Friday, July 18, 2008

அமீருக்கு என்ன ஆச்சு...!

  

சக்கரகட்டி இசை வெளியீட்டுவிழா. இடம் சத்யம் சினிமாஸ். ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தின் இசை வெளியீடு முடிந்ததும் வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டார் அமீர்.

அவர் பேசுகையில்,

இந்தப் படத்துக்கு நிஜமான ஹீரோ ரஹ்மான்தான் என்பது இந்த இரு பாடல்களைக் கேட்டவுடனே தெரிந்துவிட்டது. இந்தியாவே, ஏன் உலகமே வியந்து பார்க்கும் கலைஞன் ரஹ்மான். அவர் உலகமெல்லாம் பறந்துகொண்டே இருக்கிறார். அவர் இசைக்கு அப்படியொரு தேவை உலகம் முழுக்க...

ஆனால் பக்கத்திலேயே இருக்கிறேன், என்னால் அவரிடம் போக முடியவில்லை. காரணம், நாம் போய் அவர் வீட்டுக் கதவைத் தட்டினால் நம்மைச் சேர்த்துக் கொள்வாரா, நம்மிடம் பேசுவாரா... நம் படத்துக்கெல்லாம் இசையமைக்க ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம்தான், என்று ஏக்கத்துடன் பேசிவிட்டு ரஹமானுக்குப் பக்கத்து இருக்கையில் போய் அமர்ந்தார்.

உடனே ரஹ்மான், நீங்கள் எப்போதும் என் வீட்டுக்கு வரலாம். யாரும் எளிதில் அணுகக் கூடிய தூரத்தில்தான் என் வீடு உள்ளது, நானும்தான், என குறும்பாகக் கூறிச் சிரிக்கிறார்.

மூன்று தினங்களுக்குப் பிறகு, வேறொரு மேடை.

சரோஜா படத்தின் இசை வெளியீட்டு விழா.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படத்தின் இசையை, இந்தியாவின் நெம்பர் ஒன் இசையமப்பாளர் ரஹ்மான் வெளியிடுகிறார். அவருடன் அதே மேடையில் நின்று அவருக்கு கைகுலுக்குகிறார் அமீர்.

சிறப்பாக இசையமைத்திருந்த யுவனை மனதார வாழ்த்திவிட்டு ரஹ்மான் சென்றுவிட, சிறிது நேரம் கழித்து மைக் பிடிக்கிறார் அமீர்.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் ரஹ்மான்தான். அவர் ஒரு இசைப்புயல்தான். உலகம் முழுவதும் பிரமிப்பை ஏற்படுத்திய இசையமைப்பாளர்தான். அவர் இப்போது இந்த மண்டபத்தில் இல்லை. என்றாலும் அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.

அவர் வணிக ரீதியான படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார். உணர்வு ரீதியான படங்களுக்கு இசையமைக்காதது ஏன்? 40 வருடங்கள் அனுபவமுள்ள கே.பாலசந்தர், 30 வருட அனுபவம் உள்ள பாரதிராஜா போன்றவர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார்.

என்னைப் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கு ஏன் இசையமைப்பதில்லை? அவருக்கு நாங்களெல்லாம் இயக்குநர்களாகவே தெரியவில்லையா, அவரது அங்கீகாரம் கிடைக்கும் அளவுக்கு நாங்கள் இன்னும் இயக்குநர்களாக வளரவில்லையா... எங்களை டைரக்டராகவே பரிசீலனை செய்யாததற்கு என்ன காரணம்? இது தெரிந்தாக வேண்டும் என்றார்.

பின்னர், என் வாழ்நாளில் யுவன் ஷங்கர் ராஜாவைப் போன்ற நல்லவரைப் பார்த்தே இல்லை. அத்தனை அற்புதமான இளைஞர். நல்ல மனிதர். அவரது குழுவில் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்பதே பெருமையாக உள்ளது என்றார்.

தன்னுடைய ஒரு படத்துக்காவது ரஹ்மான் இசை அமைக்க மாட்டாரா என்ற ஏக்கத்தை, தனக்கு இப்போது நல்ல இசையைக் கொடுத்து வரும் யுவன் ஷங்கர் ராஜாவின் மேடையிலேயே வெளிப்படுத்தியது, யுவனை மட்மல்ல, விழாவுக்கு வந்திருந்த பலரையும் நெளிய வைத்தது.

என்ன ஆச்சு அமீர்?

 

 

0 comments: