Thursday, April 3, 2008

'டெரிவேடிவ்' டிரேடிங் கலக்குகிறது : சேதுராமன் சாத்தப்பன் (Mumbai sensex)

தற்போது, கண்முன்னே நிற்கும் பூதம் பணவீக்கம் தான். 7 சதவீத அளவு பணவீக்கம், அதுவும் தேர்தல் வரப்போகும் நேரத்தில் அரசாங்கத்தை கவலை கொள்ளச் செய்துள்ளது. அது, பங்குச் சந்தையையும் திங்களன்று நிலை குலையச் செய்தது. எதிர்பார்க்கும் வளர்ச்சி இருக்காது என்ற எண்ணங்களினால், மும்பை பங்குச் சந்தை 726 புள்ளிகள் குறைந்தது. இதனால், கடந்த வாரம் முழுவதும் பெற்ற பயன்கள் அனைத்தையும், சந்தை மொத்தமாக இழந்தது எனக் கூறலாம்.இறக்குமதி வரிகள் குறைப்பு காரணமாக சமையல் எண்ணெய் விலை ரூ.80லிருந்து ரூ.68க்கு உடனடியாகக் குறைந்துள்ளது, பாசுமதி அல்லாத அரிசி, பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு தடை உடனடியான பலனைத் தரலாம். திங்களன்று பணவீக்கத்தால் பங்குச் சந்தை வற்றியது என்று தான் கூற வேண்டும். நேற்று முன்தினம், உலகளவில் பங்குச் சந்தைகள் கூடியிருந்தாலும், இந்தியாவில் துவக்கத்தில் கூடியிருந்த பங்குச் சந்தை பின்னர் நஷ்டத்திலேயே முடிவடைந்தது.தற்போது, எங்கெங்கு கேட்பினும் பேச்சு, 'டெரிவேடிவ்' பற்றி தான். யூகவர்த்தகம் போல அமைந்த இதில், கம்பெனிகள் ஈடுபட்டதால், தற்போது அதனால் இழப்புகள் ஏற்படும் என்று நினைக்கின்றனர். அதே சமயம், 'டெரிவேடிவ்' டிரேடிங்கில் ஈடுபடுவதற்கு முன், வங்கிகள் அதன் சாதக, பாதகங்களை சரியான முறையில் எடுத்துக் கூறவில்லை என்று கூறி பல கம்பெனிகள் வங்கிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளன. இன்னும் பல கம்பெனிகள் வழக்குத் தொடர தயாராகி வருகின்றன. இது, வங்கிகள் - கம்பெனிகளிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஒரு புதிய அம்சம் ஆகும். இந்த சமயத்தில் சார்ட்டட் அக்கவுன்டன்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட ஒரு அறிக்கைப்படி கம்பெனிகள் டெரிவேடிவ் டிரேடிங்கில் ஏற்பட்டுள்ள மார்க் டூ மார்க்கெட் நஷ்டங்களை காலாண்டு முடிவுகளில் அறிவிக்க வேண்டும் என்பது, பல கம்பெனிகளின் லாபங்களை குறைக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.நேற்று முன்தினம் முடிவாக மும்பை பங்குச் சந்தை 18 புள்ளிகள் குறைவாகவே முடிவடைந்தது. ஸ்டீல் விலைகள் தாறுமாறாகக் கூடியதும் பணவீக்கத்திற்கு ஒரு காரணமாகும். ஆதலால், ஸ்டீல் விலையை குறைக்கும் முகமாக இன்னும் ஒரு மாதத்திற்குள் 10 முதல் 20 சதவீதம் வரை விலைகள் குறைக்கப்படவேண்டும் என்று கம்பெனிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.இச்சமயத்தில், கேதன் பாரிக், ஹித்தன் தலால் ஆகியோருக்கு 1992ம் ஆண்டு நடந்த பங்குச் சந்தை ஊழலில் ஈடுபட்டதற்காக ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.நேற்று, ஒரு சமயத்தில் சந்தை அதீத லாபத்தில் இருந்தது. அதாவது, 617 புள்ளிகள் கூடுதலாக இருந்தது. அதிலிருந்து 500 புள்ளிகள் வரை இழந்தது. நேற்று முடிவாக மும்பை பங்குச் சந்தை 123 புள்ளிகள் கூடி 15,750 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 14 புள்ளிகள் கூடி 4,754 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
புதிய வெளியீடுகள்: கடந்த 2007ல் வெளியிடப்பட்ட பல புதிய வெளியீடுகள் வெளியிடப்பட்ட விலைக்கு குறைவாகவே தற்போது கிடைக்கிறது. எல்லாம் ஆடித் தள்ளுபடி போல கிடைக்கிறது. இருந்தாலும், புதிய வெளியீடுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அது தான் பங்குச் சந்தை. ரைட்ஸ் என்ற ரயில்வே சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனம், தனது புதிய வெளியீட்டை கொண்டு வருவதற்காக, 'செபி'யிடம் விண்ணப்பித்துள்ளது. அதில், 1.40 கோடி பங்குகள் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் எப்படி இருக்கும்? கணிக்க முடியாத அளவு பங்குச் சந்தையின் போக்கு இருக்கிறது. நான்காவது காலாண்டு முடிவுகள் ஏமாற்றும் படியாக இருக்காது என்று பலர் கருதினாலும், சார்ட்டட் அக்கவுன்டன்ட் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ள புதிய விதிகளின் படி, டெரிவேடிவ் டிரேடிங் பற்றி அறிவிக்க வேண்டும் என்பது பல கம்பெனிகளின் லாபங்களை குறைக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது. சந்தை எப்படி செல்லுமோ என்ற பயம் முதலீட்டாளர் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.சாதாரணமாக மியூச்சுவல் பண்டுகளின் ஏதாவது ஒரு புதிய வெளியீடு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அதாவது, தினசரி ஏதாவது ஒரு புதிய வெளியீடு வெளிப்படையாக இருக்கும். இது, வருடம் முழுவதும் நடக்கும் நிகழ்வு தான். ஆனால், கடந்த மூன்று தினங்களாக எந்த ஒரு புதிய வெளியீடும் விற்பனைக்கு வரவில்லை. நல்ல சந்தைக்காக அவர்களும் காத்திருக்கின்றனரோ என்னவோ? - நன்றி : தினமலர்

0 comments: