Monday, April 28, 2008

ஒரே ராக்கெட்டில் 10 சாட்டிலைட்டுகள்

சென்னை: பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் நாளை 10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -சி9 ராக்கெட் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்து செயற்கைக் கோள்கள் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இஸ்ரோவின் வரலாற்றில் ஒரே ராக்கெட் மூலம் பத்து செயற்கைக் கோள்கள் ஏவப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நாளை காலை 9.20 மணிக்கு சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. இது பி.எஸ்.எல்.வி வரிசையில் 13வது பயணமாகும்.

கார்ட்டோஸாட்-2ஏ, இந்திய சிறு செயற்கைகோள் (ஐஎம்எஸ்-1) மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் என 10 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் ஏவப்படுகிறது.8 நானோ செயற்கைகோள்களும் கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடையதாகும். இவை ஒவ்வொன்றும் 3 முதல் 16 கிலோ எடை கொண்டது.

8 நானோ செயற்கைகோள்களின் மொத்த எடை 50 கிலோ.இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களான கார்ட்டோஸாட்-2ஏ 690 கிலோ எடை கொண்டது. இதில் அதிநவீன பேன் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ வடிவமைத்த (ஐஎம்எஸ்-1) இந்திய சிறு செயற்கைகோள் 83 கிலோ எடை கொண்டது.நேற்று இரவு ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. இதுவரை திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

0 comments: