Friday, July 18, 2008

பிரகாஷ் காரத்-எம்.பிக்கள் சொத்து குவிப்பு: சிபிஐ விசாரணை கோரி வழக்கு!

 டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அவரது மனைவி பிருந்தா காரத் உள்ளிட்ட 10 சிபிஎம் தலைவர்கள் சேர்த்து வைத்துள்ள ரூ. 200 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அவரது மனைவி பிருந்தா காரத், எம்.பிக்கள் நிலோத்பால் பாசு, லட்சுமண் சேத், சுதன்சுசில், முகம்மது சலீம், ஹன்னன் மொல்லா, முன்னாள் மேற்கு வங்க அமைச்சர் பன்ஷ் கோபால் செளத்ரி, பொலிட்பீரோ உறுப்பினர் பிமன் பாசு, மூத்த தலைவர் பினாய் கொனார் ஆகியோருக்கு 7000 முழு நேர கட்சி ஊழியர்கள் உள்ளனர்.

இந்த முழு நேர ஊழியர்களுக்கு மாதம் ரூ. 3200 சம்பளம் தரப்படுகிறது. ஆனால் இந்தத் தலைவர்களின் மாத ஊதியம் என்ன என்ற விவரம் வெளியே தெரிவிக்கப்படுவதில்லை. அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த பத்து தலைவர்களும் ரூ. 200 கோடி அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளனர். எப்படி இதை சேர்த்தனர் என்பதை அறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ள நிலையில், காரத் உள்ளிட்ட சிபிஎம் தலைவர்கள் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

0 comments: