Wednesday, March 19, 2008

சோகச்செய்தி - நடிகர் ரகுவரன் காலமானார் - Actor Raghuvaran Passes Away

சென்னை: பிரபல நடிகர் ரகுவரன் காலமானார்.

வில்லன், ஹீரோ, குணசித்திரம் என பல்வேறு பாத்திரங்களில் நடித்த மிகச் சிறந்த நடிகர் ரகுவரன்.

நடிகை ரோகினியை காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரகுவரன் பல காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் சமீபத்தில் உடல் நிலை மிகவும் மோசமாகி சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை அவர் மரணமடைந்தார்.

ரகுவரன்-ரோகினி தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

ரகுவரன் வாழ்க்கைக் குறிப்பு:

1948
ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கோவையில் பிறந்தவர் ரகுவரன். இவரது குடும்பத்தின் பூர்வீகம் கேரளா.

ஏழாவது மனிதன் படம்தான் ரகுவரன் நடித்த முதல் படம். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார். இதுதான் அவரது பன்முக நடிப்புக்கு வழிவகுத்தது. வித்தியாசமான வில்லத்தனத்தைக் காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது.

சத்யராஜுடன் நடித்த மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார்.

ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குடிகாரனாக மாறி கடைசியில் எப்படி சீரழிகிறான் என்பதுதான் அந்த தொடரின் கதை.

ரகுவரனின் நடிப்புக்குப் பெயர் போன படங்கள் அஞ்சலி, பாட்ஷா, புரியாத புதிர், முதல்வன் என பல படங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ரகுவரன். அவருடன் நடிக்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

ரஜினிகாந்த்தின் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் ரகுவரன். கடைசியாக ரஜினியுடன் இணைந்து ரகுவரன் நடித்த படம் சிவாஜி. அமிதாப்பச்சன் நடிப்பதாக இருந்த கேரக்டரில் கடைசி நேரத்தில் ரகுவரன் நடித்தார்.

இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், விஷால், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் நடித்துள்ளார் ரகுவரன். இளம் நடிகர்களுக்கு நல்ல ஆலோசகராகவும் விளங்கினார்.

தனது நடிப்பாற்றலால், தென்னாட்டு அல் பசினோ என்றும் புகழப்பட்டவர் ரகுவரன். அவரது மரணம், தமிழ்த் திரையுலகுக்கு பெரும் இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

1 comments:

Anonymous said...

Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!