Wednesday, April 2, 2008

ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழக கட்சிகள் ஒற்றுமை: கர்நாடகாவுக்கு மீண்டும் சட்டசபையில் கண்டிப்பு

சென்னை: ஆளும் தி.மு.க.,விற்கு எதிராக, தினமும் போராட்டம் நடத்தி வரும் பிரதான எதிர்க்கட்சியான, அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க., உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும், ஒகேனக்கல் பிரச்னையில் ஒன்று திரண்டு சட்டசபையில் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தின. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடகாவை கண்டித்து, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆவேசமாக பேசினர். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆயத்தமாகி வரும் நிலையில், கர்நாடகா திடீரென்று எதிர்ப்பு தெரிவித்து, பிரச்னை செய்து வருகிறது. அங்குள்ள சில அரசியல் கட்சிகளும், சில கன்னட அமைப்புகளும் தமிழக அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. முதலில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா, இப்போது எல்லை பிரச்னையையும் கையில் எடுத்துள்ளது. ஒகேனக்கலில் தண்ணீர் எடுக்க உள்ள இடம் தங்கள் மாநில எல்லைக்குள் வருகிறது என்று கூறி வருகின்றனர். கர்நாடகாவின் இந்த போக்கிற்கு தமிழக சட்டசபையில், கடந்த 27ம் தேதி கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக அரசு காத்திருந்த வேளையில், சில கன்னட அமைப்புகள், நேற்று முன்தினம், பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக ஆவேச தாக்குதல்களில் ஈடுபட்டனர். தமிழ் சினிமா படங்கள் ஓடும் தியேட்டர்கள் சூறையாடப்பட்டதோடு, தமிழ்ச் சங்க அலுவலகத்திற்குள் புகுந்தும் ரகளை செய்தனர். கன்னட வெறியர்களில் இந்த மோசமான வன்முறையைக் கண்டு, தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், ஒகேனக்கல் விவகாரத்தால், கர்நாடகாவில் நிலவும் பிரச்னை குறித்து அவசர கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த விவாதத்தில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கர்நாடகாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஆவேசமாக பேசினர். ஆளும் தி.மு.க.,விற்கு எதிராக தினமும் போராட்டம் நடத்தி வரும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க., கூட, மற்ற கட்சிகளுடன் ஒற்றுமையாக இருந்து, தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. சட்டசபை அ.தி.மு.க., துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ம.தி.மு.க., சார்பில் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் கர்நாடகாவின் போக்கை கண்டித்தும், ஒகேனக்கல் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் பேசினர். விவாதத்திற்கு பதிலளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், `அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்ததற்கு நன்றி. நம்மிடையே அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்தின் உரிமையை கட்டிக் காப்பதில் தமிழகம் ஓரணியில் இருக்கிறது என்று எடுத்துக் காட்டியதற்காக மீண்டும் நன்றி. இந்த ஒற்றுமையும், பாசப் பிணைப்பும் எப்போதும் இருந்தால் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என்றார். அதேபோல் முதல்வர் கருணாநிதி பேசும்போதும், `ஒகேனக்கல் பிரச்னை கசப்புணர்வை கொடுத்தாலும், இந்த பிரச்னையால் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் பேசியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டார். - நன்றி : தினமலர்

0 comments: