Friday, May 23, 2008

தமிழகத்தில் பீருக்கு கடும் கிராக்கி!

சென்னை: தமிழகத்தில் கடும் வெயில் நிலவி வரும் நிலையில், பீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பீர் விற்பனை பல மடங்கு அதிகரித்திருப்பதால் பிற மாநிலங்களிலிருந்து பீர் வாங்க தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பொதுவாக தமிழகத்தில் தயாரிக்கும் பீர் வகைகளைத்தான் அதிக அளவில் டாஸ்மாக் விற்பனை செய்வது வழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேவை அதிகரித்ததால், வெளி மாநிலங்களிலிருந்து பீர் இறக்குமதி செய்யப்பட்டது. அதன் பின்பு 2வது முறையாக பீர் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் பீருக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களிலிருந்து பீர் வாங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.இந்தியாவிலேயே மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2008-09ம் ஆண்டு காலகட்டத்தில் பீர் விற்பனை, 20 லட்சத்து 31 ஆயிரத்து 967 கேஸ்களாக இருந்தது (ஒரு கேஸ் என்பது 12 பாட்டில்களைக் கொண்டது). இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 18 லட்சத்து 84 கேஸ்களாக இருந்தது. இது 13 சதவீத வளர்ச்சியாகும்.

தமிழகத்திற்கு ஒரு மாதத்திற்கு 20 லட்சம் கேஸ் பீர் தேவைப்படுகிறதாம். ஆனால் தேவைக்கேற்ற உற்பத்தி தமிழகத்தில் இல்லாததால், வெளி மாநிலங்களின் உதவியை தமிழக அரசு நாடியுள்ளது.அதன்படி ஹேவர்ட்ஸ் 2000 பீர் தயாரிக்கும் எஸ்.கே.ஓ.எல். புரூவரீஸ் நிறுவனத்திடம் 1 லட்சம் கேஸ் பீர் கேட்டு டாஸ்மாக் ஆர்டர் கொடுத்துள்ளது. அதேபோல ராயல் சேலஞ்ச் கிளாசிக் பிரீமியர் லேகர் மற்றும் யுனைட்டெட் ப்ரூவரிஸ் ஆகிய நிறுவனங்களிடமும் ஆர்டர் தரப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கடும் வெயில் அடித்து வருவதால் மற்ற வகை மதுக்களை விட பீருக்குத்தான் கடும் கிராக்கி உள்ளது. எனவே இந்த மாதம் மட்டும் 26 லட்சம் கேஸ் பீர் விற்பனையாகும் என டாஸ்மாக் அதிகாரிகள் நம்பிக்கை ெதரிவிக்கின்றனர்.

கோடைகால மது விற்பனை ஏப்ரலில் ஆரம்பித்து மே மாதத்தில் உச்சத்தை அடைவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த முறை கடும் வெயில் நிலவி வருவதால் வழக்கத்தை விட அதிகமான அளவில் பீர் விற்பனை உள்ளது.கடந்த நிதியாண்டில், டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனை மூலம் ரூ. 10 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியது. இதில் 20 சதவீத பங்கு பீர் விற்பனை மூலம் கிடைத்தது. நடப்பு நிதியாண்டில், மே மாத மத்தி வரை ரூ. 2800 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது.-நன்றி : தேட்ஸ் தமிழ்

0 comments: