Thursday, April 2, 2009

தமிழகம் ஒரு முன்னோடி?

உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த மாதம் 28ம் தேதி இரவு 8.30 முதல் 9.30 வரை விளக்குகளை அணைக்குமாறு ஒரு சமுக நல அமைப்பு கேட்டுக்கொண்டது.

இந்த செய்தியைக் கேட்டவுடன், நிச்சயம் ஒட்டுமொத்த தமிழகமும் சிரித்திருக்கும். கூடவே நாம் ஏன் விளக்குகளை அணைக்கவேண்டும் எனவும் எண்ணியிருப்பார்கள்.

ஒரு மணிநேரம் மட்டும் சில விளக்குகளை அணைத்த சமூக ஆர்வலர்களே.. நாங்களெல்லாம் ஒரு நாளைக்கு மட்டும் எத்தனை மணிநேரம் விளக்குகள் இல்லாமல் இருக்கிறோம் தெரியுமா? இதைச் செய்வதற்கென்றே எங்கள் தமிழகத்தில் ஒரு தனி அரசுத் துறையே திரு.ஆற்காட்டார் அவர்கள் தலைமையில் இருக்கிறது என்கிறது தமிழகம்.

ஒருவேளை இந்த ஐடியாவே நம்ம ஊரைப்பார்த்துதான் இந்த உலகத்துக்கே வந்திருக்குமோ?? எது எப்படியோ உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் தான் முன்னோடியோ?

சமீபத்தில் படித்த ஒரு குறுஞ்செய்தி:

அரவிந்சாமிக்கும் ஆற்காடு வீராசாமிக்கும் என்ன வித்தியாசம்?
அரவிந்சாமி நடிச்ச படம் மின்சாரக்கனவு; ஆற்காடு வீராசாமி காலத்தில் "மின்சாரமே கனவு"

மின்பற்றாக்குறையைப் பற்றி நாம் இவ்வளவு பேசுகிறோமே, இந்த பிரச்சனை வருகின்ற தேர்தலில் பிரதிபலிக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் சமீபத்தில் திரு.ஆற்காட்டார், பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியானது தோல்வியைச் சந்தித்தால், அதற்கு மின்தட்டுப்பாடு மட்டும்தான் காரணமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உழவன்
tamil.uzhavan@gmail.com

0 comments: