Tuesday, August 19, 2008

குசேலன் தோல்விக்கான காரணங்கள்..

போன நூற்றாண்டு நாற்காலியையும், ரசம் போன கண்ணாடியையும் வைத்துக்கொண்டு, தன் வயிற்றுப்பிழைப்புக்குக் கூட போராடுகின்ற நிலைமையில் சவரத்தொழில் செய்யும் கதாபாத்திரமாக பசுபதி-மீனா குடும்பத்தைக் காட்டுகின்றனர். ஆனால், மீனாவுக்கும், தன் மூன்று குழந்தைகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் காஸ்ட்யூம்கள் அவர்களின் ஏழ்மையை உணர்த்தவில்லை. ஏழ்மையான குடும்பத்தை இயக்குநர் இதுவரை பார்க்கவேயில்லை போலும். படம் பார்க்கும் நமக்கு, இக்குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்கிற உணர்வு வரமறுக்கிறது.
 
நட்பு நட்பு என்று பட ரிலீஸிற்கு முன்னர் பேசிய இயக்குநரிடமே கேட்கலாம்; இந்தப் படத்தில் எந்த இடத்தில் நட்பைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள் என்று. படத்தின் எந்த இடத்திலும் நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. படத்தின் கடைசி நிமிடத்தில் ரஜினி, என் பள்ளி நண்பனை நான் இன்னும் மறக்கவில்லை என்று மைக் முன்னால் நின்று பேசிவிட்டால், படம் முழுக்க நட்பைப் பற்றிச் சொல்லிவிட்டதாக அர்த்தமாகி விடாது. நட்பு என்றால் என்ன என்றே தெரியாமல் படத்தை ஆரம்பித்திருப்பதும் குசேலனின் வீழ்ச்சிக்குக் ஒரு காரணம்.
 
இடைவேளை வரை வடிவேலுவை நம்பியவர்கள், இடைவேளைக்குப் பின்னர் ரஜினியை நம்பியிருக்கிறார்கள். வடிவேலு அவர் பெயரைக் காப்பாற்றிவிட்டார் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஆனால் இடைவேளைக்குப் பின்னர், நிமிடத்திற்கொருமுறை சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் என்ற கோஷங்கள்தான் கடைசிவரை நம் காதுகளில் விழுவது, சற்று எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது.
 
ரஜினி ஒரு சினிமாக்காரர் என்பதால், புத்தகமாக தன் சுயசரிதையை வெளியிடாமல், சினிமாவாக வெளியிட முயன்று தோற்றுப்போயிருக்கிறார். பல கோடிகளை அள்ளுவதற்காக தயாரிபாளரும், இயக்குநரும் குசேலன் ரஜினி படம் ரஜினி படம் என்று சொல்லி அனைவரையும் ஏமாற்ற முயன்று தோல்விகண்டிருக்கிறார்கள். பல கோடிகளுக்காக, ரஜினியும் இதற்கு உடந்தையாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.
 
இப்படியெல்லாம் திரைக்கதை வலுவிழந்து காணப்பட்டது மட்டுமல்ல; ரிலீஸிற்கு முந்தைய நாள், ரஜினி கேட்ட `மன்னிப்பு` தான் இந்தப் படத்தின் வெற்றியைப் பெருமளவில் பாதித்திருக்கிறது. காரணம் இந்த அளவிற்கு மோசமான தோல்வியை தருமளவில் குசேலன் மிகப் பெரிய மொக்கைப் படம் அல்ல. பாபாவை விட நன்றாகவே உள்ள குசேலன், பாபாவைவிட மிகப் பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது என்றால், நிச்சயம் தமிழக மக்களுக்கு ரஜினி மேல் ஏற்பட்ட கோபம் தான் என்றே சொல்லலாம்.
 
இதன் மூலம், தன் ரசிகர்களால் மட்டுமே வெற்றியைத் தர இயலாது; ஒட்டு மொத்த மக்களால்தான் தரமுடியும் என்பதை நிச்சயம் ரஜினி புரிந்து கொண்டிருப்பார்.
 
எந்த விசிலும், கைதட்டலும், கூச்சலும் இல்லாமல், ஹவுஸ்புல் ஆகாத தியேட்டரில், ரஜினி படம் பார்த்தது இதுவே முதல்முறை.
 
விமர்சகர்: உழவன் http://tamizhodu.blogspot.com
 

1 comments:

அமர்நாத் said...

ரஜினி தான், பட பூஜையின் போதே, தன்னுடைய பங்கு வெறும் 25% என்று சொல்லிவிட்டாரே. இன்னும் ரஜினி படம் என்றால் எப்படி?

//வடிவேலு அவர் பெயரைக் காப்பாற்றிவிட்டார் என்று நிச்சயமாகச் சொல்லலாம்//

நான் கண்டிப்பாக சொல்ல மாட்டேன்.

//பாபாவை விட நன்றாகவே உள்ள குசேலன்//

ஆம்.