Thursday, April 3, 2008

ஒகேனக்கல் விவகாரம் - பின்னணி என்ன?

ஒகேனக்கல் விவகாரத்தில், தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே பதட்டம் உருவாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. அதே நேரத்தில், `ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தடங்கல் ஏற்படுத்த வேண்டாம் என, கர்நாடக அரசை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்' என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், `கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் முடியும் வரை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதை தள்ளி வைக்க வேண்டும்' என, கர்நாடக முன்னாள் முதல்வர் கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார். `ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது' என, கர்நாடகம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக தமிழகத்திலும், கர்நாடகாவிலும் பதட்டம் நிலவி வருகிறது. மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தேசிய அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. இருந்தாலும், மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. இந்நிலையில், தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் தரப்பிலும், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், நேற்று மதியம் 12.30 மணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும், கர்நாடகம் தரப்பில் அம்மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் அடுத்தடுத்து மன்மோகனை சந்தித்தனர். பிரதமரை சந்தித்த போது, பாலு தரப்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ரூ. ஆயிரத்து 334 கோடி செலவில், ஜப்பான் வங்கி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டு, கடந்த மார்ச் 10ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற, கடந்த தே.ஜ., கூட்டணி அரசு தான் அனுமதி வழங்கியது. ஜே.எச்.படேல் முதல்வராக இருந்த போது, 1998 ஜனவரி 29ம் தேதியன்று மத்திய நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் தமிழக, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், காவிரி நீர் பங்கீட்டில் தனக்கு கிடைக்கும் தண்ணீரில் இருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் திட்டத்தை கர்நாடகம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதேபோல, தனக்கு கிடைக்கும் காவிரி நீர் பங்கீட்டிலிருந்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழகம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்த திட்டத்திற்காக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, கிராமப்புற மேம்பாட்டுத் துறை ஆகிய மூன்று அமைச்சகங்களின் அனுமதிகளை தமிழக அரசு முறையாக பெற்றது. இந்த திட்டத்திற்கு 1.4 டி.எம்.சி., அளவு தண்ணீர் மட்டுமே தேவையாக உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் ஆறாயிரத்து 500 கிராமங்களும், 17 பேரூராட்சிகளும் பயன் பெறவுள்ளன. முப்பது லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, கர்நாடகம் தரப்பில் எதிர்ப்பு காட்டப்படுகிறது. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்தவொரு தடங்கலையும் ஏற்படுத்த வேண்டாமென்று கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுவோடு சேர்ந்து, நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தையும் அமைச்சர் பாலு அளித்தார். டி.ஆர்.பாலுவைப் போல, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், நேற்று மதியம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்கு பின் அவர் கூறுகையில், `கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தற்போது இல்லை. அங்கு, ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. எனவே, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவதை ஜூன் வரை தள்ளி வைக்க வேண்டும். முதல்வர் கருணாநிதி ஒரு மூத்த அரசியல் தலைவர். அவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒகேனக்கல் விஷயத்தில் தமிழகம், கர்நாடகம் இடையேயான எல்லை பிரச்னையும் அடங்கியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதமரிடம் தெரிவித்தேன்' என்றார். காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்துப் பேசினார். பிரதமரிடம் முன்வைத்த கோரிக்கையை அவரிடமும் வைத்ததாகக் கூறப்படுகிறது. முதல்வர் கடும் வார்த்தைகள் பேசவில்லை: கிருஷ்ணாவைப் போல, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் நேற்று பிரதமரை சந்தித்துப் பேசினார். அதன் பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ` தே.ஜ., கூட்டணி அரசு தான் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. ஆனால், பா.ஜ., தற்போது எதிர்ப்பு காட்டுகிறது. சேது சமுத்திர திட்டத்திற்கும் இதே நிலை தான். வாஜ்பாய் தலைமையிலான அரசின் போது அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு, தற்போது அதே பா.ஜ., எதிர்ப்பு தெரிவிக்கிறதென்றால், அது அரசியல் லாபங்களே காரணம். தமிழக முதல்வர் பேசிய பொதுக்கூட்டத்தில் நானும் இருந்தேன். எஸ்.எம்.கிருஷ்ணா கூறுவது போல, அந்த கூட்டத்தில் கடுமையான வார்த்தைகள் எதுவும் முதல்வர் பேசவில்லை. கடுமையான வார்த்தைகளை முதல்வர் கூறினார் என்பது உண்மைக்கு புறம்பானது. கர்நாடகத்தில் உள்ள தெளிவாக சிந்திக்கக்கூடிய எவருமே பா.ஜ.,வின் எதிர்ப்பை ஒரு ஏமாற்று வேலையாகவே கருதுவர். இந்த ஏமாற்று வேலையில் மக்கள் சிக்கமாட்டார்கள்' என்றார். சோஸ் நழுவல்: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு மூலக் காரணமே மத்திய நீர்வள அமைச்சகம் தான். இந்த அமைச்சு அதிகாரிகள் தான், 1998ம் ஆண்டு, இரு மாநில உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசி, பெங்களூரு குடிநீர் திட்டத்தையும், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தையும் உருவாக்கினர். இந்நிலையில், இப்பிரச்னை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸிடம் கேட்ட போது, `நதிநீர் பிரச்னை என்பது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னை. வெள்ள அபாயங்கள், அதை தடுக்கும் நடவடிக்கைகள், நீர்ப்பாசனம் உள்ளிட்ட விஷயங்களைத் தான் எனது அமைச்சகம் கவனிக்க முடியும். குடிநீர் திட்டங்கள் குறித்தெல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது. இது பற்றி, மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் தான் தலையிட்டு ஆலோசனை வழங்க முடியும்' என்றார். - நன்றி : தினமலர்

0 comments: