Thursday, February 12, 2009

மாநரக வாழ்க்கை

ஏழு மாதமல்ல
ஏழு ஆண்டுகள் ஆனாலும்
எதிர் வீட்டில் இருப்பது
யாரென்று தெரிந்துகொள்வதில்லை!
 
எத்தனை மாதங்களோ
இதே பேருந்து நிறுத்தத்தில்தான்
ஏறுகிறேன் இறங்குகிறேன்
என்னோடு பயணிப்பவர்களிடம்
இதுவரை அறிமுகம்
ஆனதே இல்லை!
 
கோவில்
சந்தை
பேருந்து நிலையம்
கடைத்தெரு.. இப்படி
நாள்முழுக்க
எங்கெங்கு சுற்றினாலும்
உறவு சொல்லி அழைக்க
இங்கு யாருமில்லை - அட
எவரையேனும் எவராவது
அழைக்கும் குரல் கூட
காதில் விழுந்ததில்லை!
 
பட்டப் பகலில்
தெருமுனை வீட்டின்
பூட்டை உடைப்பதைப்
பார்க்கும் நாம்
ஐயோ பாவம்
சாவியைத் தொலைத்துவிட்டான் போலும்
என பரிதாபப் பட்டுக்கொண்டே
அவசரமாய் எங்கோ செல்கிறோம்
வீடு திரும்பும்போதுதான் தெரிகிறது
அந்த வீட்டில்
அத்தனையும் திருடு போனது!
 
கோலி, பம்பரம்
கில்லி, கிளித்தட்டு
கபடி, பாண்டி
எங்கே?
தியேட்டரும், பீச்சும் தான்
பொழுது போக்கு இங்கே!
 
இரவில் கூட வீட்டைப் பூட்டாத
என் கிராமத்து வாழ்க்கை - இங்கு
நாள் முழுக்க பூட்டிய வீட்டினுள்
புழுங்கியே கிடக்கிறது!
 
வெள்ளத்தில் வீடுகள் மிதந்தாலும்
குளிக்க ஒரு குளம் கூட இல்லையடா
குடிக்கும் ஒரு செம்பு தண்ணீரும்
இங்கு பணம் தானடா!
 
வாசல் தாண்டி வந்துவிட்டால்
எல்லோரும் இங்கு அநாதையடா!
செயற்கை சிரிப்பினில்தான்
நகருது நகர வாழ்க்கையடா!
 

2 comments:

Anonymous said...

வாசல் தாண்டி வந்துவிட்டால்
எல்லோரும் இங்கு அநாதையடா!
செயற்கை சிரிப்பினில்தான்
நகருது நகர வாழ்க்கையடா
exactly.. no one ready to cares others whatever happened to nearby person..
இரவில் கூட வீட்டைப் பூட்டாத
என் கிராமத்து வாழ்க்கை - இங்கு
நாள் முழுக்க பூட்டிய வீட்டினுள்
புழுங்கியே கிடக்கிறது!
only the people those who spent their life in the village know this fact;;; life in village is aa different and live one..
but in village always skirmish like things are there..beyond this one can see the life in the village
i enjoyed other stanza also..
nice one... bask

manjoorraja said...

நகர வாழ்க்கையில் இவையெல்லாம் சகஜம் என்றாலும் கொஞ்சம் நாமும் முயற்சி செய்தால் நல்ல நட்பும் அண்டைவீட்டினரின் பழக்கங்களும் கிடைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.


மேலும் நகரங்களில் அவரவர்க்கு என ஆயிரம் பிரச்சினைகளும் வேலைகளும். கிராமங்களில் அந்த அளவுக்கு இல்லை.
எங்கிருந்தாலும் மனிதர்கள் தானே.