Friday, April 4, 2008

கர்நாடகாவை கண்டித்து நடிகர், நடிகைகள் இன்று உண்ணாவிரதம்


சென்னை: கர்நாடகாவை கண்டித்து, தமிழ்த் திரையுலகம் சார்பில், இன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. போராட்டத்தில் கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய், த்ரிஷா, சிநேகா உட்பட அனைத்து நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில், காலை 8 மணியிலிருந்து, மாலை 5 மணி வரை போராட்டம் நடக்கிறது. நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக நிர்வாகிகள் அமர்வதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகளின் கார்கள் மேடைக்கு அருகில் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. `உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத திரையுலகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, முன்கூட்டியே சினிமா சங்கங்கள் மூலம் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளதால், தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு படப்பிடிப்பை காரணம் காட்டி நடிகர், நடிகைகள் வராமல் இருந்து விடுவர் என்பதற்காக எங்கு படப்பிடிப்பு நடந்தாலும், உடனடியாக சென்னை வந்து போராட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தவர்கள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியுள்ளனர். இப்போராட்டத்தில் திரையுலகத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்ப்பார்ப்பதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன் தெரிவித்துள்ளார். அதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தைக் காண, லட்சக்கணக்கில் ரசிகர்கள் வரும் நிலை இருப்பதால், அவர்களைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு வசதியாக மேடைக்கு அருகில் நான்கு கேரவன் வாகனங்கள் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று உண்ணாவிரத்தில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் `குசேலன்' படப்பிடிலிருந்து ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை திரும்பினார். லண்டன் சென்றுள்ள கமல், இன்று 12 மணிக்கு சென்னை திரும்பி, உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கிறார். `சத்யம்' படப்பிடிபிற்காக துபாய் சென்றிருந்த விஷால் நேற்று இரவு சென்னை திரும்பினார். தேனியில் `கந்தசாமி' படப்பிடிப்பிலிருந்த நடிகர் விக்ரமும், இயக்கனர் சுசி கணேசனும் நேற்று இரவு சென்னை திரும்பினர். சென்னையில் ஏ.வி.எம்., ஸ்டுடியோ மற்றும் பிரசாத் ஸ்டியோக்களில் அனைத்து பணிகளும் மாலை 6 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் திரையரங்குளில் காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரஜினிக்கு பாதுகாப்பு: உண்ணாவிரதத்திற்கு செல்பவர்களின் வாகனங்கள், அண்ணாசாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக, உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. ஆட்களை இறக்கி விட்டு பெல்ஸ் சாலை வழியாக சுற்றிச் சென்று வாகனங்களை நிறுத்த வேண்டும். காமராஜர் சாலை வழியாக உண்ணாவிரதத்திற்கு வருபவர்களின் வாகனங்கள், பல்கலைக்கழகத்திலிருந்து வாலாஜா சாலை வழியாக உண்ணாவிரதம் நடைபெறும் இடம் வரை அனுமதிக்கப்படும். அரசினர் தோட்டம் மற்றும் சர்வீஸ் சாலைகளில் நிறுத்துவற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். அண்ணாசாலையில் இருந்து வாலாஜா சாலையில் செல்லும் பொதுமக்களின் வாகனங்கள், திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் திருப்பி விடப்பட உள்ளன. காமராஜர் சாலையில் செல்லும் பொதுமக்களின் வாகனங்கள் பல்கலைக்கழக சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது. உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் ரஜினி உட்பட முக்கிய நடிகர், நடிகைகளுக்கு சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. இணைக் கமிஷனர் பாலசுப்பிரமணியம் தலைமையில் துணை கமிஷனர்கள் ராமசுப்பிரமணியம், தர்மராஜன், ஜெயகவுரி, நிர்மல் குமார் ஜோசி ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் இன்று தர்ணா: கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் இன்று தர்ணா போராட்டம் நடத்துகிறது. திரைப்பட வர்த்தக சபையினர் கூறுகையில், `பெங்களூரு டவுன்ஹால் முன் தர்ணா போராட்டம் நடக்கிறது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் தல்லம் நஞ்சுண்டஷெட்டி, செயலர் சாரா கோவிந்த் உட்பட சங்க நிர்வாகிகள் கன்னட திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். காலை 10 மணியிலிருந்து, மாலை 5 மணி வரை நடக்கவுள்ள போராட்டத்தையொட்டி மாநிலம் முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என்றனர். - நன்றி: தினமலர்

0 comments: