Monday, May 18, 2009

அத்வானி தற்கொலை?


மக்கள் மன்றத்தில் வேட்பாளராக இல்லாமல், கொல்லைப்புறமாக வந்தவர் என்றும், இந்தியாவின் மிகப் பலவீனமான பிரதமர் என்றும் விமர்சிக்கப்பட்ட டாக்டர் மன்மோகன்சிங்கை, அவர் மீதான இப்படிப்பட்ட விமர்சனங்களையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மீண்டும் அரியணையில் அமர்த்தியிருக்கிறார்கள் இந்திய மக்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து பல கட்சிகள் பிரிந்து வந்து மூன்றாவது அணி, நான்காவது அணி என்று பல அணிகளாய் 15வது மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டபோது, தொங்கு பாராளுமன்றம்தான் அமையப்போகிறது என்றும், மூன்றாவது அணியோ, நான்காவது அணியோ ஆதரவளிக்காமல் யாரும் ஆட்சியைக் கைப்பற்றமுடியாது என்றும், ஒருவேளை மூன்றாவது அணியே ஆட்சியமைக்கக்கூடிய நிலைமையும் வந்துவிடலாம் என்றும், இப்படி பலவாறு பலராலும் யூகிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஏறக்குறைய தனிப்பெரும்பான்மையாகவே காங்கிரஸ் கூட்டணியானது ஆட்சியமைக்கப் போகிறது. இப்படிப்பட்ட மிகப்பெரிய வெற்றியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தேடித்தந்த பெருமை பெரும்பாலும் மூன்றாவது மற்றும் நான்காவது அணிக்கே சேரும்.

மேலும் படிக்க

உழவன்

Tuesday, May 12, 2009

Good touch Bad touch

கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டைமாடி ஞாயிற்றுக் கிழமையின் (மே 10' 2009) ஞாயிறு மறையும் வேளையில் பதிவர்களால் நிறைந்திருந்தது. மாலை 4 மணியிலிருந்தே ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க, டாக்டர் ருத்ரன் அவர்களும், டாக்டர் ஷாலினி அவர்களும் வந்த உடன் கலந்துரையாடல் துவங்கும்போது மணி ஐந்தைத் தாண்டியிருந்தது.

ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள Public parts மற்றும் Private parts பற்றிய விபரங்களோடு தன் உரையாடலைத் துவங்கினார் டாக்டர் ஷாலினி. இவரது நீண்ட தெளிவான உரையாடலுக்குப் பின்னர் டாக்டர் ருத்ரன் அவர்களும் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தினார். கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நடைபெற்ற கலந்துரையாடலை டோண்டு ராகவன் சார் அவர்கள் மிக விரிவாகப் பதிவிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாது இன்னும் பல விஷயங்களையும் பெற்றோர்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது என் எண்ணம். முதலில் உங்கள் பிள்ளைகளை "பழம்" மாதிரி வளரவிடாதீர்கள். எம்புள்ள ரொம்ப சமத்து; வீடு விட்டா பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் விட்டா வீடு. எந்த பசங்களோடும் சேரமாட்டான். அவன் பாட்டுக்கு சிவனேனு அவன் வேலையை மட்டும் பார்ப்பான். இப்படி உங்கள் குழந்தைகள் இருக்க ஆரம்பித்துவிட்டால், அவர்களுக்கு மற்ற நண்பர்களிடமிருந்தும், சமூகத்திடமிருந்தும் எதையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். பெற்றோர்களால் சில பாலியல் சம்பந்தமான விஷயங்களைச் சொல்லித்தருவதற்கு சற்று சங்கோஜமாக இருப்பதனால், பலவற்றை நாம் சொல்லித்தருவதில்லை. இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்குச் சொல்லித்தருபவைகள் இந்த சமூகம்தான். அதற்காக கெட்ட நண்பர்களின் சேர்க்கையினால் கெட்டுப்போகச் சொல்லவில்லை. நாங்களெல்லாம் மேல்நிலைக் கல்வி பயின்ற காலத்தில், இந்த வயதில் பாலியல் சம்பந்தமாக எவைகளெல்லாம் தெரிந்திருக்கவேண்டுமோ, அவைகளையெல்லாம் எங்களது நண்பர்களின் அண்ணன்மார்கள் அதாவது சீனியர்கள் விளையாட்டுப்போக்கில் எங்களுக்குச் சொல்லுவார்கள். ஏய் தம்பி / ஏய் மாப்ள.. இதெல்லாம் தெரிஞ்சிக்கிடனும்டா.. இதெல்லாம் அடிப்படை விஷயங்கள்.. இப்படி பல விஷயங்களைச் சொல்லித்தந்ததுண்டு.

