Tuesday, May 12, 2009

Good touch Bad touch

கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டைமாடி ஞாயிற்றுக் கிழமையின் (மே 10' 2009) ஞாயிறு மறையும் வேளையில் பதிவர்களால் நிறைந்திருந்தது. மாலை 4 மணியிலிருந்தே ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க, டாக்டர் ருத்ரன் அவர்களும், டாக்டர் ஷாலினி அவர்களும் வந்த உடன் கலந்துரையாடல் துவங்கும்போது மணி ஐந்தைத் தாண்டியிருந்தது.

ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள Public parts மற்றும் Private parts பற்றிய விபரங்களோடு தன் உரையாடலைத் துவங்கினார் டாக்டர் ஷாலினி. இவரது நீண்ட தெளிவான உரையாடலுக்குப் பின்னர் டாக்டர் ருத்ரன் அவர்களும் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தினார். கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நடைபெற்ற கலந்துரையாடலை டோண்டு ராகவன் சார் அவர்கள் மிக விரிவாகப் பதிவிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாது இன்னும் பல விஷயங்களையும் பெற்றோர்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது என் எண்ணம். முதலில் உங்கள் பிள்ளைகளை "பழம்" மாதிரி வளரவிடாதீர்கள். எம்புள்ள ரொம்ப சமத்து; வீடு விட்டா பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் விட்டா வீடு. எந்த பசங்களோடும் சேரமாட்டான். அவன் பாட்டுக்கு சிவனேனு அவன் வேலையை மட்டும் பார்ப்பான். இப்படி உங்கள் குழந்தைகள் இருக்க ஆரம்பித்துவிட்டால், அவர்களுக்கு மற்ற நண்பர்களிடமிருந்தும், சமூகத்திடமிருந்தும் எதையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். பெற்றோர்களால் சில பாலியல் சம்பந்தமான விஷயங்களைச் சொல்லித்தருவதற்கு சற்று சங்கோஜமாக இருப்பதனால், பலவற்றை நாம் சொல்லித்தருவதில்லை. இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்குச் சொல்லித்தருபவைகள் இந்த சமூகம்தான். அதற்காக கெட்ட நண்பர்களின் சேர்க்கையினால் கெட்டுப்போகச் சொல்லவில்லை. நாங்களெல்லாம் மேல்நிலைக் கல்வி பயின்ற காலத்தில், இந்த வயதில் பாலியல் சம்பந்தமாக எவைகளெல்லாம் தெரிந்திருக்கவேண்டுமோ, அவைகளையெல்லாம் எங்களது நண்பர்களின் அண்ணன்மார்கள் அதாவது சீனியர்கள் விளையாட்டுப்போக்கில் எங்களுக்குச் சொல்லுவார்கள். ஏய் தம்பி / ஏய் மாப்ள.. இதெல்லாம் தெரிஞ்சிக்கிடனும்டா.. இதெல்லாம் அடிப்படை விஷயங்கள்.. இப்படி பல விஷயங்களைச் சொல்லித்தந்ததுண்டு.

இன்றைய சூழலில் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களே பெரும்பாலான, நாம் வெளிப்படையாக யாரிடமும் கேட்டுத்தெரிந்துகொள்ளத் தயங்குகிற பல அந்தரங்க விஷயங்களைத் தெளிவாக, அதற்கான நிபுணர்களைக் கொண்டே நமக்குத் தெளிவுபடுத்துகிறது. ஆனால் சரியான ஊடகத்தைத் தேர்ந்தெடுப்பது நம் கடமை. அதைவிட்டுவிட்டு டாக்டர் ஷாலினி சொன்னதுபோல, திருச்சி, சேலம், திண்டுக்கல் என ஊர் ஊராகச் சென்று லேகியம் வாங்க அலைந்துவிடக்கூடாது. நம் பிள்ளைகள் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான பருவத்தில்தான் இருக்கிறார்கள் எனில், அவர்களுக்கு இந்நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். அதற்கான சூழலை நாம் வீட்டில் ஏற்படுத்தித் தரவேண்டும். அப்போதுதான் நாம் சொல்லத் தயங்குகிற பல விஷயங்களை அவர்களால் தெரிந்துகொள்ளமுடியும்.

சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒரு டாக்டர், இன்றைய இளைஞர்கள், இளைஞிகளில் பெரும்பான்மையோருக்கு, தங்களின் அந்தரங்க உறுப்பை தினமும் குளிக்கும்போது, சோப்பினால் சுத்தப்படுத்தவேண்டும் என்பது கூடத் தெரியவில்லை. இதுபோன்ற அறிவுரைகளைக் கூறும்போதுகூட, அவர்கள் ஒருவித சங்கோஜத்துடன் தான் கேட்கிறார்கள். ஆண்கள் சரியாக அப்பகுதியைச் சுத்தப்படுத்தவில்லையெனில், அழுக்கு சேர்ந்து, நாளடைவில் கேன்சர் கூட வர வாய்ப்பிருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் இதுபோன்ற தகவல்களை நண்பர்களோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள் எனவும் கூறினார். இதிலிருந்தே நாம் எவ்வாறு குழந்தைகளை வளர்த்து வந்திருக்கிறோம் என்பது புரிந்திவிடும். அந்தப் பகுதிகளைத் தொடுவதுகூட பாவம் என்ற எண்ணத்தோடு வளர்ந்துவிட்டவர்களுக்கு யார் சொல்லிக்கொடுப்பது? புத்தகங்களும், மீடியாக்களும், நண்பர்களும் தான். ஒரு பெண் எவ்வாறு கருத்தரிக்கிறாள் என்பது கூடத் தெரியாமல்தான், இன்றும் பல பெண்கள் கருத்தரித்து குழந்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பாலியல் உறவை குழந்தை பார்க்கநேர்ந்தால், அதை ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணுகிற கண்ணோட்டத்தில்தான் குழந்தைகளை வளர்க்கவேண்டும். சாலைகளில் எல்லோரும் பார்க்கும் வண்ணம் நாய்கள் கூடதான் உறவு வைத்துக்கொள்ளுகின்றன. இவைகளையும்தான் குழந்தைகள் பார்க்க நேரிடுகிறது. இப்படிப்பட்ட மனநிலையில் அவர்கள் இருந்தால்தான் எந்த வித எல்லை மீறலுக்கும் ஆட்படாமல் அவர்கள் இருப்பார்கள் எனவும் ஷாலினி அவர்கள் கூறினார். இருந்த போதும், பக்கத்து வீட்டுக்காரன் முன்னால் நாம் எதையெதையெல்லாம் செய்யமாட்டோமோ, அதையெல்லாம் குழந்தையின் முன்னும் செய்யக் கூடாது என டாக்டர் ருத்ரன் அவர்கள் கூறினார்.

எனவே, குழந்தைகளை நல்ல நண்பர்களோடும் சமூகத்தோடும் பழகவிடுவோம்; பாலியல் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்கும் அனுமதியளிப்போம். குழந்தையின் வயதிற்கேற்றவாறு பெற்றோர்கள் மட்டுமல்லாது அண்ணன், மாமன், நண்பன் இப்படி யாராக இருந்தாலும், பாலியல் சம்பந்தமான ஒரு தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்த முயன்றால், பாலியல் சம்பந்தமான குற்றங்கள் பெரும்பாலும் குறையவே வாய்ப்புள்ளது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும், டாக்டர் ஷாலினி அவர்களுக்கும், என்னை இன்முகத்தோடு வரவேற்று, அவர்களாகவே அறிமுகம் செய்து நன்கு பேசிய கார்க்கி, நர்சிம், அதிஷா, லக்கிலுக், முரளிகண்ணன், பத்ரி, டோண்டு ராகவன் சார் அனைவருக்கும் மிக்க நன்றி! அதுமட்டுமல்லாது தான் எழுதிய சில புத்தகங்களை பலருக்கும் கொடுத்துதவிய பத்ரி அவர்களுக்கு கூடுதல் நன்றி!

அன்புடன்
உழவன்
என் உழவனின் உளறல்கள் வலைப்பதிவுக்கும் வருகை தந்தால் மகிழ்வேன்.

5 comments:

பழமைபேசி said...

உழவனாரோடு நானும் சேர்ந்து நன்றி சொல்லிகிடுறேன்.

ஷண்முகப்ரியன் said...

வரமுடியாத என் போன்றொருடன் கருத்துக்களைப் பகிர்ந்ததற்கு நன்றி,உழவன்.

"உழவன்" "Uzhavan" said...

@ஷண்முகப்ரியன்
வரமுடியாத என் போன்றொருடன் கருத்துக்களைப் பகிர்ந்ததற்கு நன்றி,உழவன்.//

மகிழ்ச்சி ஐயா..

@பழமைபேசி
உழவனாரோடு நானும் சேர்ந்து நன்றி சொல்லிகிடுறேன். //

மிக்க நன்றி பழமை

எண்ணங்கள் 13189034291840215795 said...

அழகா சொல்லியுள்ளீர்கள்...

பாலியல் தேவையும் ஒரு பசி போல.. அதை குறித்து வெட்கப்படாமல் , சகஜமான ஒன்றாய் எடுத்தாள பழக்க வேண்டும்..

அப்போதே காமம் குறித்த வெறி குறையும்... .

Dino LA said...

ரசித்தேன்...