Tuesday, April 29, 2008

10 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி9 விண்ணில் பாய்ந்தது




சென்னை (எஜென்சி), திங்கள்கிழமை, 28 ஏப்ரல் 2008 ( 09:42 IST )
பத்து செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.- சி9 ராக்கெட் இன்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் இன்று காலை 9.23 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.இதில், இந்தியாவின் 2 செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட 10 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஏனைய 8 செயற்கைகோள்களை கனடா மற்றும் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தயாரித்துள்ளன.

இந்தியாவின் `கர்டோசாட்-2ஏ' மட்டுமே, 690 கிலோ எடை கொண்ட பெரிய செயற்கைக்கோள். இது, சுமார் 10 கி.மீ. சுற்றளவிலான பரப்புகளை கருப்பு-வெள்ளையில் படம் பிடித்து அனுப்பவல்ல, பான் எனப்படும் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

`கர்டோசாட்-2ஏ' செயற்கைக் கோள் மூலமாக, நாடு முழுவதும் உள்ள சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை கண்காணிக்க முடியும். புலனாய்வு பணிகளுக்கும் இந்தச் செயற்கைக் கோள் உதவும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் நானோ தொழில் நுட்ப பணிகளுக்கு வெளிநாடுகளை சேர்ந்த செயற்கை கோள்கள் உதவும். ஏனைய செயற்கைக்கோள்கள் அனைத்தும் `நானோ' எனப்படும் சிறிய வகையைச் சேர்ந்தவை.

இந்தியாவின் மற்றொரு கோளான ஐ.எம்.எஸ்.-1, 83 கிலோ எடை கொண்டது. வெளிநாட்டு செயற்கை கோள்களின் மொத்த எடை 50 கிலோ ஆகும்.மொத்தம் 10 செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது உலக சாதனையாகும்.
இதுவரை அதிகபட்சமாக, ரஷ்யா 8 செயற்கை கோள்களையும், ஐரோப்பா 7 செயற்கை கோள்களையும் ஒரே ராக்கெட்டில் அனுப்பி வைத்துள்ளன. அமெரிக்காவின் `நாசா' மையம், ஒரே சமயத்தில் 4 செயற்கைக் கோள்களை அவ்வப்போது அனுப்பி வைத்துள்ளன.
விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி - 9 ராக்கெட், `கர்டோசாட்-2ஏ' செயற்கைக் கோளை முதலில் விண்ணில் நிலை நிறுத்தும். அதனைத் தொடர்ந்து தலா 45 முதல் 100 வினாடிகளில் ஒவ்வொரு செயற்கைக் கோளாக, மொத்தம் ஆயிரம் வினாடிகளுக்குள் அனைத்து செயற்கை கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்படவுள்ளன. பூமியின் சுற்றுப்பாதையில் 635 கி.மீ. தொலைவில் அவை நிறுத்தப்படும்.

0 comments: