Tuesday, May 6, 2008

தங்கக்காசு மோசடித் திட்டம்: பல நடிகர் நடிகையருக்கு தொடர்பு

சென்னை: சென்னையில் நடந்த தங்கக்காசு மோசடித் திட்டத்தில் பல நடிகர், நடிகைகளுக்குத் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைககளிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கோல்ட் குவெஸ்ட் இன்டர்நேஷனல் என்கிற பெயரில் சென்னை சேத்துப்பட்டு மெக்நிக்கலஸ் சாலையில் இயங்கி வந்த நிறுவனம் தற்போது பெரும் சர்ச்சையில் உள்ளது. எம்.எல்.எம். எனப்படும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் கான்செப்ட்டில் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது.

அதாவது ஒருவர் உறுப்பினராக சேர வேண்டும். அவர் மேலும் பலரை உறுப்பினராக சேர்த்து விட வேண்டும். ஒரு உறுப்பினர் 3 பேரை சேர்க்க வேண்டும். அவர்களுக்கு கமிஷன் தொகை கிடைக்கும். மேலும் தங்கக்காசும் பரிசாக கிடைக்கும்.இந்த திட்டத்தின் கீழ் பலர் இணைந்துள்ளனர்.ஆனால், வாடிகையாளர்களை பிடித்து கொடுக்க முடியாமல் பலர் பாதியிலேயே நின்று விட்டதால் அவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்காது.

இவ்வாறு லட்சக்கணக்கானோர் பணம் கட்டிய நிலையில் திட்டத்தில் தொடர முடியாமல் கட்டிய பணத்தை இழந்துள்ளனர்.பலருக்கும் பட்டை நாம் போட்டுள்ளது கோல்ட் குவெஸ்ட் நிறுவனம்.மேலும் இந்த நிறுவனம் சப்ளை செய்த தங்க கடிகாரம், டாலர், பயோடிஸ்க் போன்ற பொருட்களும் தரமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

திணேஷ்குமார் என்பவர் இதுகுறித்து போலீஸில் புகார் கூறப் போக, கோல்ட் குவெஸ்ட் நிறுவனத்தின் குட்டு உடைந்தது. இதுதொடர்பாக பெண் தொழிலதிபர் புஷ்பம் உள்பட இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் சேத்துப்பட்டில் செயல்பட்டு வந்த தங்க காசு நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.21 கோடி மதிப்புள்ள 71 கிலோ தங்க காசுகளை பறிமுதல் செய்தனர்.

தலைவன் 'தத்தோ' விஜய ஈஸ்வரன்:இந்த மோசடிக் கும்பலின் தலைவராக ஆந்திராவைச் சேர்ந்த விஜய ஈஸ்வரன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவருக்கு தத்தோ என்ற செல்லப் பெயரும் உண்டாம். இவர் உலகம் முழுவதும் சென்று ஆங்காங்கு நிறுவப்பட்டுள்ள தனது மோசடி நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பார்த்துக் கொள்வாராம்.

இவருக்கு பல நாடுகளிலும் தொடர்பு இருப்பதால் இன்டர்போல் மூலம் விஜய ஈஸ்வரனைப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த மோசடி வலையில் ஏராளமான நடிகர், நடிகைகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு வில்லன் நடிகர் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் தற்போது டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.அவரே நேரடியாக சேத்துப்பட்டு பகுதியில் கிட்டத்தட்ட பிரசாரம் செய்வது போல மக்களை சந்தித்து இந்தத் திட்டம் குறித்துக் கூறி ஆள் பிடித்துக் கொடுத்தாராம்.

இதேபோல பிரபல நடிகை ஒருவரும் இந்த மோசடித் திட்டத்திற்கு உதவியாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.இதையடுத்து யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற பட்டியலை போலீஸார் சேகரித்து வருகின்றனர். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.இந்தத் திட்டத்தால் பல லட்சம் பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழக அளவில் மட்டும் நடந்த மோசடி தெரிய வந்துள்ளது. ஆனால் வெளி மாநிலங்களுக்கும் இந்த மோசடி பரவியிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். எனவே இந்த வழக்கு சிபிஐ வசம் அல்லது சிபிசிஐடி வசம் போகக் கூடிய வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கிடையே வட சென்னை இணை போலீஸ் கமிஷனர் ரவி, துணை போலீஸ் கமிஷனர் சம்பத் குமார், உதவி போலீஸ் கமிஷனர் ராஜாராம், தலை மையில் போலீசார் நேற்று இரவு 9 மணிக்கு இந்த நிறுவனத்தில் மீண்டும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அங்கு ஒரு ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கிலோ தங்க நாணயங்களையும், 800 கிலோ வெள்ளி நாணயங்களையும் பறிமுதல் செய்தனர். 150 செல்போன்களும், கை கடிகாரங்களும், ஆண்மை சக்தியை அதிகரிக்கும் பவர் டிஸ்க் 300ம் கைப்பற்றப்பட்டன.கைப்பற்றப்பட்ட தங்க நாணயங்களில் அன்னை மேரி, அஷ்டலட்சுமி, போப் ஜான்பால் மற்றும் தலைவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, காமராஜர், அம்பேத்கார், முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

0 comments: