Tuesday, June 17, 2008

தொப்புளை எப்படி சுத்தம் செய்வது?

தாய்க்கும் சேய்க்குமான உறவு மட்டுமல்ல.. உணவுப் பாலமும் தொப்புள்கொடிதான். பிறந்த குழந்தையின் தொப்புள்கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் மூலமாக எத்தகைய நோய்களை குணப்படுத்த முடியும் என்று மருத்துவ உலகில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொப்புளை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் செந்தமிழ் செல்வி..

''பொதுவாக தங்கள் உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நபர்கள் கூட கவனிக்காமல் விட்டு விடும் பகுதி தொப்புள். குளிக்கும்போது உடலை நன்றாக தேய்த்து சுத்தப் படுத்தினால் கூட தொப்புள் பகுதி சுத்தமாவதில்லை. அது சருமத்தின் மட்டத்தில் இருந்து சற்றுக் குழிவடைந்து இருப்பதே இதற்குக் காரணம்.

இதனால், தொப்புளுக்குள் அதிக அழுக்கு சேர்ந்து விடுவதும், அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதும், அரிப்பு ஏற்படுவதும் பரவலாக பலரும் சந்திக்கும் பிரச்னைகள்.

இதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிட்டால் தொப்புளுக்குள் சிறு சிறு கட்டிகள் ஏற்பட்டு அது புண்ணாகி விடவும் வாய்ப்புள்ளது. சிலர் தொப்புளுக்குள் சேர்ந்த அழுக்கை சுத்தம் செய்கிறேன் என்று நகத்தால் சுரண்டுவார்கள். அப்படி சுரண்டும்போது சின்ன கீறல் விழுந்தால்கூட அதில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சீழ் கட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக தொப்புள் பகுதியில் புண் ஏற்பட்டால் அது ஆறுவதற்கு வெகுநாட்கள் ஆகும். காரணம், புண் ஏற்பட்ட பிறகு தொப்புளை சுத்தம் செய்வதும் அந்த இடத்தில் வியர்வை படாமல் பாதுகாப்பதும் மிக மிகக் கடினம்.

பெரியவர்களை விட குழந்தைகள்தான் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்-படுகிறார்கள். தொப்புள் என்ற பகுதியின் முக்கியத்துவமும் அதை சுத்தம் செய்யும் முறையும் தெரியாததுதான் இதற்குக் காரணம். சின்ன வயதில் இருந்தே தினமும் தொப்புளை சுத்தம் செய்யச் சொல்லி குழந்தைகளைப் பழக்குவதே இதற்கான தீர்வு.

சரி.. தொப்புளை எப்படி சுத்தம் செய்வது?

தினமும் குளிக்கும்போதே நகம் இல்லாத விரலால் தொப்புளுக்குள் கொஞ்சம் சோப்பு போட்டு மென்மையாக சுத்தம் செய்யலாம்.

பல நாட்கள் கவனிக்காமல் விட்டதால் தொப்புளில் அதிக அழுக்குகள் சேர்ந்து விட்டதை உணர்கிறீர்களா? தலைக்குப் போடுகிற ஷாம்புவை தண்ணீரில் கரைத்து தொப்புளில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பஞ்சால் துடைத்து விட்டால் அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்."

0 comments: