Tuesday, April 22, 2008

கேரளாவின் திமிர்


தமிழக-கேரள எல்லையில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில்.இந்தக் கோவில் தமிழகத்திற்கு சொந்தமானது. ஆனால், இதை கேரள அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்தக் கோவில் தொடர்பாக தமிழகம்-கேரளா இடையே நீண்டகாலமாக மோதல் நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவையொட்டி (சித்ரா பெளர்ணமி) இந்தக் கோவிலில் விழா நடக்கும். நேற்று இந்த விழா வெகு விமரிசையாக நடந்தது.தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதற்காக கண்ணகி கோவிலுக்கு நடையாகவும், கார், பஸ், ஜீப், வேன்களில் வந்து சேர்ந்தனர்.

புதிய ஐம்பொன் கண்ணகி சிலை பச்சை பட்டுடுத்தி அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த பூசாரி பாலாஜி சிறப்பு பூஜைகளை நடத்தினார்.

முதலில் கும்பம் இட்டு, யாக பூஜை நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.ஆனால், இந்த பூஜைகளையும் தமிழர்கள் வழிபடுவதையும் குலைப்பதிலேயே கேரள போலீசார் குறியாய் இருந்தனர். கோவில் வளாகத்தில் தமிழில் எழுதி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு போர்டுகளை கேரள போலீசார் திடீரென அகற்றி திமி்ர்த்தனம் செய்தனர்.மேலும் அங்கிருந்த தமிழக போலீசாரையும் வெளியேற்றினர்.

தமிழக போலீசார் பணியில் இருப்பது வழக்கம் என தமிழக அதிகாரிகள் வாக்குவாதம் செய்த பின்னர் சில போலீசாரை மட்டும் அனுமதித்தனர்.

கண்ணகி கோவில் முன்பு பந்தல் அமைக்கக் கூட கேரளா அனுமதி தரவில்லை. இந்தக் கோவில் வளாகத்தில் கேரள மக்கள் வணங்கும் துர்க்கையம்மன் கோவில் முன் மட்டும் பந்தல் அமைக்க அனுமதி தந்தனர்.இதனால் மங்கலதேவி கண்ணகியை வெயிலில் நின்று தமிழர்கள் வணங்க நேரிட்டது.

இதைவிடப் பெரிய கொடுமை கண்ணகி கோவில் வளாகத்தில் கேரள போலீசாரும் வனத்துறையினரும் பூட்ஸ் அணிந்தபடி வளைய வந்தது தான்.ஆனாலும் இந்த கெடுபிடிகளையெல்லாம் மீறி தமிழக வனப் பகுதியில் உள்ள பளியன்குடி வழியாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க நேரிட்டது.

கண்ணகி சிலைக்கு அரசு மரியாதை: இந் நிலையில் சித்ரா பெளர்ணமியையொட்டி சென்னை மெரீனா கடற்கறையில் உள்ள கண்ணகியின் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அமைச்சர்கள் பரிதி இளம் வழுதி, தமிழரசி, பூங்கோதை ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.கேரள ஜோதிடர் சொன்னார் என்பதற்காக கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இந்த சிலையையே பெயர்த்துக் கொண்டு போய் அரசு அருங்காட்சிய குடவுனில் குப்பையோடு குப்பையாகப் போட்டு 'மரியாதை' செய்தனர் என்பது வலியோடு நினைவுகூறத்தக்கது.

0 comments: