Friday, May 9, 2008

சட்டசபை சுவாரசியம் - உங்களுக்காக

சென்னை: மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உண்டியல் திருட்டு பற்றி இன்னும் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இது `காதில் பூ' என்ற எனது நாடகத்தை தான் நினைவூட்டுகிறது என சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி. சேகர் கூறினார்.

சட்டசபையில் அதிமுக உறுப்பினர் எஸ்.வி.சேகர் பேசுகையில்,தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மக்களை சென்றடையவில்லை. தியேட்டர்களில் முன் வரிசைக்கு மட்டும் ரூ. 10 கட்டணம் வாங்கிக் கொண்டு பின்னால் உள்ள இருக்கைகளுக்கு ரூ. 150 வரை இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கிறார்கள்.10 ரூபாய் டிக்கெட் வாங்குபவர்கள் வாகனத்தை நிறுத்த ரூ. 20 கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது.

திருட்டு வி.சி.டியை இந்த அரசு தடுத்து நிறுத்தியது. ஆனால் திருட்டு டி.வி.டி. அதிகரித்துவிட்டது. கிராமிய கலைஞர்களுக்கு ரூ. 1,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு விழாக்களில் தெருக்கூத்து கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். கலைமாமணி விருது வாங்கியவர் களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

நான் எதிர்க்கட்சியை சேர்ந்தவன் என்பதால் கலைவாணர் அரங்கத்தில் நாடகம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

அமைச்சர் பரிதி இளம் வழுதி: இதற்கு ஆதாரம் உள்ளதா?

எஸ்.வி.சேகர்: வாய்மொழியாக சொன்னதற்கு எப்படி ஆதாரம் இருக்கும். அடுத்த முறை செல்போனில் பதிவு செய்து தருகிறேன். சென்னை தியாகராயர் அரங்கை நேரடியாக முன் பதிவு செய்வதற்கு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.

அமைச்சர் ஸ்டாலின்: தற்போது அங்கு மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே நேரடியாகவே முன் பதிவு செய்யலாம்.எஸ்.வி.சேகர்: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடல் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.(இவ்வாறு சேகர் பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் ராமன் எழுந்து பேச அனுமதி கேட்டார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர், ராமன் பேச அனுமதி அளித்தார்)

ராமன்: ஊனமுற்றோர் பட்டியலில் சர்க்கரை நோயால் பாதித்த குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்பதை நானும் ஆதரிக்கிறேன்.

சபாநாயகர்: ராமன் ஒரு டாக்டர். அவரும் உங்கள் (எஸ்.வி.சேகர்) கருத்தை தான் ஆதரிக்கிறார்.

எஸ்.வி.சேகர்: அவர் எங்களிடம் நெருங்கி வருகிறார். (அதிமுகவினர் சிரிப்பு). அரசு எனது தொகுதியில் செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி ஆலோசிக்க என்னை அழைப்பதே இல்லை. இது எனக்கு அவமானமாக உள்ளது.

அமைச்சர் பரிதி இளம்வழுதி: அரசு விழா அழைப்பிதழ்களில் உங்கள் பெயரை போடுகிறோம். ஆனால் நீங்கள் தான் வருவதில்லை. (அதிமுக) பொதுக் குழுவுக்கு உங்களுக்கு அழைப்பு அனுப்பாமல் இருக்கலாம். நாங்கள் அப்படி அல்ல. (அதிமுக பொதுக் குழுவுக்கு அழைப்பு வராததால் கோட்டையில் சேகர் ராஜினாமா டிராமா நடத்தியது நினைவுகூறத்தக்கது)

எஸ்.வி.சேகர்: மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உண்டியல் திருட்டு பற்றி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது `காதில் பூ' என்ற எனது நாடகத்தை நினைவூட்டுகிறது. உண்டியல் திருட்டை தடுக்க ரகசிய கேமராக்கள் அமைக்கலாம்.டிரைவ் இன் உட்லண்டஸ் ஓட்டல் இருந்த இடத்தில் சுற்றுலா உணவு விடுதி அமைக்க வேண்டும். தொகுதி பிரச்சினை குறித்து முதல்வர் செல்லுக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் இ-மெயில் அனுப்பினால் உடனே பதில் வருகிறது. ஆனால் மற்ற அமைச்சர்களுக்கோ, மாநகராட்சி கமிஷனருக்கோ அனுப்பினால் எந்த பதிலும் வருவதில்லை என்றார் சேகர்.

0 comments: