Friday, May 23, 2008

ரஜினி உதவி

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என பல அவதாரம் எடுத்து கலக்கி வரும் ராகவ லாரன்ஸ் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி செய்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் தான் குடியிருந்து வந்த வீட்டை ஆதரவற்றோருக்காக ஒதுக்கியுள்ளார் லாரன்ஸ். அங்கு ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டோரை அங்கு தங்க வைத்து பேணிப் பாதுகாக்கிறார்.இதற்காக ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையையும் அவர் தொடங்கியுள்ளார். இங்கு 45 பேர் தங்கியுள்ளனர். இதற்குத் தேவையான நிதியை அவர் கலை நிகழ்ச்சிகள் மூலம் சேகரிக்கிறார்.

இதில் விசேஷம் என்னவென்றால் இந்த இல்லத்தில் தங்கியுள்ள பல ஊனமுற்ற இளைஞர்கள் சூப்பராக டான்ஸ் ஆடுவதுதான். எல்லாம் லாரன்ஸ் கொடுத்த பயிற்சி. கால்கள் நன்றாக உள்ளவர்களுக்கு இணையாக இவர்களும் அட்டகாசமாக ஆடுகிறார்கள்.இந்த கலைஞர்களை வைத்து கலை நிகழ்ச்சிகளையும் லாரன்ஸ் நடத்துகிறார். மேலும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு இவர்களையும் அழைத்துச் சென்று ஆட வைத்து அனைவரிடமிருந்தும் ஆசிகளையும், அங்கீகாரத்தையும் வாங்கித் தர லாரன்ஸ் மறப்பதில்லை.

லாரன்ஸின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்ததைப் போலவே சூப்பர் ஸ்டார் ரஜினியையும் கவர்ந்துவிட்டது. சட்டென்று போனை எடுத்து பட்டென்று லாரன்ஸிடம் பேசிய ரஜினி, உடனே வந்து என்னைப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.அடுத்த நிமிடமே மின்னலென பாய்ந்து ரஜினி முன்பு போய் நின்றார் லாரன்ஸ். அவரிடம் தனது இல்லம் குறித்து விளக்கிக் கூறினார். அதைக் கேட்டுக் கொண்ட ரஜினி, இந்த இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆயுட்காலம் முழுவதும் நானே சாப்பாட்டுச் செலவினை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூற இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போனார் லாரன்ஸ்.

ரஜினிக்கு நன்றி சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் திரும்பியுள்ளார். ரஜினியுடன் லாரன்ஸுக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு பாபா படம்தான். அதில் வந்த மாயா மாயா பாடலுக்கு லாரன்ஸ்தான் மாஸ்டர். அதைத் தொடர்ந்து சிவாஜியில் அதிரடிக்காரன் பாட்டுக்கு டான்ஸ் போட்டார். இப்போது குசேலனிலும் ரஜினியை ஆட வைக்கிறாராம் லாரன்ஸ்.

0 comments: