Thursday, June 5, 2008

முதியோருக்கு பாதுகாப்பில்லா சென்னை

டெல்லி: இந்தியாவின் பெருநகரங்களில் முதியவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சென்னையில்தான் முதியவர்களுக்கு அதிகளவுக்கு பாதுகாப்பற்ற நிலைமை இருப்பதாகவும அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஹெல்ப்ஏஜ் இந்தியா' நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,இந்தியாவின் நான்கு பெருநகரங்கள் மற்றும் நான்கு அடுத்த நிலை நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நகரங்களில் முதியவர்களின் நிலை எப்படி உள்ளது என்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.இந்த ஆய்வில், நாட்டின் பெருநகரங்களை விட அடுத்த நிலை நகரங்களில்தான் முதியவர்களுக்கு சமூக பாதுகாப்பு அதிகம் உள்ளது தெரிய வந்தது.சிறு நகரங்களில் முதியவர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் வாழ்கின்றனர். அவர்களின் உடல் நலமும் சிறப்பாக உள்ளதுடன் இந்த நகரங்களில்தான். சமுதாயம் இவர்களிடம் மிகுந்த பாதுகாப்பாகவும், அக்கறையுடனும் உள்ளது.

பெருநகரங்களை விட சிறு நகரங்களில்தான் முதியவர்கள் மிகுந்த நிம்மதியுடன் உள்ளனர்.சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களிலும், லக்னோ, விஜயவாடா, புவனேஸ்வர், அகமதாபாத் ஆகிய சிறு நகரங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.62 சதவீத முதியவர்கள், பொருளாதார ரீதியாக தங்களது பிள்ளைகளை நம்பியுள்ளனர். இதுதான் அவர்களது பாதுகாப்பின்மை நிலைமைக்கு முக்கிய காரணம்.

வேலைவாய்ப்பு, சம்பாதிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக பிள்ளைகள், தங்களது பெற்றோர்களை விட்டுப் பிரிந்து வாழ விரும்புகின்றனர். இதனால் தனிமையிலும், மனக் கவலையிலும் வாழும் நிலைக்கு முதியவர்கள் தள்ளப்படுகின்றனர்.32 சதவீத முதியவர்கள்தான் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளைப் பெறுகின்றனர்.பொருளாதார ரீதியாகவும், உடல் நல ரீதியாகவும் பாதிக்கும் மேற்பட்ட முதியவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறுகின்றனர். போதிய சேமிப்பு இல்லாதது, குழந்ைதகளை நம்பியிருப்பது, பெருகி வரும் பண வீக்கம் ஆகியவையே இதற்குக் காரணம்.

தனிமையில் இருப்பது, பணச் சிக்கல், உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறும் முதியவர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாகும்.மருத்துவ தேவைகள், மருந்துகள் வாங்குவது உள்ளிட்டவற்றுக்கு பிறரின் உதவியை நாடும் நிலையில் 42 சதவீதம் பேர் உள்ளனர்.அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அடுத்தவர்களின் உதவியை அதிகம் நாடுவது வயதான பெண்மணிகள்தான்.மூன்றில் 2 மடங்கு முதியவர்கள், ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரத்திற்கு இடம் பெயர்ந்தவவர்கள்.

அதேசமயம், மூன்றில் ஒரு பங்கு முதியவர்கள், பிறப்பிலிருந்தே நகரத்தில் வசிப்பவர்கள்.பிள்ளைகளின் புறக்கணிப்பு, கவனிப்பின்மை ஆகியவை காரணமாக அதிகம் கவலைப்படுவது வயதான பெண்கள்தான்.சாதாரண நகரங்களில் வசிக்கும் முதியவர்களில் 40 சதவீதம் பேர் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். அதேசமயம், இந்த எண்ணிக்கை பெருநகரங்களில் 28 சதவீதம் மட்டுமே உள்ளது.அதேசமயம், உடம்புக்கு முடியாத முதியவர்களிடம் பரிவு காட்டுவதில், சிறு நகரங்கள் முன்னணியில் உள்ளன. அதாவது 82 சதவீதம் பேர், அதாவது பிள்ளைகள், தங்களது பெற்றோர் மற்றும் முதியவர்கள் மீது பரிவு காட்டுகின்றனர்.

முதியவர்களைப் புறக்கணிக்கும் சென்னை:பெருநகரங்களைப் பொறுத்தவரை, முதியவர்களிடம் பரிவு காட்டுவதில், டெல்லி முதலிடத்தில் உள்ளது. 86 சதவீத பிள்ளைகள் தங்களது வீட்டில் உள்ள முதியவர்களிடம் அக்கறை காட்டுகின்றனர்.இருப்பதிலேயே மோசமான நகரம் சென்னைதான். இங்கு 52.7 சதவீதம் பேரே முதியவர்களிடம் பரிவு காட்டுகின்றனர்.

முதியவர்கள், தங்களது பொழுதுபோக்காக வைத்திருப்பது, டிவி பார்ப்பது, கோவில்களுக்குப் போவது, கடைகளுக்குப் போவது மற்றும் வாக்கிங் ஆகியவைதான்.முதியவர்கள் மனதில் நிலவும் பாதுகாப்பின்மை உணர்வைப் போக்க அவர்களிடம் மனம் விட்டுப் பேசுதல், அவர்களிடம் ஆதரவாக, அனுசரணையாக இருப்பது ஆகியவை முக்கியம். அப்படி இருந்தால், முதியவர்கள் தற்கொலை செய்வது உள்ளிட்ட கொடுமைகள் நீங்க வழி உண்டு என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி: தட்ஸ் தமிழ்

0 comments: