Friday, March 28, 2008

தசாவதாரத்தில் கருணாநிதி, ஜெ., திருமா!!!

 
தசாவதாரத்தில் கருணாநிதி, ஜெ., திருமா!!!
கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் 3 வித கெட்டப்களில் வரும் கமல்ஹாசனுடன், அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா, திருமாவளவன் ஆகியோர் நடிக்கவுள்ளனராம்.

சினிமாவால் பலவற்றையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிப்பது போல இந்த புதிய செய்தி உள்ளது. முதல்வராக கருணாநிதியும், எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவராக தொல்.திருமாவளவனும், தசாவதாரம் படத்தில் ஆளுக்கு ஒரு சீனில் தோன்றவுள்ளனர்.

படத்தின் கதைப்படி சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி கமல், மிகப் பெரிய ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இதையடுத்து அவருக்குப் பாராட்டு விழா நடத்த தீர்மானிக்கின்றனர். அவரது சொந்த ஊர் சென்னை என்பதால் சென்னையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (அதுவும் கமல்தான்) தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு விஞ்ஞானி கமலைப் பாராட்டுகின்றனர். இதுதான் காட்சி.

இந்த சீனை தத்ரூபமாக எடுக்க கமல் விரும்பினார். இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காட்சி வந்திராத வகையில் அது இருக்க வேண்டும் எனவும் விரும்பினார்.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா, திருமாவளவன் ஆகியோர் அந்தக் காட்சியில் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் எனவும் தீர்மானித்தார்.

இதற்காக முதல்வர் கருணாநிதியை நேற்று நேரில் சந்தித்தார். அந்தக் காட்சி தொடர்பான சில சீன்களின் புகைப்படங்களையும் முதல்வரிடம் காட்டினார். கமல் கூறிய விதத்தால் ஈர்க்கப்பட்ட முதல்வர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டாராம். அத்தோடு நில்லாமல் உடனடியாக அந்த சீனையும் படமாக்கி விட்டனர், படு ரகசியமாக.

இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்திற்கு விரைந்தார் கமல். அவரது காட்சிப்படி, ஹெலிகாப்டரில் ஜெயலலிதாவும், விஞ்ஞானி கமலும் வருகிறார்கள். கமல்ஹாசன், ஜெயலலிதாவை வரவேற்று மேடைக்கு அழைத்துச் செல்கிறார். இதுதான் காட்சி. இந்தக் காட்சியில் நடிக்க ஜெயலலிதாவும் ஓ.கே. சொல்லவே, அந்தக் காட்சியையும் சட்டென்று எடுத்து முடித்து விட்டனராம். படப்பிடிப்புக்கு ஜெயலலிதா சிறப்பாக ஒத்துழைத்தாராம்.

அதேபோல திருமாவளவனும் இதுபோன்ற ஒரு காட்சியில் பங்கு கொண்டு புரட்சிகரமாக உரை நிகழ்த்துவது போல காட்சி வருகிறதாம்.

படம் குறித்து இப்படி பரபரவென தகவல்கள் மட்டும் வெளியாகி வரும் நிலையில் படம் எப்போது வரும் என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.

ஏப்ரல் மாதம் ஆடியோ ரிலீஸ் இருக்கும் எனத் தெரிகிறது. இதில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். முதல்வர் கருணாநிதியும் பங்கேற்கிறார். ஜூன் மாதம் படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

0 comments: