Thursday, May 22, 2008

ஷாரூக்கானின் அதிரடி எஸ்.எம்.எஸ்

தொடர்ந்து மோசமாக விளையாடிவரும் தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை  உற்சாகப்படுத்தும் விதமாக அதேநேரத்தி்ல கண்டிப்பு கலந்த எஸ்எம்எஸ் செய்தியை அணி உறுப்பினர்களுக்கு அதிரடியாக அனுப்பி கலக்கியுள்ளார் ஷாரூக் கான்.

பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் வசீகரத்தை யாரும் மறுக்க முடியாது. அவரிடம் உள்ள சிறப்பு அம்சமே ரொம்பவும் அதிகமாக பேசாமல்,  அதேநேரத்தில் சொல்லவேண்டிய விஷயங்களை சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லிவிடும் பாணிதான்.

அவரது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குள் கோஷ்டிகள் உருவாகியிருப்பதாக வெளியான செய்தி, தொடர்ச்சியாக மோசமான விளையாடிவரும் போக்குகளால் ஷாரூக் கான் கடும் அதிருப்தியில் உள்ளார். போதாக்குறைக்கு அணி வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு செல்லக்கூடாது என்று ஐபிஎல் நிர்வாகத்தின் தடை இன்னும் எரிச்சலை அதிகரித்தது.

இந்த நிலையில் அணி உறுப்பினர்களுக்கு ஷாரூக் கான் அனுப்பிய எஸ்எம்எஸ் செய்தி:

பேச வேண்டிய தருணம் இது... நீங்கள் தோற்றுக் கொண்டிருக்கும்வரை நான் அனுப்பும் நீண்ட, போரடிக்கக்கூடிய மெசேஜ்களை சகித்துக் கொள்ளவும் வேண்டியிருக்கும் என்று உங்களுக்கு கூறியுள்ளேன். இதுதான் உங்களுக்கான தண்டனை.

நான் நடித்த படங்கள் பல நேரங்களில் நன்றாக ஓடியதில்லை. அந்த படங்கள் சரியாக ஓடாது என்பதை அறியாமலேயே அவற்றில் நடித்திருந்தேன். கதையை யாரோ எழுதியிருப்பார்கள். அதில் எனது பங்கு வெறும் நடிப்பு மட்டும்தான்.

ஆனால் தோல்விப்படங்களை நான் டீல் செய்யும் விதமே தனி. அதில் எனது பாத்திரம் மட்டும் சிறப்பாக எடுபடுமாறு பார்த்துக் கொள்வேன். இதனால் தோல்விப்படங்களிலும் எனது நடிப்பு சிறப்பாகத்தான் இருக்கும்.

எனது வேலையை சந்தோஷமாக செய்வேன். தோல்வி பற்றி ஜாலியாக விமரிசிப்பேன். ஆனால் அதேநேரத்தில் அதன் வலியையும் உணர்வேன். எனவே இப்போது, நாம் எல்லாருமே தோற்றுப்போன ஒரு ஸ்கிரிப்டின் அங்கத்தினராக உள்ளோம்;

ஐபிஎல் ஒரு மோசமான ஸ்கிரிப்ட். இருந்தாலும் இந்த ஸ்கிரிப்டில் நமது பங்கை சிறப்பாக வைத்துக் கொள்ள இனி முயற்சிப்போம். இந்த ஸ்கிரி்ப்டுக்காக நாமெல்லாம் கடுமையாக உழைத்தவர்கள் என்ற அடிப்படையில் இதை ஒரு சிறப்பான ஸ்கிரிப்டாக கருதவேண்டும்.

எனவே, நிமிர்ந்து கொள்ளுங்கள். அடுத்துவரும் 2 போட்டிகளில் உங்கள் பாத்திரத்தை மோசமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நம் அதிரடியை அதில் வெளிப்படுத்தவேண்டும், மாறாக வெற்று முனகலாக அவை அமைந்துவிடக்கூடாது. சினிமா உலகில், முந்தைய  படத்தை போன்றே இதிலும் சிறப்பாக செய்திருக்கிறாய் என்று பாராட்டுவோம். எனவே, கடந்த 2 விளையாட்டுகளில் நமது ஆட்டம் எவ்வளவு சிறப்பாக இருந்தது (இல்லாதுபோனாலும்) என்பதை அகில உலகத்துக்கும் இனி உணர்த்தப்போகிறோம்.

என்னை பற்றிய சர்ச்சைகளை விட்டுவிடுங்கள். உலகத்தில் இதெல்லாம் சகஜம். உங்கள் நிலை தாழும்போதுதான் மற்றவர்கள் உங்களை நசுக்கப் பார்ப்பார்கள். எனவே நாம் தாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கவலைப்படாதீர்கள். அது நம்மை பலம் அடையத்தான் செய்யும். இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கான ஒரேவழி- வெற்றி. அந்த ஒரேவிஷயத்துக்காகத்தான் எல்லோரும் வெற்றிபெற நினைக்கின்றனர்.

ஒருவிஷயம், மக்களை ஒன்று சேர்க்கும் அற்புதமான சக்தி 'தோல்வி'க்கு இருக்கிறது.
எனவே நாம் அனைவரும் ஒன்று சேருவோம். நஷ்டம் அடைந்துவருவதற்காக அணி வீரர்களுடன் முறைத்துக் கொள்ளும் உரிமையாளர்கள் போல நான் நடந்து கொள்வதில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தோல்விகளை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்பவன். நீங்களும் அப்படித்தான். என்னை விமரிசிப்பவர்களும் அதேபோல்தான்.

ஐபிஎல், ஐசிசி போட்டி நடத்தை விதிகள் பற்றி என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை இன்னும் புரிந்துகொள்ள முயற்சித்து வருகிறேன். அதை புரிந்து கொண்ட பிறகு, அதை ஏற்பதா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்வேன். அதுவரை, ஹோட்டல் சந்திப்புகள், ஆலோசனை கூட்டங்களில் போன்றவற்றின் மூலம் உங்களுடன் தான் இருப்பேன். ஆனால் போட்டிகளுக்கு வரமாட்டேன். எனவே நாம் ஒரு அணியாக செயல்படுவதில் இருந்து இது எதுவும் வித்தியாசமாக இருக்குமோ என்று எப்போதும் நினைக்கவேண்டாம்.

என் குழந்தைகளிடம் எப்படி அக்கறை காட்டுகின்றேனோ அதேஅளவுக்கு எனது வீரர்களிடமும் உள்ளேன். ஒரேவிஷயம், ஹெட்மாஸ்டரின் சட்டங்களை புரிந்து கொள்ளாதவரை நான் வகுப்புகளுக்கு செல்லமாட்டேன் என்பதுதான். நான் எதையும் மோதிப் பார்க்கும் ரகம். எனது இந்த பாணிக்காக நான் உங்களிடம் மன்னி்பபு கேட்டுக் கொள்கிறேன். எனவே நெஞ்சம் நிமிர்த்துங்கள். நன்றாக விளையாடி 200 ரன்களை நாளை குவிப்போம். இந்த 150 ரன்கள் என்பதெல்லாம் சரியாக போணியாகாது போலிருக்கிறது.

இவ்வாறு ஷாரூக் கூறியுள்ளார்.

0 comments: