Monday, March 2, 2009

'ஏ', 'ஓ' 'கே' 'கோ' இந்த எழுத்துக்கள் தமிழுக்கு வந்த கதை

மிழில் புதுமைக் கலைத்துறையைத் தோற்றுவித்த வீரமாமுனிவர், திருக்காவலூரில் வேதியர்களுக்காக ஒரு கல்லூரி அமைத்தார். அக்கல்லூரியில் தாமே ஆசிரியராக அமர்ந்து இலக்கணம் கற்பித்தார்.
 
வீரமாமுனிவர் திருக்காவலூர்க் கல்லூரியில் இலக்கண ஆசிரியராக இருந்தபோது, தமிழ் இலக்கண நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்தார். தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை உள்ள எல்லா இலக்கண நூல்களையும் நன்கு ஆராய்ந்தார். அதன் விளைவாக "தொன்னூல் விளக்கம்" எனும் அரிய இலக்கண நூல் இயற்றினார்.
 
தொல்காப்பியர் காலத்தில் 'எ'கர, 'ஒ'கர எழுத்துகட்கு மேலே புள்ளி வைத்து எழுதப்பட்டன. அவ்வாறு புள்ளி பெறுவன மெய்யெழுத்துக்களாகும். புள்ளி பெறாமல் அமையும் 'எ'கர 'ஒ'கரங்கள் நெட்டெழுத்துகளாகக் கருதப்பட்டன. இதனால் வேறுபாடு தெரியாது மக்கள் இடருற்றனர். இந்த மருட்சியைப் போக்க, வீரமாமுனிவர் 'எ'கர 'ஒ'கரங்களுக்கு நீண்ட புள்ளியையும், மெய்யெழுத்துகட்குச் சுழித்த புள்ளிகளையும் அமைத்து வேறுபடுத்திக் காட்டினார். இதனால் 'ஏ', 'ஓ' வடிவங்கள் உண்டாயின.
 
அவ்வாறே குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரே மாதிரியாக "கெ' 'கொ' என்று அமைந்த இடத்தையொட்டி குறிலா, நெடிலா என்று அறியமுடியாதவாறு இருந்த இன்னலைப் போக்கி குற்றெழுத்துக் கொம்புகளை மேலே சுழித்து 'கே' 'கோ' எனத் திருத்தியமைத்தவரும் இவரே.
 
'நீட்டல் சுழித்தல் குறில் மெய்க்கிடுபுள்ளி' எனத் தம்முடைய தொன்னூல் விளக்கத்தில் விதியும் வகுத்தார். நிறுத்தப்புள்ளி, முற்றுப்புள்ளி போன்ற குறியீடுகளை உண்டாக்கியவரும் இவரே.
 
தொன்னூல் விளக்கம் என்னும் இவரது இலக்கணநூல், நன்னூலை ஒத்து விளங்குவது. ஆனால், நன்னூல் எழுத்திற்கும், சொல்லிற்கும் மட்டுமே இலக்கணம் கூறுவது. வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும் கூறுவதாகும்.
 
-செந்துறை முத்துவின் 'காப்பியம் பிறந்த கதை' நூலிலிருந்து.

1 comments:

"உழவன்" "Uzhavan" said...

//வீரமாமுனிவர் 'எ'கர 'ஒ'கரங்களுக்கு நீண்ட புள்ளியையும், மெய்யெழுத்துகட்குச் சுழித்த புள்ளிகளையும் அமைத்து வேறுபடுத்திக் காட்டினார்//

இந்த இடம் சற்று புரியவில்லை.

மேலும், 'நிறுத்தப்புள்ளி' என்றால் என்ன என்று தெரிந்தவர்கள் கூறவும்