Wednesday, April 16, 2008

எண்ணூர் அருகே புதிய துறைமுகம்: தமிழக அரசு-எல் அண்ட் டி (L&T) கூட்டாக கட்டுகின்றன


சென்னை: தமிழக அரசும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும் இணைந்து திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் ரூ. 3,068 கோடி முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் தளம் (port) மற்றும் துறைமுக வளாகத்தை (ship yard) அமைக்கவுள்ளன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:இந்த கப்பல் தளத்தை அமைப்பதற்கு ஆந்திரா, குஜராத், மகாரஷ்டிரா மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல கரையோர பகுதிகளை ஆய்வு செய்தபின் காட்டுபள்ளி கிராமத்தின் கரையோர நிலங்களே உகந்ததென லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்கு தமிழக அரசின் தொழில் முன்னேற்ற அணுகுமுறையும், தமிழகத்தில் பெருவாரியாக அமைந்துள்ள தொழில்நுட்ப கல்வி மையங்களில் பயிற்சி பெற்ற, திறமை வாய்ந்த மனிதவள ஆதாரங்களும் முக்கிய காரணங்களாகும்.இந்தக் கப்பல் தளத்தை அமைப்பதன் மூலம் 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், மேலும் 5,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் உருவாகும்.
இந்த கப்பல் தளம் மற்றும் துறைமுக வளாகத்தில் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள், திரவ எரிவாயு மற்றும் எரி வாயு ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள், கடற்படைக்குத் தேவையான போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கலங்கள் ஆகியவை வந்து செல்லும் வசதிகள்,பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஆகியவற்றைக் கையாள்வதற்கு ஏற்ற உபகரணங்களுடன் கூடிய வசதிகள், வணிக மற்றும் போர்க் கப்பல்களைச் செப்பனிடுதல் மற்றும் மாற்றியமைக்கும் பணிகளுக்கான வசதிகள்,கப்பல் கட்டுமானத்திற்குத் தேவையான கனரக இயந்திர கட்டமைப்புகள், பாகங்கள் மற்றும் துணைப் பொருட்கள் தயாரிப்பு வசதிகள் ஆகியவற்றோடு கூடிய முழு அளவிலான ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட பிரிவுகளும் உருவாக்கப்படும்.
இத் திட்டத்தின் கீழ் கப்பல் கட்டுமானத்திற்கும், ஏற்றுமதிக்கும் தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பல துணைத் தொழில் பிரிவுகளும் உருவாக்கப்படும்.இத்திட்டம் செயல்படும் போது, சென்னையில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் தயாரிக்கும் மையங்கள் அமைந்துள்ளது போல, கனரகத் தொழில்களுக்கான ஒரு மையமாகவும் இது திகழும்.லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் பொறியியல், கட்டுமான மற்றும் கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் முதன்மையானதாகும்.
நாட்டின் பல இடங்களிலுள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் பொறியாளர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் பணி புரிகின்றனர்.மேலும் இந்நிறுவனம் நாட்டிலேயே அரசு அல்லாத நிறுவனங்களில் போர்க் கப்பல்கள் தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்றிருக்கும் ஒரே நிறுவனம் ஆகும். இத் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகளை டிட்கோவும், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும் இணைந்து செய்து வருகின்றன.
இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் இவ் வாண்டு இறுதிக்குள் தொடங்கப்பட்டு அதன் பின்னர் இருபத்தி நான்கு மாதங்களில் முடிவடையும்.இத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் டிட்கோ நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராம சுந்தரம், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர் குழும உறுப்பினர் மற்றும் தலைவர் (கட்டுமானப் பணி) ரங்க சுவாமி ஆகியோர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்திட்டனர்.
அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், லார்சன் அண்ட் டூபுரோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நாயக், தலைமைச் செயலாளர் திரிபாதி, நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் அலாவுதீன் ஆகியோரும் உடனிருந்தனர். - தேட்ஸ் தமிழ்

0 comments: