Wednesday, February 11, 2009

தீவிரவாதிகளின் சொர்க்க பூமி பாக்- ஒபாமா

வாஷிங்டன்: பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது என்பதில் அமெரிக்காவுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் இருக்கும் பாகிஸ்தானின் வசீர்ஸ்தான் உள்ளிட்ட சில மாகாணங்களில் அல்-கொய்தா மற்றும் தாலிபான் திவீரவாதிகள் வெளிப்படையாகவே செயல்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை முற்றிலுமாக அழிக்க ரிச்சர்டு ஹால்புரூக்கை சிறப்பு தூதராக நியமித்துள்ளார் ஒபாமா. தற்போது அவர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பின்னர் ஆப்கானிஸ்தான் சென்று அங்கிருந்து இந்தியா வந்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்நிலையில் அதிபர் ஒபாமா அமெரிக்காவில் நிருபர்களிடம் கூறுகையில்,

பாகிஸ்தானின் பழங்குடியின மற்றும் வட மேற்கு எல்லை பகுதிகளில் தாலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் அதிக அளவில் உள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்கமாக இருந்து வருகிறது. இங்கு தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்க போகிறோம் என்பதை பாகிஸ்தானுக்கு தெரிவிக்குமாறு ஹால் புரூக்கிடம் கூறியுள்ளேன்.

இவர்களை விரைவில் ஒழிக்க வேண்டும். அப்போது தான் நமது பாதுகாப்பு நோக்கம் முழுமையாக நிறைவேறும்.

பேச்சுவார்த்தையுடன் சேர்த்து ராணுவத் தாக்குதலையும் அதிகரிக்கும் நேரம் வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் எப்போது வெளியேறும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நாங்கள் முடிவு செய்திருப்பது எல்லாம் ஒன்று தான். அல் கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க வேண்டும் என்பதே என்றார் ஒபாமா.

0 comments: