Tuesday, April 1, 2008

கன்னட வெறியர்களே...

பெங்களூரு: ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் நேற்று ரகளையில் ஈடுபட்டனர். பெங்களூரு தமிழ்ச் சங்கம், தமிழ் சினிமாக்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால், பெரும் கலவரம் ஏற்பட்டது. தமிழ் சினிமாக்களை இடையில் நிறுத்தி, கன்னட சினிமாக்களை திரையிட வைத்தனர். பெங்களூருவில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் பெரும் பதட்டம் நிலவுகிறது. `ஒகேனக்கல், கர்நாடகாவுக்கே சொந்தம். அதனால், தமிழக அரசு கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது. திட்டம் தொடர்ந்தால், பெங்களூரு சினிமா தியேட்டர்களில் தமிழ் சினிமா வெளியிட அனுமதிக்க மாட்டோம். தமிழ் சேனல் ஒளிபரப்ப விட மாட்டோம். வரும் 9ம் தேதி வரை தமிழக அரசுக்கு கெடு விதிக்கிறோம்' என்று, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தனர். அதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் கருணாநிதி, `பஸ்களை உடைத்தாலும், எங்களது எலும்புகளை உடைத்தாலும், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்' என்று கூறியிருந்தார். இதை அறிந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர், நேற்று அராஜகத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை, பெங்களூரு, சேஷாத்திரிபுரத்தில் நடராஜ் சினிமா தியேட்டரில், `தோட்டா' தமிழ் சினிமா காலை காட்சி நடந்து கொண்டிருந்தது. காலை 11.30 மணிக்கு கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர், தியேட்டருக்குள் புகுந்தனர். போஸ்டர்களையும், பேனர்களையும் கிழித்தெறிந்தனர். தியேட்டரில் சினிமா பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சினிமா காட்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது. வேதிகேயினர் மிரட்டலால், உடனடியாக அதே தியேட்டரில் கன்னட படம் திரையிடப்பட்டது. பெங்களூருவில், தமிழ் படம் திரையிடும் வினாயகா, பூர்ணிமா, பல்லவி, லாவண்யா, அஜந்தா உட்பட பல தியேட்டர்களுக்கு சென்ற வேதிகே அமைப்பினர், அங்கு தமிழ் படம் திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர். வண்ணார்பேட்டை பாலாஜி தியேட்டருக்கு சென்று, அங்கிருந்த சினிமா போஸ்டர்களையும், பேனர்களையும் கிழித்தெறிந்தனர். தியேட்டரில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி, அத்து மீறி உள்ளே நுழைந்தனர். அங்குள்ள கண்ணாடி ஷோ கேஸை அடித்து நொறுக்கினர். அதில் வைக்கப்பட்டிருந்த ரஜினி, விஜய் ஷீல்டுகளை வெளியே எடுத்து போட்டனர். தியேட்டரில் தமிழில் எழுதி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு போர்டுகளை கழற்றி, கீழே வீசி, செருப்பால் அடித்தனர். அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., டிஜிட்டல் பேனர்களை தாறுமாறாக கிழித்து, தீயிட்டு கொளுத்தினர். அப்பகுதியில் தமிழில் எழுதப்பட்டிருந்த காசி விஸ்வநாதர் கோவில், கருமாரியம்மன் கோவில் தமிழ் போர்டுகளை தார் பூசி அழித்தனர். பெங்களூரு தமிழ் சங்கத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை உடைத்தெறிந்தனர். கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர், அலுவலகத்திற்குள் புகுந்து, நோட்டீஸ் போர்டுகளில் இருந்த நோட்டீஸ்களை கிழித்து வீசினர். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரத்தில் தங்கள் `கடமை'யை முடித்துக் கொண்டு வீராவேசமாகச் சென்றனர். இந்த ரகளைகளை போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சம்பவத்தால், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பீதியும், பதட்டமும் ஏற்பட்டது. தாக்குதலை நடத்திய பின், கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா கூறுகையில், `ஒகேனக்கல் திட்டத்தை தமிழக அரசு கைவிடும் வரை, நகரின் தியேட்டர்களில் தமிழ் படம் திரையிடக்கூடாது; மீறி திரையிட்டால் தாக்குதல் தொடரும்' என்றார். `இப்பிரச்னை தீரும் வரை, தமிழ் படங்களை திரையிடப் போவதில்லை' என்று தியேட்டர் உரிமையாளர்கள் உறுதியளித்த பின்னரே, கலவரக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆனாலும், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பதட்டம் தொடர்கிறது. சம்பவம் குறித்து இணை போலீஸ் கமிஷனர் கூறுகையில், `பெங்களூரு நகரில் தமிழர்களுக்கு எதிராக எந்த சம்பவமும் நடக்கவில்லை. கன்னட அமைப்பினர், சில இடங்களில் போராட்டம் மட்டும் நடத்தினர். யாரும் கைது செய்யப்படவில்லை. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்றார். கன்னட ரக்ஷன வேதிகேயைச் சேர்ந்த பசவராஜ் கூறுகையில், `தமிழ் சினிமா வெளியிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு சென்று, ஒகேனக்கல் பிரச்னை குறித்து விளக்கினோம். பிரச்னை தீரும் வரை, தமிழ் சினிமாக்களை திரையிடக்கூடாது என்று கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்' என்றார். நன்றி : தினமலர்

0 comments: