Tuesday, May 6, 2008

நாலந்தா பல்கலை கௌரவ பேராசியராக கலாமுக்கு ஆதரவு

டெல்லி: நாலந்தாவில் அமைக்கப்படவுள்ள புதிய பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு கௌரவ பேராசிரியர் பதவி வழங்கப்படவுள்ளது.பீகார் மாநிலத்தில் பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த பகுதியில் அதன் நினைவாக புதிய நாலந்தா பல்கலைக்கழகத்தை அம்மாநில அரசு அமைக்கவுள்ளது.

அரசு சார்பற்ற, லாப நோக்கமில்லாத இந்த புதிய தன்னாட்சி பல்கலைக்கழகம், கிழக்காசிய பிராந்தியத்தை சேர்ந்த 16 நாடுகளின் ஒத்துழைப்புடன் தொடங்கப்படுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகளை இந்திய பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான பேராசிரியர் அமர்தியா சென் தலைமையிலான புரவலர் குழு செய்துவருகிறது.

இந்த புரவலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் நடந்தது. இந்தியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அப்போது குழுவின் தலைவர் அமர்த்தியா சென் பேசுகையில், நாலந்தா பல்கலைக்கழக கௌரவ பேராசிரியர் பதவிக்கு அப்துல் கலாமை பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது. இது பாராட்டுக்குரியது. சர்வதேச புகழ் வாய்ந்த ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதன் மூலமாகத்தான் இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம் நிறைவேறும்.

நாலந்தா பல்கலைக்கழக நிர்வாக விதிமுறைகள், செயல்பாடுகள் குறித்து கொள்கை வரைவுகள் தயாரிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தை விரைவில் தொடங்கி செயல்படுத்துவதற்கு வசதியாக உடனடியாக வேந்தர் மற்றும் பதிவாளர் பதவிகளை நிரப்பவேண்டும்.தேவையான பேராசிரியர்களை நியமித்தல், ஊதியம், மாணவர் சேர்க்கை மற்றும் கல்விக்கட்டணத்தை தன்னிச்சையாக நிர்ணயிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கவேண்டியது அவசியம்.

பௌத்தவியல், தத்துவயியல், வரலாறு, பன்னாட்டு உறவுகள், நிர்வாகவியல், மொழியியல், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின்கீழ் பல்வேறு பாடத் திட்டங்கள் ஏற்படுத்தப்படுகிறது.அடுத்தாண்டு இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் மேற்கண்ட துறைகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார்.

0 comments: