நீரை நாம் எல்லோரும் தினமும் பருகுகின்றோம். ஆனால் நீரை எப்படி, எப்போது, எந்த அளவுக்குக் குடிக்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோமா என்றால் இல்லை. சாதாரணமாக நீரை நான்கு வகையாகப் பயன்படுத்தலாம்.
1. காய்ச்சாத குளிர்ந்த நீர்
2. கொதிக்க வைத்து ஆறிய நீர்
3. வெந்நீர்
4. மருந்து / மூலிகைகளுடன் சேர்த்துக் காய்ச்சிய நீர்
இப்படி தேவைக்கேற்றபடி நீரை ஆராய்ந்து அளவாகப் பருகினால் அது அமுதத்திற்கு ஒப்பாகும்.
கோடைக்காலம், இலையுதிர்க்காலம் தவிர மற்ற எல்லாக் காலங்களிலும் நீரைக் குறைவாகவே பருகவேண்டும். தேவைக்கு அதிகமாக நீரைப் பருகினால் உடலில் பித்தமும், கபமும் அதிகரிக்கும்.
வெந்நீர்
காய்ச்சலின்போது தாகத்துக்கு ஏற்றபடி வெந்நீர் பருகவேண்டும். கோரைக்கிழங்கு, பர்பாடகம், சுக்கு, வெட்டிவேர், விளாமிச்சைவேர், சந்தனம் இந்த ஆறு மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சிய நீரை சூடாகப் பருகுவது காய்ச்சலின் போது நன்மை பயக்கும்.
வெந்நீர் பசியை உண்டாக்கி, ஜீரண சக்தியை வளர்க்கும். உணவை ஜீரணிக்கச் செய்யும். தொண்டைக்கு நன்மை பயக்கும். சிறுநீர்ப்பையை தூய்மைப்படுத்தும்.
விக்கல், வயிற்று உப்புசம், வாதம், கபம், நாவறட்சி, இருமல், மூச்சுத்திணறல், ஜலதோஷம் இவற்றிற்கு வெந்நீரே சிறந்தது.
குளிர் நீர்
குளிர் நீர் பருகுவதால் குடிவெறி, உடல் களைப்பு, மயக்கம், வாந்தி, தலைச்சுற்றல், உடல் எரிச்சல், பித்தம் இவை நீங்கும்.
கொதிக்க வைத்து ஆறிய நீர்
கொதிக்க வைத்து ஆறிய நீர் எளிதில் செறிக்கும். களைப்பை நீக்கும். மூன்று தோஷங்களையும் போக்கும். ஆனால், கொதிக்க வைத்து ஆறி ஓர் இரவு தங்கிய நீர் வாதம், பித்தம், கபம் இந்த மூன்று தோஷங்களையும் வளர்க்கும்.
உணவு உட்கொள்ளும் வேளையில் மூன்று விதமாக நீரைப் பருகலாம்.
1. உணவு உட்கொள்வதற்கு முன்னால்
2. உணவு உட்கொள்ளும் போது
3. உணவு உட்கொண்ட பின்பு
இவ்வறு உட்கொள்ளும் நீரின் பயன்களும் ஒன்றுக்கொன்று வேறுபடும்.
உணவு உட்கொள்வதற்கு முன்னால்: உண்பதற்கு முன் பருகிய நீர் வயிற்றில் ஜீரண சக்தியைக் குறைக்கும். உடலை இளைக்கச் செய்யும்.
உணவு உட்கொள்ளும் போது: உணவுக்கு இடையே பருகும் நீரானது, உடலைப் பருக்கவோ, இளைக்கவோ செய்யாமல் சமநிலையில் வைக்கும். உடலில் தாதுக்களையும் சமநிலையில் வைத்துக்கொள்ளும். உணவை எளிதில் ஜீரணிக்க உதவும்.
உணவு உட்கொண்ட பின்பு: உண்ட பின்பு பருகும் நீரானது உடலிம் பருமனையும், கபத்தையும் ஏற்படுத்தும்.
- ஆயுள் வளர்க்கும் ஆயுர் வேதம் நூலிலிருந்து
2 comments:
Thaneer parukamal entha vuyirum irukka mudiyuma..
ellorum daily thanneer parukukirom..
athil ithanai muraikal irukiratha
really worthable information...bask
பல அருமையான தகவல்கள்
Post a Comment