Tuesday, March 3, 2009

பாராளுமன்ற தேர்தல்: ஆன்லைனில் வாக்கு?

ஒவ்வொரு வாக்காளரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனும், அரசில் தலைவர்களும் சொல்வது வழக்கம். தொடர்ந்து வாக்களிக்காமல் இருப்பவர்களின் ரேஷன் கார்டு பறிக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல உரிமைகளைப் பறிக்கவேண்டும் எனவும் பலர் சொல்வதுண்டு.



ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்கை தவறாமல் அளிக்கவேண்டும்; இல்லையெனில் உங்கள் வாக்கை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த நேரிடும் என சொல்வது சரியான கருத்துதான். ஆனால் இந்திய அரசு அவ்வாறு தவறாமல் வாக்களிப்பதற்கு என்னென்ன வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்று பார்த்தால் எதுவுமில்லை. (சமீபத்தில் வெளியான 'தீ' திரைப்பட இயக்குநர் கண்டிப்பாக இதற்கு பதிலளிக்கவேண்டும் என விரும்புகிறேன்)

உதாரணமாக, தமிழகத்தின் தென்முனையிலிருந்து பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்துள்ள ஒருவனால், வாக்களிப்பதற்காக குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்து எப்படி தன் சொந்த ஊருக்கு செல்லமுடியும்? ஒருவேளை ஆயிரம் ரூபாய் செலவழிக்கக்கூடிய நிலையில் அவன் இருந்தாலும், அரசு விடுகின்ற ஒரு நாள் விடுமுறையில், கிட்டத்தட்ட போகவர முப்பது மணிநேர பயணம் செய்து சென்றுவர இயலுமா?

சாதாரண வார இறுதிகளிலேயே எஃமோரும், கோயம்பேடும் நிரம்பி வழிகின்ற போது, கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், தேர்தல் நாளுக்கு முந்தைய நாளில் எந்த அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும்? இப்படிப்பட்ட சூழல் நிலவுகின்றபோது, கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்று எப்படி அரசாங்கத்தால் சொல்லமுடியும்?

வாக்களர்கள் இந்திய தேசத்தில் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களால் அவர்களின் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கூடிய வசதியை ஏற்படுத்தித் தரவேண்டியது அரசின் கடமை.

வேறொரு தொகுதியில் இருந்து கொண்டு, தன்னுடைய தொகுதிக்கு வாக்களிக்கும் முறையை அமல்படுத்த அரசுக்கு சில யோசனைகள்:

அ) வேறு தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கென்று தனியாக வாக்குச் சாவடிகள் அமைக்கலாம். எல்லா ஊர்களிலும் அமைப்பதற்குப் பதிலாக மாவட்டத் தலைநகரங்களில் மட்டும் அமைத்தாலே போதுமானது.

ஆ) அருகிலிருக்கும் தபால் நிலையத்திலோ, அரசு வங்கிகளிலோ அல்லது ஏதேனும் அரசு அலுவலகங்களில், நான் இந்த தொகுதியில் இருந்துகொண்டு, என் வாக்குரிமை இருக்கும் இந்த தொகுதிக்கு வாக்களிக்க போகிறேன் என்று தேர்தலுக்கு முன்கூட்டியே, தகுந்த ஆவணங்களைக் காட்டி முன்பதிவு செய்து விட்டால், நமது சொந்த ஊரில் நமக்கிருக்கும் வாக்குரிமையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றிக் கொடுப்பது எளிதானதுதான்.

இ) இவ்வாறு வாக்களிப்பவர்களுக்கு, மின்னணு இயந்திரம் மூலமாக வாக்களிப்பதில் சாத்தியக்கூறுகள் குறையும் பட்சத்தில், இவர்களூக்கு மட்டும் வாக்குச்சீட்டு முறையையே அமல்படுத்தலாம்.

ஈ) தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில், ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை அமல்படுத்த திட்டமிடலாம்.

அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்களர் அடையாள அட்டை மட்டுமல்லாது, புகைபடத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலும் இருக்கிறபோது, மேற்கூறிய முறைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஒன்றும் இருக்காது என்றே தோன்றுகிறது.

உழவன்

2 comments:

நையாண்டி நைனா said...

ஜூப்பருண்ணே.... நான் இங்கே மும்பைலே கிடக்குறேன்.

Unknown said...

Very good.. This should be watched out by govt. Guys please forward this to your friends circle.