இன்றைய சூழலில் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களே பெரும்பாலான, நாம் வெளிப்படையாக யாரிடமும் கேட்டுத்தெரிந்துகொள்ளத் தயங்குகிற பல அந்தரங்க விஷயங்களைத் தெளிவாக, அதற்கான நிபுணர்களைக் கொண்டே நமக்குத் தெளிவுபடுத்துகிறது. ஆனால் சரியான ஊடகத்தைத் தேர்ந்தெடுப்பது நம் கடமை. அதைவிட்டுவிட்டு டாக்டர் ஷாலினி சொன்னதுபோல, திருச்சி, சேலம், திண்டுக்கல் என ஊர் ஊராகச் சென்று லேகியம் வாங்க அலைந்துவிடக்கூடாது. நம் பிள்ளைகள் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான பருவத்தில்தான் இருக்கிறார்கள் எனில், அவர்களுக்கு இந்நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். அதற்கான சூழலை நாம் வீட்டில் ஏற்படுத்தித் தரவேண்டும். அப்போதுதான் நாம் சொல்லத் தயங்குகிற பல விஷயங்களை அவர்களால் தெரிந்துகொள்ளமுடியும்.

சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒரு டாக்டர், இன்றைய இளைஞர்கள், இளைஞிகளில் பெரும்பான்மையோருக்கு, தங்களின் அந்தரங்க உறுப்பை தினமும் குளிக்கும்போது, சோப்பினால் சுத்தப்படுத்தவேண்டும் என்பது கூடத் தெரியவில்லை. இதுபோன்ற அறிவுரைகளைக் கூறும்போதுகூட, அவர்கள் ஒருவித சங்கோஜத்துடன் தான் கேட்கிறார்கள். ஆண்கள் சரியாக அப்பகுதியைச் சுத்தப்படுத்தவில்லையெனில், அழுக்கு சேர்ந்து, நாளடைவில் கேன்சர் கூட வர வாய்ப்பிருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் இதுபோன்ற தகவல்களை நண்பர்களோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள் எனவும் கூறினார். இதிலிருந்தே நாம் எவ்வாறு குழந்தைகளை வளர்த்து வந்திருக்கிறோம் என்பது புரிந்திவிடும். அந்தப் பகுதிகளைத் தொடுவதுகூட பாவம் என்ற எண்ணத்தோடு வளர்ந்துவிட்டவர்களுக்கு யார் சொல்லிக்கொடுப்பது? புத்தகங்களும், மீடியாக்களும், நண்பர்களும் தான். ஒரு பெண் எவ்வாறு கருத்தரிக்கிறாள் என்பது கூடத் தெரியாமல்தான், இன்றும் பல பெண்கள் கருத்தரித்து குழந்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பாலியல் உறவை குழந்தை பார்க்கநேர்ந்தால், அதை ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணுகிற கண்ணோட்டத்தில்தான் குழந்தைகளை வளர்க்கவேண்டும். சாலைகளில் எல்லோரும் பார்க்கும் வண்ணம் நாய்கள் கூடதான் உறவு வைத்துக்கொள்ளுகின்றன. இவைகளையும்தான் குழந்தைகள் பார்க்க நேரிடுகிறது. இப்படிப்பட்ட மனநிலையில் அவர்கள் இருந்தால்தான் எந்த வித எல்லை மீறலுக்கும் ஆட்படாமல் அவர்கள் இருப்பார்கள் எனவும் ஷாலினி அவர்கள் கூறினார். இருந்த போதும், பக்கத்து வீட்டுக்காரன் முன்னால் நாம் எதையெதையெல்லாம் செய்யமாட்டோமோ, அதையெல்லாம் குழந்தையின் முன்னும் செய்யக் கூடாது என டாக்டர் ருத்ரன் அவர்கள் கூறினார்.

எனவே, குழந்தைகளை நல்ல நண்பர்களோடும் சமூகத்தோடும் பழகவிடுவோம்; பாலியல் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கும் அனுமதியளிப்போம். குழந்தையின் வயதிற்கேற்றவாறு பெற்றோர்கள் மட்டுமல்லாது அண்ணன், மாமன், நண்பன் இப்படி யாராக இருந்தாலும், பாலியல் சம்பந்தமான ஒரு தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்த முயன்றால், பாலியல் சம்பந்தமான குற்றங்கள் பெரும்பாலும் குறையவே வாய்ப்புள்ளது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும், டாக்டர் ஷாலினி அவர்களுக்கும், என்னை இன்முகத்தோடு வரவேற்று, அவர்களாகவே அறிமுகம் செய்து நன்கு பேசிய கார்க்கி, நர்சிம், அதிஷா, லக்கிலுக், முரளிகண்ணன், பத்ரி, டோண்டு ராகவன் சார் அனைவருக்கும் மிக்க நன்றி! அதுமட்டுமல்லாது தான் எழுதிய சில புத்தகங்களை பலருக்கும் கொடுத்துதவிய பத்ரி அவர்களுக்கு கூடுதல் நன்றி!

அன்புடன்
உழவன்
என் உழவனின் உளறல்கள் வலைப்பதிவுக்கும் வருகை தந்தால் மகிழ்வேன்.

Saturday, May 9, 2009

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

ஈழதேசமே...
எங்களின்
தேர்தல் போதைக்கு
இன்று
நீங்கள்தான்
ஊறுகாய்!
வேறு வழியில்லை
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

கொள்கை பேசும் மக்களே...
நாற்பது பணம் காய்க்கும்
மரங்களுக்காக
நாயாய் பேயாய்
அடித்துக்கொள்ளாமல்
வேறென்ன செய்வது?
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

கொடி பிடிக்கும் தொண்டர்களே...
நேற்று கைகுலுக்கியவரை
இன்று கைகழுவவும்
இன்று கைகுலுக்கியவரை
நாளை கைகழுவவும்
பழகிக் கொள்ளுங்கள்.
குறைந்தது
இரண்டு மாதத்திற்காவது
சோற்றில் உப்பு சேர்க்காதீர்கள்.
இப்படிப்பட்டகொள்கைகளுக்காக
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

மன்னியுங்கள் மக்களே
மன்னியுங்கள்!
உங்கள் வறுமைதான்
எங்கள் முதலீடு.
இலவசங்களுக்கும்
மானியங்களுக்கும்
விலை போகாமலா போவீர்கள்?

நீங்கள் காரித்துப்புவது
எங்கள் கண்களுக்குத் தெரியாமலில்லை.
அதிகாரத்துடன்
கொள்ளையடிக்க
நீங்கள் அனுமதி தரும்போது
இதைக்கூட
பொறுத்துக் கொள்ளமாட்டோமா!

மே 13
உங்கள் தலையெழுத்தை
மன்னிக்கவேண்டும்
எங்கள் தலையெழுத்தை
நிர்ணயிக்கப்போகும் நாள்!

வாக்களிக்க மறவாதீர்
எனக்கில்லையாயினும்
எவனுக்காவது ஒருவனுக்கு.
ஏனெனில்
நாளை
நானும் அவனும் கூட
கூட்டணி அமைக்கலாம்!

உழவன்

நன்றி: விகடன் தேர்தல் களம் 2009

Tuesday, April 28, 2009

நேகா பாசினின் நிர்வாணப் படம்

ஆடையில்லாமல் ஆபாசமாய்க் காட்சியளிக்கும் ஆண்/பெண் படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் பத்திரிக்கைகளின் பக்கங்களில், கருப்பு வண்ணம் பூசி ஆபாசப் பகுதிகளை மறைத்திருப்பார்கள். இது பொது நலன் கருதியா, இல்லை இப்படித்தான் இருக்கவேண்டுமென சட்டமே இருக்கிறதா என தெரியவில்லை.

ஆடையணிவதில் யாருக்கும் சட்டப்படி எந்த வரைமுறையும் கிடையாது. முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், நடிகை ஸ்ரேயா முகம் சுழிக்கக் கூடிய வகையில் ஆடையணிந்து வந்ததால், அவரை மற்றவர்கள் கண்டிக்கும் நிலை உருவாகி, பின்னர் கடிதம் மூலம் முதலமைச்சரிடம் மன்னிப்பும் கேட்டார் என்ற செய்தியையும் நாம் அறிந்துள்ளோம்.

ஆடையின் வடிவமைப்புகள் தனிப்பட்ட மனிதனின் உரிமை என்கிற காரணத்தினால், பெரும் நகரங்களில் வசிக்கும் சில மேனாமினிக்கி குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் படு கவர்ச்சியாக ஆடையணிவதைப் பார்க்க முடிகிறது. இது சரியா தவறா என்று சொல்வது இப்பதிவின் நோக்கமல்ல. அது அவரவர் விருப்பம். ஆனால் உடம்பின் சில பாகங்களில், ஆபாசமாக நீங்கள் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்கள், இயல்பாகச் செல்வோரின் கண்களில்கூட படுமளவிற்கு உங்களின் ஆடையமைப்பு இருப்பின், அதைக் கண்டிக்கும் பொறுப்பு எல்லோருக்குமே உண்டு எனலாம்.



சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய விழாவில் கலந்து கொண்ட பாடகி நேகா பாசின், தன்னுடைய கையிலும், காலிலும் வரைந்திருந்த கவர்ச்சிகரமான பெண்ணின் ஓவியங்கள் எல்லோர் கண்களிலும் படும்படியாக ஆடையணிந்திருக்கிறார். உடம்பிலுள்ள ஆபாச ஓவியங்கள் தெரியுமளவிற்கு வீட்டினுள் ஆடையணிந்து கொள்ளலாம். வீட்டைவிட்டு வெளியே வந்தால், இப்படிப்பட்ட ஆபாச ஓவியங்கள் வெளியே தெரியாத அளவிற்கு ஆடையணிந்துதான் வரவேண்டும். இல்லையேல் அப்படிப்பட்ட ஓவியங்களை அழித்துவிட்டு வாருங்கள்.

எல்லோரும் பார்க்கும் படியாக நிர்வாணப் படங்களை கையிலே தாங்கியவாறு பொது இடங்களில் நிற்பது சரியான செயலா? காவல்துறை நடவடிக்கை எடுக்குமல்லவா! அதுபோல்தானே இதுவும். சம்பந்தப்பட்ட விழாக் குழுவினர் பாடகி நேகா பாசினைக் கண்டித்தார்களா இல்லையா எனத் தெரியவில்லை.

சமூகப் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். அதிலும் பிரபலங்களுக்கு இன்னும் கூடுதலாகவே இருக்க வேண்டும். சராசரி பொதுமக்களும் எப்போது கேள்வி கேட்கிறோமோ அப்போதுதான், தனக்கே இது தவறு என்று தெரியாமல் இருப்பவர்களுக்குகூட தெரியவரும். நேகா பாசின் இதைச் தெரிந்து செய்தாரோ? இல்லை தெரியாமல் செய்தாரோ? சம்பந்தப்பட்டவர்கள் அவருக்கு எடுத்துரைப்பீராக!

நன்றி: தினத்தந்தி

உழவன்

Wednesday, April 22, 2009

தந்தியும் கலைஞரும்

குளத்தில் விழுந்த எறும்பைக் காப்பாற்ற இலையைக் கிள்ளிப் போடலாம். ஆனால் குளத்தில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற இலையைக் கிள்ளிப் போடுவார்களா? இலங்கைத் தமிழருக்காக கலைஞர் அவர்களின் தந்தி கொடுக்கும் கண்துடைப்பானது, குழந்தையைக் காப்பாற்ற இலையைக் கிள்ளிப் போடுவது போலத்தான் இருக்கிறது.
குடியரசுத் தலைவருக்கோ, பிரதமருக்கோ எந்த ஒரு இந்தியக் குடிமகனாலும் தந்தி கொடுக்க முடியும். இப்படி ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடிந்ததைச் செய்வதற்காகவா ஒரு முதலைச்சர். அதுவும் எத்தனை முறைதான் தந்தி கொடுப்பாரோ! இதற்காகவா நாற்பதையும் மக்கள் அள்ளித்தந்தார்கள்? அவருக்கு இருக்கின்ற அதிகாரத்திற்கு எவ்வளவோ செய்திருக்கலாமே.
சோனியாஜி அவர்கள் இந்தத் தந்தியைப் பார்த்தவுடன், ஐயோ.. கலைஞர் அவர்கள் தந்தி கொடுத்திருக்கிறார்; உடனடியாக நாம் போரை நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கோபத்தில் ஏதாவது விபரீதமாக முடிவெடுத்துவிடுவார்; அப்படி எடுத்துவிட்டால், நம் ஆட்சி, பதவி என்று அத்தனையும் ஒட்டு மொத்தமாகப் போய்விடுவதோடு, அடுத்த முறையும் ஆட்சியமைக்க முடியாமல் போய்விடும் என்றெல்லாம் நினைத்து, பயந்து போய் உடனடியாக போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு விடுவாரா என்ன? இப்படி நாம் நினைத்தால் நாம் தான் முட்டாள்கள்.
காங்கிரஸ்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். இன்னும் சுமார் ஒருமாதகால பதவி இருக்கும்போது, அதை எப்படி கலைஞர் இழக்க முன்வருவார் என்று.
தமிழர்களே.. நம் தமிழனத் தலைவர் அவர்கள், தந்திக்குப் பதிலாக, ஒரு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி, அதை அறிவாலயத்தின் அருகிலுள்ள தபால்பெட்டியில் போடாமல் இருந்தாரே, அதற்காக ஒருவகையில் சந்தோசப்பட்டுக் கொள்வோம்.
துமட்டுமல்லாது நாளை வேலை நிறுத்தத்திற்கு அழைப்பும் விடுத்திருக்கிறார். இது யாரை ஏமாற்றுவதற்காக? யாரை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம்? மத்திய அரசைக் கண்டித்தா? உங்கள் கூட்டணியிலிருக்கும் சோனியாஜியைக் கண்டித்தா? இல்லை இலங்கை அரசைக் கண்டித்தா?
சாதாரண பேருந்து பயணத்திற்கே 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யப்படுகிறது. ரயில் பயணத்திற்கு 90 நாட்கள். இவ்வளவு ஏன்.. ஒரு சினிமாவுக்குச் செல்லக்கூட மூன்று நான்கு நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால்தான் செல்லமுடியும். இப்படி திட்டமிடலோடு வாழ்க்கை நடத்தி வரும் மக்களிடம், திடீரென நாளை நீ எங்கும் செல்லாதே, எதுவும் செய்யாதே என்றால் எப்படி?
திடீரென இப்படி எதாவது போராட்டங்களை அறிவிக்கும் கழகத் தலைவர்களே.. உங்களுக்கு போராடவேண்டும் என்ற உணர்வு திடீரென வந்தால், ஒரு ஓரமாகச் சென்று உண்ணா விரதம் இருங்கள்; கூட்டம் போடுங்கள்; குட்டிக் கரணம் போடுங்கள்; தண்ணீர் குடியாமல் இருங்கள்; தந்தி அடியுங்கள். ஆனால் பொது மக்களையும் இது போன்ற பொதுக்காரணங்களுக்காக போராட்டங்களில் ஈடுபடுத்த வேண்டும் என்று நினைத்தால், அதற்கு தகுந்த கால அவகாசம் கொடுங்கள்.
இக்கட்டுரை விகடன் தேர்தல் களம் 2009 ல் இடம்பெற்றுள்ளது.
உழவன்