Friday, February 20, 2009

சுடுகாட்டில் கலைஞரின் "சிரிப்பொலி" ?

"மிழகம் ஒரு அமைதி பூங்கா" இப்பொழுது இந்த வாக்கியத்தைச் சொல்வதற்கு சற்று கூச்சமாகத்தான் இருக்கிறது. காவல் நிலையத்தின் படிக்கட்டுகளையும், நீதிமன்றத்தின் படிக்கட்டுகளையும் மிதிப்பதற்கு வெட்கப்பட்ட நிலைபோய், பயப்படுகின்ற ஒரு நிலைமை பொதுமக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.



பாராளுமன்றம், சட்டசபை, நகர்மன்றக் கூட்டங்கள் இங்கெல்லாம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் நாற்காலிகளையும், மைக்குகளையும் வைத்து டைம்பாஸ் செய்துகொண்டிருக்க, இங்கு காவல்துறையும், நீதித்துறையும் கற்களையும், முட்டைகளையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கேயும் தமிழனின் இரத்தத்தில்தான் புத்த போதனைகளை எழுதிக்கொண்டிருக்கிறான் (சிங்)கள்வன். இங்கேயும் நம் இரத்தத்தின் மேல்தான் சட்டம் ஒழுங்கு நடந்துகொண்டிருக்கிறது.
ஆம். நீதிதேவன் கோவிலிலும் இரத்த அபிசேகம்.

பாரிமுனை என்றதும், முல்லைக்கு தேரீந்த பாரி தான் என் நினைவுக்கு வருவான். ஆனால் இன்று ,அங்கு முல்லையின் வாசனைக்குப் பதிலாக, இரத்த வாடையும், முட்டை வாடையும்தான் வருகிறது.

அன்றொருநாள் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்த அதே காவல்துறைதான், இன்று கைநீட்டி, கம்பெடுத்து வெறியாட்டம் நிகழ்த்தியிருக்கிறது.
(பொதுமக்கள் கம்பெடுத்து சுத்துனா, அது வெறும் சிலம்பாட்டம்; ஆனா போலீஸ் கம்பெடுத்தா, அவங்க ஆடுறது வெறியாட்டம்)

இலங்கைத் தமிழர்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் வழக்கறிஞர்களின் பங்குதான் அதிகமாக இருக்கும் நிலையில், அவர்களின் மீது இப்படிப்பட்ட கொலைவெறித் தாக்குதலை ஏவிவிட்டதின் பின்னனியில் இருப்பது யார்? மத்திய அரசா இல்லை மாநில அரசா? கலவரத்தை அடக்குவதற்காகக் கொடுக்கப்ப்ட்ட லத்திகள் கார்களின் கண்ணாடிகளையும் உடைத்ததைப் பார்க்கும்போது, யாருடைய ஏவுதலும் இலலாமல் காவல்துறை இப்படிப்பட்ட கண்மூடித்தனமான நிலையை மேற்கொள்ளுமா என்றே எண்னத்தோன்றுகிறது.

ண்ணற்ற ஊடகங்கள், அத்தனை சம்பவங்களையும் நொடிப்பொழுதில் அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிற இந்த நவீன காலத்திலும், எதற்கும் பயம் இல்லாமல் கேமராக்களின் முன்னாலேயே கோஷ்டி மோதல் நடைபெறுகிறதென்றால், நமது சட்டங்களின் மீது யாருக்கும் எந்த பயமும் இல்லை என்றுதானே பொருள். ஆள்பவர்கள் தங்களுக்குச் சாதகமாக சட்டங்களை இயற்றுவதும், அகற்றுவதும், பயன்படுத்துவதுமாக இருந்தால், மக்களுக்கு எப்படி அந்த சட்டங்களின் மீது மரியாதை வரும்?

நீதிமன்ற வளாகத்தினுள் கற்களைக் குவித்து வைத்திருக்கும் தமிழக அரசே, அதை அள்ளிக்கொண்டுபோய் எங்கள் ஊர்ச் சாலைகளில் கொட்டுங்கள். புரோஜனமாகவாவது இருக்கும்.

தவறு யார் மீது இருக்கிறது என்று பார்ப்பது ஒருபுறம் இருக்கட்டும்; இப்படிப்பட்ட ஒரு கலவரம் நடைபெற்றதற்காகவே தமிழக அரசு வெட்கித் தலைகுனியவேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் அவர்கள் என்ன செய்யக் காத்திருக்கிறாரோ தெரியவில்லை.

முதல்வரின் இப்போதைய கவலையெல்லாம், சன் டிவிக்குப் போட்டியாக, புதுத் தொலைக்காட்சி ஆரம்பிப்பதில்தான் இருக்கிறது என்றே சொல்லலாம். நேற்றைய வன்முறைக் காட்சிகளைப் பார்த்தபோது, தமிழகம் விரைவில் சுடுகாடாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த நிலையில் அவர்கள் "சிரிப்பொலி" சேனல் ஆரம்பிக்கப் போகிறார்களாம். சுடுகாட்டில்தான் கலைஞரின் "சிரிப்பொலி" சத்தம் கேட்குமோ?

உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகின்ற சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது, இது "உயர்நீதி" மன்றமா இல்லை "தாழ்வுநீதி" மன்றமா என்றே எண்ணத்தோன்றுகிறது. இப்படிப்பட்ட நீதிமன்றங்களைவிட, பதினெட்டுப் பட்டிக்கும் தீர்ப்பு சொல்லும் நாட்டாமை இருக்கிற ஆலமரத்தடியே மேல்.

உழவன்

1 comments:

அத்திரி said...

நெத்தி அடியான பதிவு