Wednesday, April 2, 2008

பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் . . .

உழுது போட்ட நிலத்துக்கு
உழவன் ஊட்டுவான் என்னை
உரமாக !
இருந்த இடத்திலேயே
காய்ந்து போனால்
எரிவேன் நான்
எருவாக !
வளையல் கையால்
வழிக்கப்பட்டு
குளிர் நீரோடு
கலந்திருப்பேன் நான்
முற்றம் தெளிக்க !
முற்றத்தின் முதுகினிலே
இருவிரலால் மலரெழுதிய
கவிதையாம்
மாக்கோலத்தின் மையத்தில்
அமர்ந்திருப்பேன் நான்
பூசணிப்பூ தாங்கும் கையாக !
கம்பு சோளக்
கதிர்கள் காயும்
களத்திலெழும் புழுதிபடிய
கரிசல்காட்டான்
கரைத்திருப்பான் என்னை
களம் தெளிக்க !
வீட்டுத்தோட்டத்தில் நட்டிய
முருங்கைக் கட்டைக்கு
மூதாட்டி வைத்திருப்பாள் என்னை
மருதாணியாக !
பிடித்து வைத்து
அருகம்புல் செருகிவைத்தால்
நான் ஆவேன்
அவசர சாமியாக !
இப்படியெல்லாம் மட்டுமல்லாது
எப்படி எப்படியோ
பயன்பட்டிருப்பேன்
பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் !
மாநகரச் சாலை
ஓரத்தில் பிறந்ததாலே
உதிர்ந்துபோன
மரத்தின் முடிகளோடும்
கசக்கிப்போட்ட
மரத்தின் பேத்திகளோடும்
குப்பை வண்டியிலே
பயணற்றுப் பயணிக்கிற
மாட்டுச் சாணம் நான்
மனமுடைந்து புலம்புகிறேன்
மறுபிறவியாவது
பட்டிக்காட்டில் வேண்டுமென்று !

0 comments: