டிவிட் வாலஸ் என்ற ஓர் அமெரிக்கச் சிறுவனுக்குச் சிறுவயதிலிருந்தே, புத்தகங்கள் படிப்பது என்பது தணியாத தாகமாக இருந்தது. தன் கைக்குக் கிடைத்த புத்தகங்களை எல்லாம் ஓயாமல் படித்துக் கொண்டேயிருந்தார். தாம் படித்தவற்றை உடனே உட்கிரகித்து, நினைவில் நிறுத்திக் கொள்ளும் ஆற்றலும் டிவிட் வாலசுக்கு இருந்தது.
டிவிட் வாலஸ், லில்லி என்ற ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகுதான் டிவிட் வாலசுக்குத் தெரிந்தது; அவரும் இவரைப் போலவே ஒரு புத்தகப் புழு என்று! இந்தத் தம்பதிகள் ஓர் ஆங்கில மாத இதழைத் துவக்கினர். டிவிட் வாலஸ் வாசகராக தாம் படித்த நூல்களின் கருத்தை ஜீரணம் செய்து கொண்டவற்றை மிகச் சுருக்கி, ஏறத்தாழ 30 நூல்களைக் கட்டுரைகளாக ஒவ்வொரு மாதமும் வெளியிட்டார்.
தாம் ஒரு வாசகர் (ரீடர்); தாம் ஜீரணித்ததை (டைஜஸ்ட்) வாசகர்களுக்கு மாத இதழுக்காகத் தந்ததால், அதற்கு "ரீடர்ஸ் டைஜஸ்ட்" என்று பெயரிட்டார். இன்று இந்தி உட்பட 20 மொழிகளில் ரீடர்ஸ் டைஜஸ்ட் வெளிவருகிறது.
பல்வேறு இதழ்களில், பல மொழிகளில் வரும், அறிவுசார்ந்த பல விஷயங்களை, ஒன்று திரட்டிச் சுருக்கமான சாறுபோல் தரும் இந்த இதழ், உலகெங்கிலுமுள்ள வாசகர்களை வசீகரித்து விட்டது. அவருடைய படிக்கும் பழக்கத்தையும், படித்துப் பலரிடம் கருத்தை பரிமாறிக் கொள்ளும் வடிகாலாகவும் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ், இன்றளவும் கொடிகட்டிப் பறக்கிறது!
டிவிட் வாலஸ், 1889ல் பிறந்து 91 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். சாகும் வரை சலிப்பின்றி படித்தார்.
- 50 தலைவர்களின் அரிய வரலாறு நூலிலிருந்து.
1 comments:
மிகவும் பயனுள்ள செய்தி கொடுத்ததிற்க்கு நன்றி உழவன் :)
Post a Comment