Friday, April 4, 2008

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் எல்லை பிரச்னை முற்றுகிறது

சென்னை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் எல்லை பிரச்னை முற்றுகிறது. கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ள கருத்து குறித்து, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்., தலைவர் சோனியாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கர்நாடக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கியுள்ளன. கர்நாடகாவில் தமிழ் சினிமாக்கள் ஓடும் திரையரங்குகளும், தமிழகத்தில் கன்னடர்கள் நடத்தும் ஓட்டல்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இது குறித்து தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. `ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்' என்று, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன. தமிழக சினிமா நடிகர், நடிகைகளும் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். இரண்டு நாட்களாக, கர்நாடக, தமிழக பஸ்கள், அந்தந்த மாநில எல்லைகளைத் தாண்ட அனுமதி மறுக்கப்படுகின்றன. தமிழக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் பேசியது குறித்து, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, சில கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்., தலைவர் சோனியாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: எனது நீண்டகால நண்பரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா டில்லியில் தெரிவித்துள்ள சில விரும்பத்தகாத கருத்துக்கள் வருத்தமளிக்கிறது. `மூத்த அரசியல்வாதியாக உள்ள தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த சில கருத்துக்கள் தான், கர்நாடகத்தில் வேண்டத்தகாத சில விஷயங்கள் அரங்கேற காரணமாகி விட்டது' என்று அவர் கூறியதாக, பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. பொதுமக்கள் மத்தியிலோ, கடந்த 1ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலோ, எந்தவிதமான கடும் சொற்களை நான் பயன்படுத்தவில்லை. என்னை நன்கு அறிந்தவர் என்ற முறையில், நீங்கள் அவர் தெரிவித்த குற்றச்சாட்டை நம்பவோ, கற்பனை செய்துகூட பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தீர்மானத்தின் நகலை நான் அனுப்பியுள்ளேன். `சகோதரர்களாக இருக்க வேண்டிய நாம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்க கூடாது. சில சமூக விரோத சக்திகள் இடையில் நுழைந்து, இப்பிரச்னையை எரிய விட்டு குளிர் காய்ந்து விடும். அதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே நான் பொறுமை காக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தேன். `ஒகேனக்கல் திட்டத்திற்கு, மத்திய அரசு ஏற்கனவே அனுமதி கொடுத்துள்ளது. கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள சில தலைவர்கள் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, இப்பிரச்னையை கெடுக்க நினைக்கின்றனர். அவர்களது முயற்சி ஈடேறாது' என்று நான் தெரிவித்ததாக பத்திரிகையில் வெளிவந்துள்ளது. எனது உரையை முழுமையாக படித்துப் பார்த்தால் யாரும் அதை தவறாக கருத முடியாது. அண்டை மாநிலத்தில் தமிழக பஸ்கள் கொளுத்தப்பட்டு, தமிழ் சினிமா தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்க அலுவலகம் தாக்கப்பட்டு, அங்குள்ள தமிழர்கள் எல்லாம் பயத்தில் இருக்கும்போது, ஒரு மாநிலத்தின் முதல்வர் அமைதியாக இருக்க முடியாது. ஜனநாயக முறைப்படியும், அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு, உட்பட்டும் தமிழகம் போராடி வருவதில் உள்ள நியாயத்தை நீங்கள் உணருவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு, முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் நகல், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. - நன்றி : தினமலர்

1 comments:

Anonymous said...

total visitors list screen occupies the content of the article. Pls do something to clear this disturbance