பார்த்தால் எதுவுமில்லை. (சமீபத்தில் வெளியான 'தீ' திரைப்பட இயக்குநர் கண்டிப்பாக இதற்கு பதிலளிக்கவேண்டும் என விரும்புகிறேன்)

உதாரணமாக, தமிழகத்தின் தென்முனையிலிருந்து பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்துள்ள ஒருவனால், வாக்களிப்பதற்காக குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்து எப்படி தன் சொந்த ஊருக்கு செல்லமுடியும்? ஒருவேளை ஆயிரம் ரூபாய் செலவழிக்கக்கூடிய நிலையில் அவன் இருந்தாலும், அரசு விடுகின்ற ஒரு நாள் விடுமுறையில், கிட்டத்தட்ட போகவர முப்பது மணிநேர பயணம் செய்து சென்றுவர இயலுமா?

சாதாரண வார இறுதிகளிலேயே எஃமோரும், கோயம்பேடும் நிரம்பி வழிகின்ற போது, கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், தேர்தல் நாளுக்கு முந்தைய நாளில் எந்த அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும்? இப்படிப்பட்ட சூழல் நிலவுகின்றபோது, கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்று எப்படி அரசாங்கத்தால் சொல்லமுடியும்?

வாக்களர்கள் இந்திய தேசத்தில் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களால் அவர்களின் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கூடிய வசதியை ஏற்படுத்தித் தரவேண்டியது அரசின் கடமை.

வேறொரு தொகுதியில் இருந்து கொண்டு, தன்னுடைய தொகுதிக்கு வாக்களிக்கும் முறையை அமல்படுத்த அரசுக்கு சில யோசனைகள்:

அ) வேறு தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கென்று தனியாக வாக்குச் சாவடிகள் அமைக்கலாம். எல்லா ஊர்களிலும் அமைப்பதற்குப் பதிலாக மாவட்டத் தலைநகரங்களில் மட்டும் அமைத்தாலே போதுமானது.

ஆ) அருகிலிருக்கும் தபால் நிலையத்திலோ, அரசு வங்கிகளிலோ அல்லது ஏதேனும் அரசு அலுவலகங்களில், நான் இந்த தொகுதியில் இருந்துகொண்டு, என் வாக்குரிமை இருக்கும் இந்த தொகுதிக்கு வாக்களிக்க போகிறேன் என்று தேர்தலுக்கு முன்கூட்டியே, தகுந்த ஆவணங்களைக் காட்டி முன்பதிவு செய்து விட்டால், நமது சொந்த ஊரில் நமக்கிருக்கும் வாக்குரிமையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றிக் கொடுப்பது எளிதானதுதான்.

இ) இவ்வாறு வாக்களிப்பவர்களுக்கு, மின்னணு இயந்திரம் மூலமாக வாக்களிப்பதில் சாத்தியக்கூறுகள் குறையும் பட்சத்தில், இவர்களூக்கு மட்டும் வாக்குச்சீட்டு முறையையே அமல்படுத்தலாம்.

ஈ) தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில், ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை அமல்படுத்த திட்டமிடலாம்.

அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்களர் அடையாள அட்டை மட்டுமல்லாது, புகைபடத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலும் இருக்கிறபோது, மேற்கூறிய முறைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஒன்றும் இருக்காது என்றே தோன்றுகிறது.

உழவன்

Friday, February 20, 2009

சுடுகாட்டில் கலைஞரின் "சிரிப்பொலி" ?

"தமிழகம் ஒரு அமைதி பூங்கா" இப்பொழுது இந்த வாக்கியத்தைச் சொல்வதற்கு சற்று கூச்சமாகத்தான் இருக்கிறது. காவல் நிலையத்தின் படிக்கட்டுகளையும், நீதிமன்றத்தின் படிக்கட்டுகளையும் மிதிப்பதற்கு வெட்கப்பட்ட நிலைபோய், பயப்படுகின்ற ஒரு நிலைமை பொதுமக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.



பாராளுமன்றம், சட்டசபை, நகர்மன்றக் கூட்டங்கள் இங்கெல்லாம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் நாற்காலிகளையும், மைக்குகளையும் வைத்து டைம்பாஸ் செய்துகொண்டிருக்க, இங்கு காவல்துறையும், நீதித்துறையும் கற்களையும், முட்டைகளையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கேயும் தமிழனின் இரத்தத்தில்தான் புத்த போதனைகளை எழுதிக்கொண்டிருக்கிறான் (சிங்)கள்வன். இங்கேயும் நம் இரத்தத்தின் மேல்தான் சட்டம் ஒழுங்கு நடந்துகொண்டிருக்கிறது.
ஆம். நீதிதேவன் கோவிலிலும் இரத்த அபிசேகம்.

பாரிமுனை என்றதும், முல்லைக்கு தேரீந்த பாரி தான் என் நினைவுக்கு வருவான். ஆனால் இன்று ,அங்கு முல்லையின் வாசனைக்குப் பதிலாக, இரத்த வாடையும், முட்டை வாடையும்தான் வருகிறது.

அன்றொருநாள் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்த அதே காவல்துறைதான், இன்று கைநீட்டி, கம்பெடுத்து வெறியாட்டம் நிகழ்த்தியிருக்கிறது.
(பொதுமக்கள் கம்பெடுத்து சுத்துனா, அது வெறும் சிலம்பாட்டம்; ஆனா போலீஸ் கம்பெடுத்தா, அவங்க ஆடுறது வெறியாட்டம்)

இலங்கைத் தமிழர்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் வழக்கறிஞர்களின் பங்குதான் அதிகமாக இருக்கும் நிலையில், அவர்களின் மீது இப்படிப்பட்ட கொலைவெறித் தாக்குதலை ஏவிவிட்டதின் பின்னனியில் இருப்பது யார்? மத்திய அரசா இல்லை மாநில அரசா? கலவரத்தை அடக்குவதற்காகக் கொடுக்கப்ப்ட்ட லத்திகள் கார்களின் கண்ணாடிகளையும் உடைத்ததைப் பார்க்கும்போது, யாருடைய ஏவுதலும் இலலாமல் காவல்துறை இப்படிப்பட்ட கண்மூடித்தனமான நிலையை மேற்கொள்ளுமா என்றே எண்னத்தோன்றுகிறது.

எண்ணற்ற ஊடகங்கள், அத்தனை சம்பவங்களையும் நொடிப்பொழுதில் அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிற இந்த நவீன காலத்திலும், எதற்கும் பயம் இல்லாமல் கேமராக்களின் முன்னாலேயே கோஷ்டி மோதல் நடைபெறுகிறதென்றால், நமது சட்டங்களின் மீது யாருக்கும் எந்த பயமும் இல்லை என்றுதானே பொருள். ஆள்பவர்கள் தங்களுக்குச் சாதகமாக சட்டங்களை இயற்றுவதும், அகற்றுவதும், பயன்படுத்துவதுமாக இருந்தால், மக்களுக்கு எப்படி அந்த சட்டங்களின் மீது மரியாதை வரும்?

நீதிமன்ற வளாகத்தினுள் கற்களைக் குவித்து வைத்திருக்கும் தமிழக அரசே, அதை அள்ளிக்கொண்டுபோய் எங்கள் ஊர்ச் சாலைகளில் கொட்டுங்கள். புரோஜனமாகவாவது இருக்கும்.

தவறு யார் மீது இருக்கிறது என்று பார்ப்பது ஒருபுறம் இருக்கட்டும்; இப்படிப்பட்ட ஒரு கலவரம் நடைபெற்றதற்காகவே தமிழக அரசு வெட்கித் தலைகுனியவேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் அவர்கள் என்ன செய்யக் காத்திருக்கிறாரோ தெரியவில்லை.

முதல்வரின் இப்போதைய கவலையெல்லாம், சன் டிவிக்குப் போட்டியாக, புதுத் தொலைக்காட்சி ஆரம்பிப்பதில்தான் இருக்கிறது என்றே சொல்லலாம். நேற்றைய வன்முறைக் காட்சிகளைப் பார்த்தபோது, தமிழகம் விரைவில் சுடுகாடாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த நிலையில் அவர்கள் "சிரிப்பொலி" சேனல் ஆரம்பிக்கப் போகிறார்களாம். சுடுகாட்டில்தான் கலைஞரின் "சிரிப்பொலி" சத்தம் கேட்குமோ?

உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது, இது "உயர்நீதி" மன்றமா இல்லை "தாழ்வுநீதி" மன்றமா என்றே எண்ணத்தோன்றுகிறது. இப்படிப்பட்ட நீதிமன்றங்களைவிட, பதினெட்டுப் பட்டிக்கும் தீர்ப்பு சொல்லும் நாட்டாமை இருக்கிற ஆலமரத்தடியே மேல்.

உழவன்

Sunday, February 15, 2009

சல்யூட்

காலையில் அலுவலகத்தில் நுழையும் அத்தனை மேலதிகாரிகளுக்கும் சல்யூட். அவர்கள் எப்பொழுதெல்லாம் வெளியே செல்கிறார்களோ அப்போதும், எப்போதெல்லம் மீண்டும் உள்ளே வருகிறார்களோ அப்போதும் சல்யூட் அடிக்கும் நிலை. சில நேரங்களில் வருவது யார், போவது யார் என்றும்கூட தெரியாமல் அவர்களின் தோற்றத்தை வைத்தே சல்யூட் அடிக்கும் நிலை வேறு. இப்படி எந்த நேரமும் சல்யூட் அடிப்பதைப் பார்க்கும்போது, மனதினுள் ஏதோ ஒரு இனம்புரியாத வலி பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

இதே நிலைதான் பெரிய செல்வந்தர்களின் வீடுகளில் (பங்களா) வேலைபார்க்கும் செக்யூரிட்டி/வாட்ச்மேன் களுக்கும். பெரியவர்கள் முதல் பள்ளிக் குழந்தைகள்வரை அனைவருக்கும் வரும்போதும், போகும்போதும் விரைப்பாய் நின்று சல்யூட் அடித்தாக வேண்டும். (இதுபோன்ற காட்சிகளை திரைப்படங்களில் அனைவரும் பார்த்திருக்கக்கூடும்)

தன்னோடு பணிபுரியும் சக நண்பர்களுக்கோ, மேலதிகாரிகளுக்கோ அல்லது முதலாளிகளுக்கோ ஹாய் சொல்லுவது, வணக்கம் சொல்லுவது, சல்யூட் அடிப்பது நல்ல பண்புதான். இது இருவருக்குமிடையே நல்ல ஆரோக்கியமான ரிலேஷன்சிப் வளர உதவும். ஆனால் நாம் இவர்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஹாய்/குட்மார்னிங் என்று சொல்லுவதில்லை. அப்படி செய்தால் அது அவர்களைக் கிண்டல் செய்வது போலவோ இல்லை பைத்தியக்காரத் தனமாகவோதான் இருக்கும். ஆனால் செக்யூரிட்டி/வாட்ச்மேன் களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

பெரிய நிறுவனங்களிலுள்ள மேலதிகாரிகள் மனது வைத்தால், பார்க்கும் நேரமெல்லாம் சல்யூட் அடிக்கும் கலாச்சாரத்தை மாற்ற முடியும். பங்களாவில் வசிப்போர் தங்கள் குழந்தைகளுக்கும் சல்யூட் அடிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக தங்களுக்குள் குட்மார்னிங் சொல்லிக்கொள்ளலாமே!

உழவன்
tamil.uzhavan@gmail.com
http://tamiluzhavan.blogspot.com/
http://tamizhodu.blogspot.com/

Wednesday, February 11, 2009

இன்றைய மாணவர்களுக்கு மனபலம் இல்லையா?

இன்று எந்த ஆசிரியருக்கும் மாணவர்களைத் தண்டிக்கும்/கண்டிக்கும் அதிகாரம் இல்லை. ஒருவேளை ஆசிரியர் கண்டித்தால், இன்றைய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூட தயங்குவதில்லை. இந்நிலை ஏன்?
 
இன்றைய கல்வியும், கல்விக்கூடங்களும் ஒரு மாணவனை பொருள் ஈட்டும் இயந்திரமாக மட்டுமே உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், நாம் நம் பிள்ளைகளை ஆசிரியர்கள் தண்டிக்கவோ கண்டிக்கவோ கூடாது என்று சட்டமே இயற்றுகிறோம். பிறகு எப்படி மனிதாபமானமுள்ள, ஒழுக்கமுள்ள மக்கள் நாட்டில் உருவாகமுடியும்?
 
குருகுலக் கல்விக் காலத்தில், சீடர்கள்தான் குருக்களுக்குத் தேவையான எல்லா பணிவிடைகளையும் செய்தார்கள். ஆனால் இன்று கல்வி வியாபாரமாகிப் போனதால், ஆசியர்களும் இதை எதிர்பார்ப்பதில்லை; மாணவர்களும் பணிவிடை செய்ய தயாராக இல்லை.
 
கண்மூடித்தனமாக மாணவர்களை அடித்தும் இன்னபிற கொடூரமான தண்டனைகளை அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக நாம் ஒருபோதும் செயல்படவேண்டாம். அதை நாம் ஆதரிக்கவும் வேண்டாம்.
 
ஆனால் ஒரு ஆசிரியரின் பொறுப்பு என்பது, கல்வியைத் தவிர்த்து, ஒழுக்கம் கற்பித்தலிலும் இருக்கிறது என்பதை மறவோம். அதற்காக மாணவர்களிடம் சற்றுக் கண்டிப்புடன் இருப்பதில் தவறொன்றும் இலலை.
 
பெற்றோர்களே.. நீங்களும், உங்கள் பெற்றோர்களும் படித்த காலத்தில் உங்களின் பள்ளி அனுபவம் என்ன?
 
நாம் படித்த காலத்தில், எந்த ஒரு மாணவனும், மாணவியும் ஆசிரியருக்குப் பயந்து தற்கொலை அளவிற்குப் போனதே இல்லை. நாம் வகுப்பறையில் போடாத தோப்புக்கரணமா இல்லை வாங்காத அடியா?? ஆனால் இன்றைய மாணவர்களுக்கு இதையெல்லாம் தாங்குகிற மனபலம் இல்லையே. இவர்களால் எப்படி வாழ்க்கையில் வரும் தோல்விகளைத் தாங்கிக்கொள்ளமுடியும்? தோல்விகளைத் தாங்கிக்கொள்பவனால்தான், வெற்றியை நோக்கிப் பயணிப்பதற்கு போராடும் குணத்தைப் பெறமுடியும்.
 
வகுப்பறைகளில் பெறும் ஒருசில தண்டனைகளையெல்லாம் மிகவும் அவமானமாகக் கருதி, கோழைத்தனமான முடிவுகளை எடுக்கின்ற சூழல்தான் இன்று நிலவுகிறது. இப்படிப்பட்ட மனநிலையை மாற்றுகிற மிகப் பெரிய பொறுப்பு பெற்றோர்களையே சார்ந்தது. தனது குழந்தைகளை மனரீதியாகவும் பலப்படுத்துங்கள்.
 
சமீபத்திய சென்னை சட்டக்கல்லூரி சம்பவத்திற்குக் காரணமாக, மாணவர்களை ஆசிரியர்கள் சரியான ஒழுக்கநெறியோடு வளர்க்கவில்லை என்றும் கூட சொல்லலாம். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில்தான் உருவாகிறது என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் சொன்னாரே, அந்த எதிர்காலம் எப்படிப்பட்ட எதிர்காலம் என்று தீர்மானிக்கப்போவது யார்?