Saturday, February 14, 2009

மஞ்சள் சட்டை


டி மாத
அம்மன் கோவில்
பொங்கல் விழா!
பொழைக்க வந்த
பூமி விட்டு
பொறந்த பூமிக்கு
போகுற நேரமிது!
மாலையில ஏறிய ரயிலு வண்டி
மறுநாள் காலையில இறக்கிவிட
பெத்தவ(ள்) இருக்கும்
பக்கத்து ஊருக்குப் போக
மொத்தமா நாங்க காத்திருக்க

'கரிசல் குயில்' னு ஒட்டிய ஸ்டிக்கரோடு
கலர்புல்லா வந்தது மினி பஸ்!
கொண்டு வந்த உடைமையோடு
முண்டியடிச்சு உள்ளே ஏற
வண்டிக்குள்ள இடமில்லாம
ஏணி பிடிச்சு ஏறினோம் பஸ் மேல!

ஆடிக் காத்து லேசா அடிக்க
ஆனை போல அசைஞ்சு போறோம்
ஆண்டு ஒன்னு கழிஞ்சு போச்சு
ஆத்தா அப்பன பார்க்கப் போறோம்!

பனையோலைச் சத்தம் கேக்கும்போது
பதநீ குடிச்ச ஞாபகம்
சுடுகாடு வரும்போது
சுருக்குப்பை காசு தந்த
சுப்பம்மா பாட்டி ஞாபகம்

ஊருணி வந்திருச்சு
ஊருவாசம் அடிச்சிருச்சு
ஊரு எல்லை அய்யனாரை
உள்ளுக்குள்ள வணங்கியாச்சு!

ஆயிரம் நினைவுகள்
அரை நொடியில் வந்து போனாலும்
அவ நெனப்பு மட்டும்
அடி மனசுல தங்கிருச்சு!

அம்மனுக்குப் பொங்கல் வைக்க
எம்புள்ள வந்துட்டான்னு
பெத்தவ(ள்) அவ நினைக்க
ஏனிங்கு வந்தேன்னு
எனக்குத் தான தெரியும்!

போன வருஷப் பொங்கலுக்கு
மஞ்சத் தண்ணி ஊத்தி நனைச்சா
எம் மனசை ஈரமாக்கி
ஒரு வருஷமா தவிக்க வைச்சா!

நாளைக்கும் நீ ஊத்தனும்னு
மனசு கெடந்து தவிக்குது
உன் மஞ்சளுக்கு
என் சட்டை கெடந்து ஏங்குது!

1 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்