Thursday, May 15, 2008

இந்தியாவில் 20% போலி மருந்து: அதிர்ச்சி ரிபோர்ட்

டெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 20 சதவீதம் போலியானவை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலி மருந்துகளை கண்டுபிடிக்க அதிரடி திட்டத்தை அதிகாரிகள் வகுத்துள்ளனர்.


தலைவலி, ஜூரம் என்றால் டாக்டரை பார்ப்பதை தவிர்த்து மெடிக்கல் ஷாப்பில் பாரசிட்டமல் போன்ற மருந்துகளை வாங்கி சாப்பிடும் 'கலாசாரம்' நம்மில் பலருக்கு உண்டு. அப்படி சாப்பிடுபவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சி தரும்.இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளில் 20 சதவீதம் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் நோயை எதிர்த்து செயல்படவில்லை என்றால் போய் தொலைகிறது என்று விட்டுவிடலாம். ஆனால் உடலுக்கு கேடுவிளைவிப்பவை என்று தெரியும் போது அதிர்ச்சி ஏற்படுகிறதல்லவா?மரணத்துக்கு வழிகோலும் இந்த போலி மருந்து விற்பனை ஆண்டுக்கு 25 சதவீதம் வளர்ந்து வருகிறது.
உலக அளவில் விற்பனையாகும் போலி மருந்துகளில் 75 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் சப்ளை ஆகிறது என்று பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றொரு அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. இந்த தகவல்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையை உசுப்பேற்றியுள்ளது. உயிர்குடிக்கும் போலி மருந்து மார்கெட் குறித்த கண்காணிப்பில் அதிகாரிகள் அதிரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி சுரேந்தர் சிங் தலைமையில் போலி மருந்து மார்க்கெட் வேட்டை மேற்கொள்ளப்படுகிறது. 6 மாத கால அவகாசத்தில் இந்த சோதனை நடத்தி முடிக்கப்படும். மருந்து ஆய்வாளர்களே நோயாளிகளாக சென்று 31,000 மருந்துகளை சாம்பிள்களாக பெற்று பரிசோதனைக்கூடங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

61 முன்னணி மருந்து கம்பெனிகளின் மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. காசநோய், அலர்ஜி, சர்க்கரை நோய், இருதய நோய், ஸ்டிராய்டு, NSAID ரக வலி நிவாரணிகள் மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளை சோதித்து அறிய உள்ளனர். - நன்றி - தட்ஸ் தமிழ்

0 comments: