Tuesday, July 1, 2008

கோவில் தேங்காயில் ஓட்டல்களில் சட்னி

ஆமதாபாத்தில் உள்ள, தென்னிந்திய உணவகங்களில் சாப்பிட்டால், நீங்கள் ஒரு தெய்வீக அனுபவத்தைப் பெறலாம். இட்லி, தோசை சாப்பிடுவதன் மூலம் எப்படி தெய்வீக மணம் கமலும் என நீங்கள் கேட்கலாம். இட்லி, தோசைக்கு வழங்கப்படும் சட்னியே அதற்குக் காரணம்.
 
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள கோவில்களுக்கு வழிபாடு நடத்த வரும் பக்தர்கள், தேங்காய் உட்பட பல பொருள்களை பூஜை பொருட்களாகக் கொண்டு வருகின்றனர். இந்தத் தேங்காய்களை உடைக்கும்போது, அதில் சரி பாதியை பக்தர்களுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை சுவாமிக்கு அர்ச்சகர்கள் படைக்கின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு ஏராளமான தேங்காய் குவிகிறது. அவை அனைத்தையும், கோவில் நிர்வாகத்தினரால் பயன்படுத்த முடியவில்லை என்பதனால், அவற்றில் கணிசமானவை, ஓட்டல்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
 
மார்க்கெட்டிற்குப் போனால், ஒரு சராசரி அளவு தேங்காயை 10 ரூபாய்க்கு வாங்கலாம். ஆனால், கோவில்களில் உடைக்கப்பட்ட இந்த தேங்காய்கள் 10 ரூபாய்க்கு அதிக அளவில் வழங்கப்படுகின்றன. அதாவது மூன்று முழுத் தேங்காய்களுக்கு சமமான தேங்காய்கள் வழங்கப்படுகின்றன. எனவே, ஓட்டல் நிர்வாகத்தினர் பலர் இவற்றை விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக, தென்னிந்திய உணவகங்கள் இவற்றை பெருமளவு பயன்படுத்துகின்றன.
 
இதனால், தேங்காய்கள் அழுகி தூர வீசப்படுவது தடுக்கப்படுவதோடு, கோவிலுக்கும் கணிசமான அளவில் வருமானம் கிடைக்கிறது.
 
ஓட்டல் உரிமையாளர்களும் குறைந்த விலையில் தேங்காய்களைப் பெற்று லாபம் அடைகின்றனர். 'ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்களிடமிருந்து 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேங்காய்கள் கிடைக்கின்றன. அவற்றை எல்லாம் கோவிலுக்கு பயன்படுத்த முடியாது என்பதால், குறைவான விலைக்கு ஓட்டல்களுக்கு விற்கிறோம்' என்கின்றார் பிரபல கோவில் ஒன்றின் குருக்கள்.
 
செய்தி : தினமலர்

0 comments: