Wednesday, June 4, 2008

குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !

இளைய தளபதி விஜயின் குருவி படத்தை சிறப்புக் காட்சியாக கலைஞருக்கு
போட்டுக் காண்பித்து, விமர்சனம் எழுதித்தரச் சொல்லி தலையை சொறிகிறார்,
அந்த படத்தின் இயக்குனர் தரணி. பேரன் உதயநிதியின் படம் என்பதால் அரைமனதாக
ஒப்புக் கொள்கிறார் கலைஞர், இனி கலைஞரின் விமர்சனம் இங்கே,

********
குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !

உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கம், தளபதி ஸ்டாலினின் தனயன்,
இளைய சூரியன் உதயநிதியின் பெரிய சூரியன் நிறுவனத்தின் ( RED Giant) படம்
தான் குருவி. குருவி என்றால் சுறுசுறுப்பு, குருவி என்றால் பரபரப்பு,
குருவி என்றால் அரவணைப்பு, குருவி என்றால் கூட்டுக் குடும்பம், அப்படிப்
பட்ட ஒரு கதையை சுமந்து வருவது தான் குருவி.

இந்த படத்தை சிறப்புக் காட்சியாக எனக்குப் போட்டுக் காட்டினார்கள், தம்பி
தரணியின் மற்றொரு தங்கமான படைப்புதான் குருவி. அன்பு தம்பி இளைய தளபதி
என்னும் இளைய சூராவளி விஜயின் மற்றொரு வெற்றிப் படம் தான் குருவி.

தமிழகத்தில் இந்த படத்தை எடுத்து இருந்தால் பொதுமக்களே
எதிர்த்திருப்பார்கள். காரணம் அமைதிச் சோலையான தமிழகத்தில் கொத்தடிமை
முறை என்பது திமுக முதல் முறை அரியணை ஏறிய போதே ஒழிக்கப்பட்டுவிட்டது.
தம்பி தரணி அண்டை மாநிலம் கடப்பாவில் நடக்கும் கொத்தடிமையை களைவதற்கு
கடப்பாடு கொண்டு தன்னாலான முயற்சியை நன்றாக செய்து இருக்கிறார்.

கண்குளிர மலேசிய காட்சிகள், சீறிப்பாயும் காளையென விஜயின் அதிரடி
சண்டைக்காட்சிகள். மின் தூக்கியில் அடைக்கப்பட்டு மீண்டுவரும் இளைய தளபதி
விஜய், சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனோகராவை நினைவு படுத்துகிறார். அழகு
பதுமையாக வனிதை திரிசா காதல் பாடல்களில் இளைஞர்களின் மனைதை
கொள்ளையடிக்கிறார். பாடல் காட்சிகளில் பம்பரமாக சுழன்றாடும் விஜய்
பரவசப்படுத்துகிறார். அன்று தாயைக் காத்த தனயனாக மனோகரா இன்று தந்தையை
காட்கும் தனயனாக வெற்றிவேலுவாக விஜய் என் நினைவுகளையெல்லாம் ஐம்பது
ஆண்டுகளுக்கு பின்னால் இட்டுச் செல்கிறார். முதல் பத்து நிமிடங்கள்
(மட்டும்) வந்தாலும் சின்னக் கலைவாணர் விவேக்கின் நகைச்சுவை நம் நாடி
நரம்புகளையெல்லாம் சிரிக்க வைக்கிறது.

படத்தின் சிறப்பென ஆசிஸ்வித்யார்த்தியின் அருமையான நடிப்பு, தம்பி
சுமனின் வில்லத்தனம், தம்பி வித்யாசாகரின் தரமான இசை, கழக உடன்பிறப்பு
மணிவண்ணனின் குணச்சித்திர நடிப்பு இப்படி எதைவிடுவது எதைச் சொல்வதென்றே
இந்த படத்தைப் பார்த்த நான் திக்குமுக்காகிவிடுகிறேன்.

கனவு பாடல்களுக்காக வனிதை திரிசாவா, திரிசாவுக்காக கனவுப் பாடல்களா ?
உங்களோடு சேர்ந்து எனக்கும் ஐயம் ஏற்படுகிறது.. முதல் (தர) காட்சிகளில்
வந்து இளமையை கிள்ளிச் செல்கிறார் படர்ந்த பருவக் கொடி மாளவிகா.

குருவி - இது வணிகம் சார்ந்த திரைப்படம் அல்ல. ஏழை எளியவர்களின்
கொத்தடிமை துயர் துடைக்கும் பாடம். கழக உறுப்பினர்கள் அனைவரும் இந்த
திரைப்படத்தைப் பார்த்து, பயன்பெற்று தம்பி விஜயையும், இயக்குனர்
தரணியையும் தாராளமாகப் போற்றலாம்.

குருவி மூன்றெழுத்து
விஜய் மூன்றெழுத்து
தரணி மூன்றெழுத்து
திரிசா மூன்றெழுத்து
சுமன் மூன்றெழுத்து
விவேக் மூன்றெழுத்து

மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து,
தலையெழுத்து !

பின்குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை விமர்சனம், இதில்
அரசியல் எதுவும் இல்லை.
 
நன்றி : எழுதியவருக்கும், இதை மின்னஞ்சலில் அனுப்பியவருக்கும் 

2 comments:

ambi said...

இதை எழுதியது கோவி.கண்ணன் என்ற பதிவர், வ.வா சங்கத்தில்.


முடிந்தால் சுட்டியையும் தருகிறேன். :)

ambi said...

இதோ அந்த சுட்டி:

http://vavaasangam.blogspot.com/2008/05/blog-post_05.html