Saturday, January 31, 2009

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கனடாவில் மனிதச்சங்கிலி: 80,000 பேர் பங்கேற்பு

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்க ராணுவம் நடத்தி வரும் போரை நிறுத்தக் கோரியும் கனடா வாழ் தமிழர்கள் டொரன்டோ நகரில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.

நேற்று மதியம் 12 மணிக்குத் துவங்கி மாலை 6 மண் வரை நடந்த இந்தப் போராட்டத்தின் போது டொரன்டோ நகரில் காணப்பட்ட கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.  
 
இலங்கையில் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது சிறிலங்க ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலியான அப்பாவி மக்கள், குழந்தைகளின் உடல்கள் கொண்ட புகைப்படங்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் ஆகியோரின் படங்கள் கொண்ட பதாகைகளாக ஏந்தி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொருளாதார மையத்தை சுற்றிச் செல்லும் சுமார் 15 கி.மீ. சுற்றளவு உடைய பிரதான சாலைகளில், தமிழர்கள் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து நின்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

அந்நாட்டின் முக்கிய செய்தி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களின் மனிதச்சங்கிலி போராட்டத்தை நேரடி ஒளிபரப்புச் செய்தது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்க ராணுவத்தின் முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு நிவாரணம் சென்றடைய கனடா அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைக்கான தளத்தை அமைப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும் தமது கோரிக்கைகளை கனடா வாழ் தமிழர்கள் முன்வைத்தனர்.

இலங்கையில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதரவாக இங்கே நாங்கள் குரல் கொடுக்கிறோம் என மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த அமைப்பாளர் சுபான்கி கலநந்தன் அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த நாட்களில் கனடாவின் முக்கிய நகரங்களான ஒட்டாவா, மான்ரியல், கல்கேரி மற்று வன்கோவர் ஆகியவற்றிலும் மனிதச்சங்கிலி நடத்த கனடா வாழ் தமிழர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கனடாவில் இயங்கும் தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டின் முக்கிய அமைச்சர் ஒருவர், ஒரே நேரத்திலஇவ்வளவு மக்கள் திரண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியதைத் தாம் மதிப்பதாகவும், கனடா வாழ் தமிழர்களின் மன வலியை தாம் புரிவதாகவும் தெரிவித்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக தானும் இதர அமைச்சரவைச் சகாக்களும் கலந்தாலோசித்து கூடிய விரைவில் ஒரு முடிவுக்கு வர இருப்பதாகவும் அவர் கூறியதாக புதினம் இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: