Tuesday, March 24, 2009

இது விளம்பரமல்ல!

தொலைக்காட்சியில் நாம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகள் எத்தனையோ இருப்பதுபோல், பல விளம்பரங்களும் நம்மைக் கவரத் தவறுவதில்லை.
 
ஒரு ரூபாயில் தயாரிக்கப்படும் குளிர்பானத்தை பத்து ரூபாய்க்கு மக்களை வாங்க வைப்பதும் இந்த விளம்பரங்கள்தான். பத்து ரூபாய் க்ரீமை வாங்கி ஒரு வாரம் பூசினாலே, உங்கள் சருமம் கலராகிவிடும் அது எருமை மாடாக இருந்தாலும் சரி என்கிற அளவிற்கு மக்களுக்கு நம்பகத்தன்மையை வரவழைக்கும் மந்திரமும் இந்த விளம்பரங்களில் உள்ளது.
 
எதோ ஒரு பானத்தை குழந்தை குடித்தால், அவன் அப்துல்கலாம் ஆகிவிடுவானாம். அட ஆண்டவா !
 
முன்னனி நடிகர் நடிகையர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பல கோடிகளைக் கொடுத்து விளம்பரங்கள் எடுக்கவே எல்லா நிறுவனங்களும் முன் வருகின்றன. அவர்களுக்குக் கொடுக்கப்படும் கோடிகளும், உற்பத்திப் பொருளின் விலையில் சேருவதால், பொருளின் விலை பன்மடங்கு உயர்ந்தும் விடுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் விளம்பரங்கள் இல்லாத பொருள்களை வாங்க நாம் முன்வருவதில்லை. இப்படி வியாபார நோக்கத்திற்காகத் தயாரிக்கப்படும் விளம்பரங்களுக்கு நடுவே, சமீபத்தில் ஒளிபரப்பாகும் சில விளம்பரங்கள் சமூகத்தின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கக் கூடியவைகளாக உள்ளன.
 
திர்காலத்தில் எரிபொருளின் தேவையை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று எண்ணும் வேளையில், சிக்னல்களில் வாகனங்களை சுவிட்ச் ஆஃப் செய்வதாலும், அதிவேகமாகச் செல்லாமல் மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்குவதாலும் 20% எரிபொருளைச் சேமிக்கலாம் என்ற விளம்பரம் எல்லோரையும் சற்று சிந்திக்கவைத்துள்ளது. இதே கருத்தை வலியுறுத்தும் மற்றொரு விளம்பரம், எதிர்காலத்தில் நான் சைக்கிள் கடை வைக்கப்போகிறேன் என்று ஒரு குழந்தை தன் தந்தையிடம் சொல்லும் விளம்பரமும் அட்டகாசம்.
 
துபோன்றே சமையல் எரிவாயுவின் சேமிப்பை வலியுறுத்தும் மற்றொரு விளம்பரமும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரஷர் குக்கர் பயன்படுத்துவதாலும், பாத்திரங்களை மூடிவைத்து சமைப்பதாலும் எரிவாயு சிக்கனமாகிறது என்பதை இந்த விளம்பரங்கள் சொல்லும்போது, எல்லோருக்கும் அவ்வாறே சமைக்கவேண்டும் என்கிற எண்ணம் தானாகவே வரவாய்ப்புள்ளது.
 
ப்போதுமே கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் திருநங்கைகளையும் இந்த சமூகம் அங்கீகரிக்கவேண்டும். அவர்களையும் சகமனிதர்களாகப் பாவித்து அவர்களின் திறமைகளுக்கேற்ப வேலைவாய்ப்பும் அளிக்கப்படவேண்டும்; அவர்களுக்கும் வீடு வாடகைக்கு கொடுக்கப்படவேண்டும் என்பதைக்கூறும் விளம்பரமும் சமூகத்திற்காக எடுக்கப்பட்டதேயாகும்.
 
ஐம்பது கோடி, நூறு கோடி என்று பெரும்பொருள் செலவில் படமெடுத்தாலும், அதில் வெறும் ஒரு முழத்துணியை மட்டுமே கொடுத்து, சதை நாயகிகளை சாரி.. கதை நாயகிகளை ஆடவைக்கும் படம், தமிழில் பெயர் இருந்தால் அதற்கு வரிவிலக்கு அளிக்கும் அரசாங்கம், இதுபோன்ற பொதுநல விளம்பரங்களுக்கும் பல உதவிகளைச் செய்து ஊக்கப்படுத்தவேண்டும்.
 
இப்படி பொதுநல நோக்கிற்காக வெளியிடப்படுபவைகள் விளம்பரங்கள் அல்ல; அவைகள் பாடங்களே! இவைகள் அதிக அளவில் வரவேண்டும். அத்தனையும், அதற்கான நோக்கத்தில் வெற்றி பெறவேண்டும். அதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்போமாக!
 
 
உழவன்
 

2 comments:

நையாண்டி நைனா said...
This comment has been removed by the author.
நையாண்டி நைனா said...

மிக சிறிய கருத்தென்றாலும், சீரிய கருத்து.