Thursday, April 17, 2008

மேல்நிலைப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவு


சென்னை: பிளஸ்-1 வகுப்பில் மாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டையும் பள்ளிகள் கட்டாயமாக அமலாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கை நடக்கும் நிலையில், பிளஸ் ஒன் படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.இந்த உத்தரவை நடப்பு கல்வியாண்டிலேயே (2008-09) அமல்படுத்த வேண்டும், அவ்வாறு அமல்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டால் தான் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கணிதம், மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட குரூப்-1 மற்றும் குரூப்-2 பாடங்களில் அதிக அளவில் சேர முடியும்.இதன்மூலம் அவர்களுக்கு மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு அதிகமாகும்.ஆனால் பல தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சில பள்ளிகள் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை. இதுகுறித்த புகார்கள் எங்களுக்கு பெருமளவில் வருகிறது.கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு பாடங்களில் படிக்க இடம் கிடைக்காத பட்சத்தில்தான் தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களை எடுத்து படிக்கிறார்கள்.எனவே நடப்பு ஆண்டில் பிளஸ்-1 வகுப்பில் மாணவர் சேர்க்கையின்போது 69 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றார். - நன்றி தேட்ஸ் தமிழ்

0 comments: