Monday, April 7, 2008

பொக்ரானில் நடந்த அணுசக்தி சோதனை-ஒகேனக்கல் திட்டம் தாமதம்?


சென்னை: `ஒகேனக்கல் திட்டத்தை ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்கலாம் என்று கூறியிருக்கிறேனே தவிர, திட்டமே வேண்டாம் என்று சொல்லி விடவில்லை' என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை: கோட நாடு எஸ்டேட் பற்றி சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளிவந்துள்ளதே? கோட நாடு வழக்கு, ஐகோர்ட்டில் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் முன் வந்த போது, `இது போன்ற வழக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களுக்கு எந்த நீதிபதி வேண்டுமென்று வேட்டையாடுகிறீர்களா? உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு தெரியும். ஒரு குறிப்பிட்ட நீதிபதி தான் உங்களது வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கோர உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது' என்று சொல்லியிருக்கிறார். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு 1998ம் ஆண்டே ஒப்புதல் கிடைத்த போதிலும், அதை உடனே நிறைவேற்றாமல், 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டது ஏன் என்று ராமதாஸ் குறை கூறியிருக்கிறாரே? ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டிய திட்டம் அது. நினைத்தவுடன் நிறைவேற்றி விட முடியாது. 1997ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், அப்போதைய தர்மபுரி மாவட்டத்தில், நான்காயிரத்து 101 குடியிருப்புகளுக்கு காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட ரூ.576 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, ஜப்பான் நிதியுதவி பெற மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 1998 ஜூன் மாதம் மத்திய நீர்வள அமைச்சகத்தின் செயலர், கர்நாடக மற்றும் தமிழக அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, இத்திட்டத்துக்கு காவிரியில் இருந்து நீர் எடுப்பது குறித்து ஆலோசித்தார். அந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இத்திட்டத்துக்கு மத்திய அரசு தடையில்லா சான்று வழங்கியது. அதே ஆண்டு டிசம்பர் மாதம், தர்மபுரி மாவட்டத்தில் விடுபட்ட மற்ற பகுதிகளையும் இணைத்து, ஆயிரத்து எட்டு கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. 1998ம் ஆண்டு மே மாதம், பொக்ரானில் நடந்த அணுசக்தி சோதனையைத் தொடர்ந்து ஜப்பான் நிதி நிறுவனம், இந்தியாவின் எந்தவொரு புதிய திட்டத்துக்கும் நிதியுதவி வழங்குவதை நிறுத்தி வைத்து விட்டது. 2001ம் ஆண்டு வரை பல்வேறு முயற்சிகளில் நிதி திரட்ட முற்பட்டு, எவ்விதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. 2005ம் ஆண்டு இத்திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க, ஜப்பான் நிதி நிறுவனத்துக்கு பரிந்துரைக்குமாறு மத்திய அரசிடம் மீண்டும் கேட்கப்பட்டது. இத்திட்டம், ஜப்பான் நிதி நிறுவனத்துக்கு 2006ல் அனுப்பி வைக்கப்பட்டது. ஜப்பான் நிறுவனத்தின் பல்வேறு தொழில் நுட்பக் குழுக்கள், இத்திட்டத்தை பற்றி நேரில் ஆய்வு மேற்கொண்டன. அக்டோபர் மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில், இத்திட்டத்தின் மதிப்பீடு ஆயிரத்து 334 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ளாட்சித் துறை அமைச்சர், ஜப்பான் அதிகாரிகளை நேரில் சந்தித்து இத்திட்டத்துக்கான ஒப்புதலை பெற்றார். அதே மாதம் 26ம் தேதி இத்திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினேன். அப்போது வரை கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படவில்லை. எனவே, சொல்வது சுலபம், செய்வது கடினம். ஒகேனக்கல் திட்டத்துக்கு நடக்கும் கிளர்ச்சியை, கர்நாடக தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டுமென்று தாங்கள் விடுத்த வேண்டுகோளை, சில கட்சியினர் பெரிய துரோகம் என்றும், சரணாகதி என்றும் வர்ணித்திருக்கிறார்களே? பல ஆண்டுகளுக்கு முன், அரியலூரில் ரயில் கவிழ்ந்து வரலாறு காணாத உயிர்ச்சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. அந்த வேதனையிலும் கூட, அரியலூர் அருகில் உள்ள சமூக விரோதிகள், இருட்டில் ஆற்றில் மிதந்த பிணங்களின் கை, காது, கழுத்துகளில் அணிந்திருந்த நகைகளை திருடிக் கொண்டு போனார்கள். அதற்கு இடம் தராமல், இப்போது `விபத்து' தவிர்க்கப்படுவதை அத்தகைய விஷமிகள் விரும்புவார்களா? மேலும், ஒகேனக்கல் திட்டம் அறவே கைவிடப்படுகிறது என்று சொல்லவில்லை. கர்நாடக மாநில தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. தற்போது, அங்கு முடிவெடுக்கக் கூடிய அரசு இல்லை. அதனால், ஒரு மாதத்துக்கு இதை ஒத்தி வைக்கலாம் என்று கூறியிருக்கிறேனே தவிர, திட்டமே வேண்டாம் என்று சொல்லவில்லை. காங்கிரஸ் வேண்டுகோளுக்காகத் தான் இவ்வாறு தாங்கள் முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறதே? காங்கிரஸ் தரப்பில் இருந்து யாரும் அப்படிப்பட்ட வேண்டுகோளை வைக்கவில்லை. இதைப் பற்றி பேசவும் இல்லை. இரண்டு மாநிலங்களிலும் அப்பாவிகள் பாதிக்கப்படுவதை எண்ணி எடுக்கப்பட்ட முடிவு தான் அது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments: