Wednesday, June 18, 2008

நெல்மணியால் ஈறில் கீறினால் பல் முளைக்குமா?

''என் பையனுக்கு இரண்டு வயது ஆகப் போகிறது. இன்னும் ஒரு பல் கூட முளைக்க-வில்லை. ஆனால், என் மூத்த பெண்ணுக்கு எட்டு மாதம் ஆனபோதே பல் முளைக்க ஆரம்பித்து விட்டது. என் உறவினர்களோ, 'நெல்மணியால் ஈறில் கீறினால் பல் முளைக்கும்' என்கின்றனர். அப்படிச் செய்ய எனக்கு மனம் வரவில்லை. என் மகனுக்கு ஏன் பற்கள் முளைக்க-வில்லை? பற்கள் வளர என்ன செய்ய வேண்டும்?''

டாக்டர் கதிரேசன், பல் மருத்துவர், சென்னை:

''பொதுவாக குழந்தைகளுக்கு எட்டு மாதத்தில் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். உங்கள் குழந்தைக்கு தற்போது இரண்டு வயது ஆவதால் குறைந்தது எட்டுப் பற்களாவது முளைத்திருக்க வேண்டும். ஆனால், லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இப் படி பால் பற்கள் முளைக்காமல் போகும். இவர்களுக்கு ஆறு வயதுக்குப்பின், நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். மிக அரிதாக சிலருக்கு பால் பற்கள், நிரந்த பற்கள் இரண்டுமே முளைக்காது.

இத்தனை நாட்கள் ஆகியும் உங்கள் குழந்தைக்கு பற்கள் முளைக்காதது கவனிக்க வேண்டிய விஷயம். முதலில் உங்கள் குழந்தையின் ஈறுகளில் பற்கள் இருக்கிறதா என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். காரணம் சிலருக்கு பால் பற்கள் இருந்தும் கூட ஈறுகள் தடிப்பாக இருந்தால், பற்கள் முளைக்காமல் போக வாய்ப்புண்டு. எக்ஸ்ரேயில் பற்கள் இருப்பது தெரிய வந்தால், பல் மருத்துவரை அணுகி பற்கள் முளைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

அதற்காக ஈறுகளில் நெல்லால் கீறி விடுவது போன்ற செயல்கள் கண்டிப்பாக வேண்டாம். ஈறுகளின் உள்ளே இருக்கும் பற்கள், இதனால் சிதைவுறும் ஆபத்து இருக்கிறது.

ஒருவேளை, ஈறுகளுக்குள் பற்கள் இல்லை எனில் நிரந்தர பற்கள் வளரும் வரை, செயற்கை பற்கள் பொருத்துவது அவசியம். ஏனெனில், ஆறு வயது வரை பற்கள் இல்லாவிடில் குழந்தையின் பேசும் திறனிலும் ஜீரணத் தன்மையிலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உடனடியாக பல் மருத்துவரை அணுகி, சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.''

 

 

0 comments: