Wednesday, April 9, 2008

நடப்பதுதான் என்ன? பாவப்பட்ட தமிழன்

சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, சட்டசபைக்கு நேற்று திடீரென வந்தார். சபையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து, அவரும் மற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க் களும் வெளிநடப்பு செய்தனர். `ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற துணிவில்லாத முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்," என்று ஜெயலலிதா பேட்டியளித்தார். சட்டசபை நிகழ்ச்சிகள் காலை 9:30 மணிக்கு தினமும் துவங்கும். முதலில் கேள்வி -பதில் நேரம், பின்னர், `ஜீரோ அவர்' எனும் பூஜ்ய நேரம் முடிந்ததும், மானியக் கோரிக்கை மீதான விவாதம் என்ற அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். கேள்வி - பதில் நேரம் முடிந்ததும் முக்கிய பிரச்னைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி, அதற்கு ஆளுங்கட்சி சார்பில் பதிலளிப்பது வழக்கம். ஆனால், நேற்று காலை 9:05 மணியளவில் ஜெயலலிதா சபைக்குள் வந்துவிட்டார். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக வந்தனர். ஆளுங்கட்சியினர் தொடர்ந்து வரத் தொடங்கினர். ஜெயலலிதா காலையிலேயே வந்து சபைக்குள் அமர்ந்திருப்பதை அறிந்ததும் சபையில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 9:28 மணிக்கு முதல்வர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகன் ஆகியோர் சபைக்குள் நுழைந்தனர். 9:30 மணிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளே நுழைந்ததும், முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், ஜெயலலிதா மற்றும் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். சபாநாயகர் திருக்குறள் படித்துவிட்டு `வினா - விடை நேரம்' என்று அறிவித்ததும், ஜெயலலிதா எழுந்து, முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். அவருக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். அவருக்கு பேச வாய்ப்பளிக்கும்படி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று குரல் எழுப்பினர். உடனே சபாநாயகர், `எதுவாக இருந்தாலும் கேள்வி நேரம் முடிந்ததும் கேளுங்கள். வாய்ப்பளிப்பது குறித்து பரிசீலிக்கிறேன். விதி 32ன்படி கேள்வி நேரத்தின் போது வேறு விவாதம் கூடாது' என்றார். அதை ஏற்காமல் ஜெயலலிதா நின்றபடியே இருந்தார். கேள்வி நேரம் துவங்கியது. இருந்தாலும், அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். சபாநாயகர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் உட்காரவில்லை. தொடர்ந்து அமளி நிலவியது. பின்னர், பேச வாய்ப்பளிக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி ஜெயலலிதா உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் சபையில் இருந்து வெளியேறினர். வெளியில் வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபை விதி 56ன் கீழ், முக்கிய பொருள் குறித்து விவாதிக்க அ.தி.மு.க., கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதிக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறுத்தி வைக்கப்படும் என்று முதல்வர் தன்னிச்சையாக அறிவித்ததை கண்டித்து, தமிழகம் எங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க கோரினோம். அனுமதி மறுக்கப்பட்டது. லோக்சபாவில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதித்துள்ளனர். அதை நான் சொல்லி கேட்டதற்கு, சபாநாயகர் அனுமதி மறுத்தார். சட்டசபையில் தெரிவிக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்து ஒகேனக்கல் திட்டம் நிறுத்தப்படுகிறது, கைவிடப்படுகிறது என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதை செய்திருக்கவே கூடாது. இதை தட்டிக் கேட்பதற்காக தான் நான் வந்திருக்கிறேன். கருணாநிதி எடுத்த முடிவால் கொந்தளிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. கோயம்பேட்டுக்கும் ஒகேனக்கல் திட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், கோயம்பேட்டில் காய்கறி வியாபாரிகள் போராட்டம் நடத்துகின்றனர். ஊட்டியில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதுபற்றி விவாதிக்க அனுமதி தராதது வெட்கக் கேடானது; கண்டனத்திற்குரியது. கர்நாடகத்தில் புதிய அரசு பதவியேற்றதும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்கிறார் கருணாநிதி. ஒரு முதல்வர் பேசுகிற பேச்சா இது? கர்நாடக தேர்தலுக்கும் ஒகேனக்கல் திட்டத் திற்கும் என்ன சம்பந்தம். இத்திட் டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசின் அனுமதியோ, தயவோ தேவையில்லை. தமிழக எல்லையைக் கடந்து வருகிற தண்ணீரைத் தான் இத்திட்டத் திற்கு பயன்படுத்துகிறோம். அவர்கள் என்ன தண்ணீர் கொடுக்கிறார்களோ அதிலிருந்து தான் திட்டத்தை நிறைவேற்றப் போகிறோம். எதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றலாமா, கூடாதா? என்று நிர்ணயிக்கும் அதிகாரம் கர்நாடகத்திற்கு இருக்கிறது என்று கருணாநிதி ஒப்புக் கொள்கிறாரா? கர்நாடகத்திற்கு இல்லாத அதிகாரத்தை கருணாநிதியே வழங்குகிறாரா? இப்படிப்பட்ட வார்த்தை முதல்வர் வாயில் வரவே கூடாது. தமிழக உரிமையை இப்படி விட்டுக் கொடுக்கும் முதல்வர் தமிழகத்திற்கு தேவைதானா என்று கேட்க வேண்டும். இத் திட்டத்தை நிறைவேற்ற துணிவில்லாத முதல்வர், பதவி விலக வேண்டும். இத்தகைய முதல்வர் தமிழகத்திற்கு தேவையில்லை. அரசியல் உறுதிமிக்க, ஒரு தைரியமான அரசு தான் மக்களுக்கு தேவை. அத்தகைய அரசை அ.தி. மு.க., வழங்கும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு ஜெயலலிதா கூறினார். கனிமொழி காரணமா?: ஜெயலலிதா அளித்த பேட்டியில், `முதல்வர் கருணாநிதி எதைச் செய்தாலும் தன் வளத்திற்காக, தன் குடும்ப நலத்திற்காகத் தான் செய்வார். 5ம் தேதி திட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்தார். 6ம் தேதி டில்லியில் அமைச்சரவை விஸ்தரிப்பு நடந்தது. ஒருவேளை திட்டத்தை நிறுத்தி வைத்தால் கனிமொழிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ? அதற்காக தமிழக உரிமைகளை காற்றில் பறக்கவிட்டு, இத்திட்டம் கைவிடப்படுகிறது என்று அறிவித்தாரோ என்னவோ? ஆனால், இப்போது கருணாநிதியும் ஏமாந்து விட்டார். கனிமொழிக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை. இப்போது தமிழக மக்களும் ஏமாற்றப்பட்டு விட்டனர். கனிமொழிக்கு அமைச்சர் பதவி கிடைக்காததைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால், தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுவது குறித்து நாங்கள் கவலைப்பட்டே ஆக வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்' என்றார். ம.தி.மு.க.,வும் வெளிநடப்பு: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக சட்டசபையில் ஜெயலலிதா பேச அனுமதி அளிக்காததைக் கண்டித்து, அ.தி.மு.க., செய்த வெளிநடப்பில் ம.தி.மு.க.,வும் கலந்து கொண்டது. சபைக்கு வெளியில் ம.தி.மு.க., பொருளாளர் கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கும், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இத்திட்டம் 98ம் ஆண்டே மத்திய அரசின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் பேச எந்த அவசியமும் இல்லை. இத்திட்டத்தை நிறுத்தி வைத்து கன்னட மக்களுக்கு முதல்வர் உதவி செய்துள்ளார். தமிழக மக்களுக்கு எதிராக முடிவெடுத்திருக்கிறார். கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இத்திட்டத்தை ஏற்கப் போவதில்லை. தமிழகத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து இத்திட்டத்திற்கு போராடுகின்றனர். இந்த பலத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து இத்திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சிக்காக முதல்வர் இதுமாதிரியான முடிவெடுத்துள்ளது வருந்தத்தக்கது. தமிழ் மக்களை காட்டிக் கொடுத்துள்ளார். இத்திட்டத்திற்கு எதிராக போராடும் கன்னட வெறியர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதுபற்றி பேச அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு கண்ணப்பன் கூறினார். ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஞானதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். காமராஜர் திட்டம்: ஜெயலலிதா அளித்த பேட்டியில், `ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களின் 40 ஆண்டுகால கனவு திட்டம். காமராஜர் இருந்த போது 65ம் ஆண்டு இத்திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர், நிறைவேற்ற முடியாமல் போனது. எம்.ஜி.ஆர்., இருந்தபோது 86ம் ஆண்டு 110 கோடி ரூபாய் செலவில் எடுத்துக் கொள்ளப்பட்டது. எம்.ஜி.ஆர்., பெருந்தன்மையாக திட்டத்திற்கு காமராஜர் பெயரையே வைத்தார். 87ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., மறைந்து விட்டதால் திட்டம் நிறைவேறவில்லை. 94ம் ஆண்டில் நான் முதல்வராக இருந்தபோது 450 கோடி ரூபாயில் செயல்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டேன். மத்திய அரசு அனுமதியில் தாமதம் ஏற்பட்டதால் நிறைவேறவில்லை. 98ம் ஆண்டு மத்திய நீர்வளத் துறை அமைச்சக செயலர் முன் நடந்த கூட்டத்தில் கர்நாடக அரசால் ஒகேனக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2003ம் ஆண்டு இத்திட்டத்தை நான் மீண்டும் எடுத்தேன். மொத்தம் ஆறாயிரத்து 755 கிராமங்களை உள்ளடக்கி, ஆயிரத்து ஐந்து கோடி ரூபாய் ஜப்பானிய நிதி உதவியுடன் நிறைவேற்ற மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பினேன். 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2008ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். எடியூரப்பா போராட்டம் நடத்தினார். கருணாநிதி மவுனம் காத்தார். அ.தி.மு.க., சார்பில் போராட்டம் அறிவித்தேன். போராட்டம் அறிவித்தவுடன் தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதி, ஸ்டாலின் மூலம் சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அனைத்து கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது' என்று கூறினார். - நண்றி : தினமலர்

0 comments: