இது நம்ம ஊரு ...
அடித்துப் பிடித்து ஏறி, சன்னலோர இருக்கையில் அமர்ந்தபிறகுதான் பெருமூச்சு வந்தது. தொட்டிலாய் ஆடும் சென்னை நகரப் பேருந்துக்குள், வங்கக்கடலின் தாலாட்டுக் காற்று வந்தால், கண்கள் சொருகாமலா போகும். காளையை அடக்கிய வெள்ளையத்தேவனால் கூட, பேருந்துத் தூக்கத்தை அடக்கமுடியாது என்றே சொல்லலாம்.
தேன்கூடு கல்பட்டு கலைந்ததுபோல, கூச்சலால் என் அரைகுறைத் தூக்கம் கலைந்தது. கண் விழித்தேன்.
ஒரு பெண் மலையாளத்தில் திட்டிக்கொண்டிருந்தார்; பக்கத்திலிருந்த இன்னொரு நடுத்தெரு வயதுக்காரர் ஒருவர் தெலுங்கிலே திட்டிக்கொண்டிருந்தார்;
வாசலில் இருந்து வந்த ஒரு கன்னடக்குரல், அவனை வெளியே இறக்கி விடு என்றது.
பின் இருக்கையில் இருந்தவர் என்ன பிரச்சனை என்று என்னிடம் கேட்டார். அவர் பேசிய ஹிந்தி எனக்குத் தெரியாவிட்டாலும், இதைத்தான் கேட்டிருப்பார் என்று என்னால் யூகிக்க முடிந்தது.
கூட்டத்திலிருந்து வந்த தமிழ்க்குரல்களை வைத்துதான், யாரோ ஒருவன் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்துவிட்டான் என்பதைப் புரிந்துகொண்டேன்.
எது எப்படியோ ... இத்தனை மொழிகளையும் ஒரேயிடத்தில் கேட்கவேண்டுமென்றால், அது நம் ஊரில் மட்டும்தான் முடியும் என்பதை நினைக்கும்போது பெருமிதமே மேலோங்கியது.
உழவன்
0 comments:
Post a Comment