Monday, May 5, 2008

அட்சய திரிதியையையொட்டி தங்கம் விலை குறைய வாய்ப்பு

சென்னை: அட்சய திரிதியையொட்டி தங்கம் விலை குறையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு அட்சய திரிதியையின்போது இருந்ததைவிட தங்கம் பவுனுக்கு ரூ.1,400 அதிகரித்துள்ளது. ஆனால் சர்வதேச மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் காரணமாக தங்கத்தின் விலை குறையும் என்று நம்பப்படுகிறது. இதனால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று தெரிகிறது.

ஏப்ரல் மாதம் 14ம் தேதிக்கும் மே மாதம் 14ம் தேதிக்கும் இடைப்பட்ட சித்திரை மாத வளர்பிறை காலத்தில் 3ம் பிறை தோன்றும் நாள்தான் `அட்சய திரிதியை' நாள் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சந்திரனும், சூரியனும் உச்சம் பெற்று இருக்கும்.

அட்சய திரிதியை தினத்தில் தான் திருமாலின் 6-வது அவதாரமாகிய பரசுராமன் அவதரித்ததாகவும், சொர்க்கத்தில் இருந்து கங்கை பூமிக்கு வந்த தினமாகவும், திரேதா யுகத்தின் தொடக்கம் அட்சய தினத்தில்தான் வந்ததாகவும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.

அட்சய திரிதியை அன்று தங்கம், வெள்ளி, நிலம் உள்பட ஏதாவது ஒன்றை வாங்கினால் அது பல மடங்காக பெருகி செல்வம் கொழிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், அன்றைய தினம் குண்டு மணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தவிர, புதிய தொழில் தொடங்குவது, வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்குவது போன்றவற்றை இந்த தினத்தில் மேற்கொள்கின்றனர்.

அட்சய திரிதியை வரும் 8ம் தேதி வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்கம் விலை தற்போது உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு அட்சய திரிதியை நாளான ஏப்ரல் 19ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 876 ரூபாயாகவும், ஒரு பவுன் 7,008 ரூபாயாகவும் இருந்தது.அதன் பிறகு தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ1000த்தை தாண்டியது. ஒரு பவுன் 8 ,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் கடந்த மார்ச் 18ம் தேதி உச்சக்கட்டமாக, ஒரு பவுன் ரூ.10,000 தாண்டி பயமுறுத்தியது.தங்கத்தை நினைத்து பார்க்க கூட முடியாத என்ற சூழ்நிலை மெல்ல மாற தொடங்கியது. தங்கம் விலை மெல்ல குறையத் தொடங்கியது.

கடந்த ஆண்டு அட்சய திரிதியை தினத்தில் தங்கத்தின் விலையை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தங்கம் ரூ.1,400 அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த ஆண்டை விட தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையலாம் என்று கருதப்படுகிறது.

மார்ச் மாதத்தில் பவுனுக்கு ரூ.10,000த்தை தாண்டிய தங்கம் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.8,400 அளவிலே விற்பனை செய்யப்படுகிறது. இது மேலும் குறையலாம். இதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அட்சய திருதியை தினத்தில் தங்கம் விற்பனை அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 13 வாரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அவுன்ஸ் தங்கம் 862.40 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால் 50 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை தங்க வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ் ஹூடியா தெரிவித்தார்.

தங்கத்தின் விலை நிலவரம் இந்த வாரம் பொறுத்திருந்தால்தான் தெரியும். கூடுமா குறையுமா என்று. தங்கம் விலை எகிறினாலும் நம் மக்கள் பின் வாங்கமாட்டார்கள் என்று அட்சய திரிதியை சலுகைகளை நகைக்கடைகள் ஏகமாக அறிவித்துள்ளன. கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க பலர் முன்பதிவு செய்துள்ளனர்.

0 comments: