Tuesday, July 8, 2008

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் டெக்னாலஜி விவகாரங்கள்

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நிறைவேறும்போது நமது அணு ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்கள் IAEAவின் கண்காணிப்பின் கீழ் வரப் போவது என்னமோ நிச்சயம் தான் என்றாலும் அதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பில்லை என்பது இந்தத் துறையில் மூழ்கி முத்தெடுத்த விஞ்ஞானிகளின் கருத்து.

(இந்தியாவில் உள்ள 22 அணு ஆராய்ச்சி மையங்களில் 14 மட்டுமே IAEA கண்காணிப்புக்கு விடப்படும்.. மிச்சமெல்லமாம் ராணுவ உலைகள். அங்கே அவர்களுக்கு வேலையே இல்லை, உள்ளே அனுமதியும் இல்லை என்கின்றனர்.)

Hyde Act-டை (இது ஒப்பந்தத்துக்குள் வருமா வராதா என்ற சந்தேகங்கள் தீராவிட்டாலும்..) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த ஒப்பந்தம் நமக்குக் கிடைத்த பெரிய வரப் பிரசாதம் என்கி்ன்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.

நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூட இந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். இந்த ஒப்பந்ததின்படி, நாம் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை முறியடிக்க, தாக்குதலை முன் கூட்டியே தடுக்க (deterrent) இந்த சோதனையை நடத்தலாம். அதற்கான சலுகை ஒப்பந்தத்தின் உள் பிரிவுகளில் தரப்பட்டுள்ளது.

நாம் அணு ஆயுத நாடே இல்லை என்று சொன்னவர்கள், NPT-ல் (Non proliferation treaty) கையெழுத்து போட்டே ஆக வேண்டும் என்றவர்கள், அணு ஆயுதமே வைத்திருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று நாம் கையெழுத்தெல்லாம் போட வேண்டாம், அணு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம்... கூடவே உங்கள் அணு உலைகளுக்கு எரிபொருளைத் தருகிறோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் விட இந்திய அணு விஞ்ஞானிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் 'Dual use'. இதன்படி நாம் வாங்கும் யுரேனியத்தை வெறும் மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல் அதை ரீ-புராஸஸ் செய்து அப்படியே புளுட்டோனியமாக்கி அதை வைத்து அணு குண்டுகளையும் தயாரித்துக் கொள்ளலாம்.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மாதிரி, நாம் இத்தனை காலம் தவம் கிடந்ததும் இப்படி ஒரு ஒப்பந்ததுக்குத் தானே என்பது இந்திய அணு விஞ்ஞானிகளின் நிலை.

நமது இம்மீடியேட் பிரச்சனை யுரேனியமும் புளுட்டோனியமும்தான். நம் நாட்டில் தோரியம் ரிசர்வ் ஏகத்துக்கும் இருக்கிறது. ஆனால், தோரிய அணு உலைகளை உருவாக்குவதில் நாம் இன்னும் பெரிய அளவில் முன்னேறவில்லை.

யுரேனியத்தைக் கொண்டு இயங்குவது Pressurized Heavy Water Reactors. நம்முடைய பெரும்பாலான அணு உலைகள் இந்த ரகம் தான்.

இதை விட கொஞ்சம் முன்னேறிய டெக்னாலஜி Fast Breeder Reactors. இதில் எரிபொருள் புளுட்டோனியம்.

மூன்றாவதான லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தான் தோரியம் மூலம் இயங்கும் அணு உலைகள். இந்த அணு உலைகளை டிசைன் செய்வதில் தான் இப்போது இந்தியா முழு மூச்சோடு இறங்கியிருக்கிறது.

தோரியம் அணு உலைகளை கட்டுவதில், செயலாக்குவதில் நாம் மாஸ்டர் ஆகிவிட்டால், நாமே ஒரு வருட நோட்டீஸ் தந்துவிட்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிடலாம். அவ்வளவு தோரியம் இருக்கிறது நம்மிடம்.

ஆனால், அதுவரை... யுரேனியம், புளுட்டோனியம் தான் ஒரே வழி. அதைப் பெற வேண்டுமானால் Nuclear Supply Group (NSG)ன் கடைக் கண் பார்வை வேண்டும். அந்தப் பார்வையையை வாங்கித் தரப் போகிறது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.

மேலும் அணு உலைகள் தொடர்பாக லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை நமக்கு அமெரிக்கா தரும். தோரியம் அணு உலைகளை உருவாக்குதில் நாம் சந்தித்து வரும் சிரமங்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொழில்நுட்பம் தந்து உதவும்.

அதே போல நமது யுரேனியம் அணு உலைகளுக்குத் தேவையான சப்ளையை தங்கு தடை இல்லாமல் அமெரிக்கா வழங்கும். நாம் தேவையான அளவை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வாங்கிக் குவித்து ரிசர்வ் கூட வைத்துக் கொள்ளலாம் (stockpile).

சரி.. அமெரிக்கா ஏன் இப்படி ஓடி வந்து நமக்கு உதவ வேண்டும். ஒன்று நான் முன்பே சொன்ன strategic காரணங்கள். எதிர்கால உலக அமைதி, பாதுகாப்பு, மற்றும் தனது பாதுகாப்பில் இந்தியாவி்ன் பங்கு நிச்சயம் இருக்கும் என அமெரிக்கா நம்புவது.

இரண்டாவது 'பிஸினஸ்'. இன்றைய நிலையில் உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சியைக் காட்டி வரும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 'டபுள் டிஜிட்' பணவீக்கம் நமது வண்டியின் டயர்களை பஞ்சர் பார்த்தாலும் என்ஜின் கெட்டி... நாம் நம்புகிறோமோ இல்லையோ (குறிப்பாக இடதுசாரிகள்..), அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா எங்கேயோ போய்விடும் என உலக நாடுகள் நம்புகின்றன.

பொருளாதாரரீதியில் முன்னேறிய நாடு என்றால் என்ன அர்த்தம், மிகப் பெரிய வர்த்தக சந்தை என்பது தானே. அந்த சந்தையை தன் கையை விட்டு நழுவி விடாமல் இருக்க அமெரிக்கா போட்டுள்ள மாஸ்டர் பிளான்களில் ஒன்று தான் இந்த ஒப்பந்தம்.

நான் முதல் கட்டுரையில் சொன்னது தான்... இதே அளவி்ல் நமது வளர்ச்சியை தொடர்ந்து நிலை நிறுத்த அல்லது மேலும் அதிகரிக்க முதலில் நம் மின்சார உற்பத்தி அதிகரிக்க வேண்டும். (2020ம் ஆண்டில் நமது மின் உற்பத்தி 20,000 மெகாவாட்டாக உயர்ந்தாக வேண்டும்).

அதற்கான ஒரே வழி அணு மின்சாரம் தான்.

அதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வழி செய்வது மட்டும் தான் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம். உண்மையில் அதை வழங்கப் போவது அமெரிக்காவி்ன் GE, Westinghouse போன்ற அணு மின் தயாரிப்பில் கரை கண்ட முன்னணி நிறுவனங்கள்.

அவர்களுக்கு இந்தியாவுடனான அணு தொழில்நுட்ப வர்த்தகம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிஸினஸ்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. அவ்வளவு தூரத்துக்கு வியாபாரம் நடக்கப் போகிறது.

கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் பிஸினஸ் இது என இப்போதே அமெரிக்க வர்த்தக சபை (United States chamber of commerce) கணக்குப் போட்டு வைத்துக் கொண்டு ஒப்பந்தம் வேகமாக நிறைவேறாதா என காத்திருக்கிறது.

இத்தனை விவகாரங்களையும் அலசி-ஆராய்ந்து பார்த்தால் ஹைட் ஆக்ட் அல்லாத இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நமக்கு கொடுக்கப் போவதெல்லாம் நிறைய நன்மைகளைத் தான்.

ஆனால், இதே போன்ற ஒப்பந்தத்தை சீனாவுடன் அமெரிக்கா செய்து கொண்டபோது வாய் திறக்காத இடதுசாரிகள் இப்போது மட்டும் கூச்சல் போடுவதற்குக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர்களை அவர்களது சித்தாந்த கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியம்.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் பிரான்ஸ்சுடனோ, ரஷ்யாவுடனோ செய்யப்பட்டால் அமைதியாக இருந்திருப்பார்கள். அவர்களது முதல் எதிரியான அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் அவர்களால் தாங்க முடியவில்லை.

அதுவும், தங்களது தயவில் ஆட்சியில் இருக்கும்போதே அரசு இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வது என்பது தங்களது சிவப்பு கொடியில் விழும் அழியாத கறையாகிவிடும் என்று நினைக்கின்றனர்.

அடுத்ததாக அணு தொழில்நுட்ப வியாபாரம் முலம் இந்தியாவை விட அமெரிக்கா தான் அதிகமான பலன்களை அடையப் போகிறது என நினைக்கின்றனர் இடதுசாரிகள்.

ஆனால், இடதுசாரிகளை எதிர்ப்போர் சொல்வது.. இவர்கள் சீனாவின் ஜால்ராக்கள். தங்களுக்கு இணையாக இந்தியாவும் வளர்ந்துவிடுமோ என்ற அஞ்சும் சீனா தான் இவர்களைத் தூண்டி விடுகிறது. அணு ஒப்பந்தத்தை தடுக்கப் பார்க்கிறது...

இதையெல்லாம் விட அதிர்ச்சியான சில கட்டுரைகள் எல்லாம் பாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவி்ட்டன. இந்த ஒப்பந்தத்தை ஏற்க வைப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான பணம் கைமாறிவிட்டது.... என்றரீதியில் அந் நாட்டு பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.

ஆனால், இப்படிப்பட்ட கட்டுரைகளை பத்திரிக்கைகளில் திணிப்பதே பாகிஸ்தானின் உளவு அமைபபான ஐ.எஸ்.ஐ தான் என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

நமக்கு கிடைக்காத ஒரு ஒப்பந்தம் இந்தியாவுக்கு கிடைக்கிறதே என்ற வேதனையில், இப்படி தகவல்களை பரப்புகிறது ஐஎஸ்ஐ என்கின்றனர்.

இப்படி இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் டெக்னாலஜி விவகாரங்கள், ஹைட் ஆக்ட் போன்ற சட்ட சிக்கல்கள், சீனா-பாகிஸ்தானி்ன் 'உள்' வேலைகள், சித்தாந்த மோதல்கள், பிஸினஸ் முதலைகள், அரசியல் சர்க்கஸ்கள், IAEA போன்ற சம்பிரதாயங்களைத் தாண்டித்தான் வென்றாக வேண்டும்...

இதையெல்லாம் பார்க்க இன்று புத்தர் இருந்திருந்தால், நி்ச்சயம் சிரித்திருக்க மாட்டார்...

அதே நேரத்தில் இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்டு காங்கிரஸ் படும் பாட்டைப் பார்த்தால் நாடே சிரி்ப்பாய் சிரிக்கிறது!
  
 நன்றி : எழுதியவருக்கும், மின்னஞ்சலில் இதை அனுப்பியவருக்கும்

1 comments:

Anonymous said...

migavum usefull laana oru katturai

anu aayitha oppanthathai patti kulappam ellorukkum undu.
antha vagaiyil informative aaka irukirathu - nalla pathivu