Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Saturday, February 14, 2009

மஞ்சள் சட்டை


ஆடி மாத
அம்மன் கோவில்
பொங்கல் விழா!
பொழைக்க வந்த
பூமி விட்டு
பொறந்த பூமிக்கு
போகுற நேரமிது!
மாலையில ஏறிய ரயிலு வண்டி
மறுநாள் காலையில இறக்கிவிட
பெத்தவ(ள்) இருக்கும்
பக்கத்து ஊருக்குப் போக
மொத்தமா நாங்க காத்திருக்க

'கரிசல் குயில்' னு ஒட்டிய ஸ்டிக்கரோடு
கலர்புல்லா வந்தது மினி பஸ்!
கொண்டு வந்த உடைமையோடு
முண்டியடிச்சு உள்ளே ஏற
வண்டிக்குள்ள இடமில்லாம
ஏணி பிடிச்சு ஏறினோம் பஸ் மேல!

ஆடிக் காத்து லேசா அடிக்க
ஆனை போல அசைஞ்சு போறோம்
ஆண்டு ஒன்னு கழிஞ்சு போச்சு
ஆத்தா அப்பன பார்க்கப் போறோம்!

பனையோலைச் சத்தம் கேக்கும்போது
பதநீ குடிச்ச ஞாபகம்
சுடுகாடு வரும்போது
சுருக்குப்பை காசு தந்த
சுப்பம்மா பாட்டி ஞாபகம்

ஊருணி வந்திருச்சு
ஊருவாசம் அடிச்சிருச்சு
ஊரு எல்லை அய்யனாரை
உள்ளுக்குள்ள வணங்கியாச்சு!

ஆயிரம் நினைவுகள்
அரை நொடியில் வந்து போனாலும்
அவ நெனப்பு மட்டும்
அடி மனசுல தங்கிருச்சு!

அம்மனுக்குப் பொங்கல் வைக்க
எம்புள்ள வந்துட்டான்னு
பெத்தவ(ள்) அவ நினைக்க
ஏனிங்கு வந்தேன்னு
எனக்குத் தான தெரியும்!

போன வருஷப் பொங்கலுக்கு
மஞ்சத் தண்ணி ஊத்தி நனைச்சா
எம் மனசை ஈரமாக்கி
ஒரு வருஷமா தவிக்க வைச்சா!

நாளைக்கும் நீ ஊத்தனும்னு
மனசு கெடந்து தவிக்குது
உன் மஞ்சளுக்கு
என் சட்டை கெடந்து ஏங்குது!

காதல் கவிகள்

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!
***
பெறுநரைச்
சென்றடையாமலேயே
செல்லரித்துப்போன
காதல் கடிதங்களை
மனதிற்குள்ளேயே
சுமக்கும்
அனுப்புநர்களே
மண்ணில் ஏராளம் !
***

நிம்மதியில்லை

என்றதும்
கோவிலுக்குப்
போகச்சொன்னான் நண்பன்!
போனேன்
முதன்முதலில்
அவளைப் பார்த்த
பேருந்து நிறுத்தத்திற்கு!

***

உள்ளாடையைத்
தேர்ந்தெடுக்கக்கூட
இவ்வளவு நேரமா?
நீயெல்லாம்
பெண் பார்க்கப்போனால்...

எத்தனை பெண்தான் பார்ப்பாயோ..
என்பார்கள் நண்பர்கள்!

அவர்களுக்கென்ன தெரியும்
பார்த்த முதல் வினாடியே
உன்னைத்
தேர்வு செய்துவிட்டேன்
என்பது!

***

தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!

***

அருவி
மலைக் காதலிக்கு
மழைக் காதலன்
சூட்டிய
மல்லிகை !
***

அவள் எனக்கு பிடிக்கவில்லை !
எத்தனை
பெண் பார்க்கும் படலம்
என்னவளுக்கு ...
விரைவில்
வீட்டில்
சொல்லியாக வேண்டும்!
உன்னை
பார்த்துவிட்டுச் சென்ற
எல்லோரும்
"அவள் எனக்கு பிடிக்கவில்லை"
என்றுதான்
சொல்லியிருக்கிறார்கள் ...
ஆமாம்...
யாருக்குமே
பிடிக்காத உன்னை
எனக்கு மட்டும்
எப்படி பிடித்துப் போனது?
ஓ..
இதுதான்
காதலோ !!!
***

Monday, June 2, 2008

அவளொரு நெய்தல்!

நுரைத்திருக்கும் அலையாய்
சிரிப்பிருக்கும்
இதழ்!
 
கரைதொடும் அலைகளின்
சிணுங்கள்களாய்
சிரிப்பு!
 
மணல்வெளியில் சங்குகளாய்
காரித்துப்பிய
எச்சில்கள்!
 
காயப்படாமல் கடல்கிழிக்கும்
கலங்களாய்
கண்கள்!
 
முத்து சுமக்கும் சிப்பிகளாய்
தோடு சுமக்கும்
காதுகள்!
 
எனைமறக்க நான் தலைசாயும்
மணல்வெளியாய்
மடி!
 
ஒருநாள் பிரிவிலேயே
தீவுகளாய் மேனியில்
பசலைகள்!
 
உப்பளத்தில் சிதறிய
கல் உப்புக்களாய்
வியர்வைத் துளிகள்!
 
இளஞ்சூரியனால்
மினுங்கும் மணல்வெளியாய்
மேனி!
 
கன்னமெனும் சின்னக்கடலில்
சுழலாய் ஒரு
குழி!
 
அளவில் வேறுபடும்
ஐய்யிரு மீன்களாய்
விரல்கள்!
 
வாலாட்டும் வாளையாய்
வளைந்து நெளியும்
பின்னல்!
 
நீலக்கடல் வியக்கும் குமரியே ...
நீயே ஒரு நெய்தல் தானே!
 

Wednesday, April 16, 2008

காதல் என்பது யாதெனில்...

எனக்கு பிடித்தவைகளே
உனக்கு பிடிக்கவேண்டும்
என்பதல்ல காதல் . . .
உனக்கு பிடிக்காதவைகள்
எனக்கு பிடித்திருந்தும்
என்னை பிடிக்கும் என்பாயே
அதுவே காதல் !

உன்னை பற்றி நானும்
என்னை பற்றி நீயும்
தெரிந்து கொள்வதல்ல
காதல் . . .
நம்மைப் பற்றி நமக்கே
தெரியாதவைகளை
தெரியவைப்பதே காதல் !

எல்லைகளை மீறுவதல்ல
காதல் . . .
நமக்குள் எல்லையே இல்லாமல்
இருப்பதே காதல் !

கற்பு நெறிக்கு உட்பட்டதல்ல
காதல் . . .
கற்புக்கு நெறிமுறைகளை
வகுத்ததே காதல் !

நட்பை விட உயர்ந்ததா தாழ்ந்ததா
என்பதல்ல காதல் . . .
நட்பை தன்னை விட உயர்ந்த
இடத்தில் வைத்து பெருமைப்படுத்துவதே
காதல் !

மொழிகளால் உணர்ந்து
கொள்ளக்கூடியதல்ல காதல் . . .
உணர்வுகளின் மொழியே
காதல் !

காதலை ரசிப்பது
மீனாள்

Thursday, April 10, 2008

இதயம்

இறைவன் கேட்டான் என்னிடம்
ஒரு நாளில் எத்தனை முறை
உன்னவள் நினைவு வரும் என்று!

நான் சொன்னேன்
நிமிடத்திற்கு
எழுபத்தியிரண்டு முறை என்று!

அது என்ன கணக்கு? என்றான்

அதற்கு நான்,
எனக்கு என்ன தெரியும்
நீதானே படைத்தாய்
மனிதனுக்கு
இதயம் நிமிடத்திற்கு எழுபத்தியிரண்டு
முறை துடிக்க வேண்டுமென்று
என்றேன் !

காதலை ரசிப்பது
மீனாள்
meenakshisundaramp@gmail.com

Thursday, March 27, 2008

அனுப்புநர்களே ...

பெறுநரைச்
 
சென்றடையாமலேயே
 
செல்லரித்துப்போன
 
காதல் கடிதங்களை
 
மனதிற்குள்ளேயே
 
சுமக்கும்
 
அனுப்புநர்களே
 
மண்ணில் ஏராளம் !
 
 

காதல் ...

காத்துக்கிடப்பது மட்டுமல்ல...
 
காலடியில் கிடப்பதும் கூட
 
காதலில் மட்டும் தான் சுகம் !
 
 

Saturday, March 22, 2008

எஜமானி !

என் மனதிற்கு
நீதான் எஜமானியோ ?

உன் பின்னாலேயே
செல்கிறது
நாய்க்குட்டியாய் !


உழவன்
http://tamizhodu.blogspot.com

பக்கத்தில் வா


தினத்தந்தி குடும்பமலரில் இடம் பெற்ற என் கவிதை !

Saturday, March 15, 2008

எங்கே என் நினைவு ?

நீ

நகம் வெட்டியதில்லை
வெட்டாத
ஆசை நகத்தின்
அழுக்கெடுத்ததில்லை

கொய்யா காய்
நறுக்கியதில்லை
சாத்துக்குடியின்
சேலை உரித்ததில்லை

குளிர்பானம்
திறந்ததில்லை
குதிகால் முள்
பிடுங்கியதில்லை

எந்த வேலையையுமே
உனக்குக் கொடுக்காமல்
எடுத்து எடுத்துப்
பார்த்துவிட்டு

அலமாரியை
அலங்கரிக்க மட்டுமே - நான்
அமரவைத்த
நகவெட்டியே . . .

மாயமாய்
மறைந்து போனது
எங்கே?

எப்போதும் விழித்திருக்கும்
என் வீட்டு
எறும்புகளே . . .

இருக்கும்
இடம் தெரிந்தால்
கொஞ்சம் சொல்லுங்களேன் !

என்னவளின்
நகத்தை மட்டுமே
சுவைத்த நாக்கு அது

அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது !